தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் உலகம் நவம்பர் புரட்சியின் சமகால வெற்றிப் பயணம்!

1 hour before
மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் உலகம்  நவம்பர் புரட்சியின் சமகால வெற்றிப் பயணம்!

மாற்றத்தை நோக்கிப் பயணிக்கும் உலகம் நவம்பர் புரட்சியின் சமகால வெற்றிப் பயணம்!

மானுட சமூகம் காலங்காலமாக ஒடுக்குமுறையிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுதலை பெறும் வேட்கை கொண்டதாகவே இருந்து வந்துள்ளது. முதலாளித்துவ சமூகமோ பெரும்பான்மை மக்களுக்குச் சுரண்டல், பசி, பட்டினி, ஏற்றத்தாழ்வு போன்ற தீராத நோய்களையே அளித்து வந்துள்ளது. இந்தச் செயற்கை நுண்ணறிவுக் காலத்திலும் உற்பத்தி சமூகமயமாகிறது; ஆனால் செல்வம் பெருநிறுவனங்களிடம் குவிகிறது. இந்த நீண்ட துயர வரலாற்றைத் திருப்பிப் போட்ட பெருமை ரஷ்யாவில் நிகழ்ந்த நவம்பர் புரட்சிக்கு உண்டு. முதலாளித்துவ முரண்பாடுகள் இடைவிடாமல் மக்களை மாற்றத்தை நோக்கி இயக்குகின்றன. அந்த உண்மையின் வெளிப்பாடே, 1917 நவம்பர் 7 அன்று ரஷ்யாவில் மலர்ந்த பாட்டாளி வர்க்கப் புரட்சி.

அமெரிக்கத் தேர்தல்: மாற்றத்தை நோக்கிய தேடல்

அமெரிக்கா, பிரேசில், செர்பியா ஆகிய நாடுகளில் வலதுசாரிகள் சந்தித்த தோல்விகளிலும், இடதுசாரிகளின் முன்னேற்றத்திலும் முதலாளித்துவம் மீதான ஆவேசமே எதிரொலிக்கிறது. அன்று முதலாளித்துவத்தைத் தூக்கியெறிய வேண்டும் என்று ரஷ்ய மக்கள் தீர்மானகரமான முடிவுக்கு வந்தனர். அதே முடிவை எடுக்க இன்று உலக மக்களை முதலாளித்துவ முரண்பாடுகள் தூண்டுகின்றன.

மக்கள் எப்போதும் மாற்றத்தை நோக்கியே இயங்குகிறார்கள் என்பதற்கு இன்றைய அமெரிக்கச் சூழல் சான்று. 2026 நவம்பர் 3 இடைக்காலத் தேர்தலில், குடியரசுக் கட்சி 53–47 என்ற செனட் பெரும்பான்மையுடன் களமிறங்கியது. ஆனால் ஜனநாயகக் கட்சி குறைந்தது ஏழு குடியரசுக் கட்சி செனட் இடங்களைக் கைப்பற்றி, இரு அவைகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. கன்சாஸ், அயோவா, டெக்சாஸ், ஓஹையோ, மெய்ன், வட கரோலினா, தென் கரோலினா ஆகிய மாநிலங்களில் இந்த இடங்கள் கிடைத்தன. கன்சாஸில் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக்குப் பின் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் செனட்டுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2024இல் டிரம்ப் 13 சதவீதப் புள்ளி வித்தியாசத்தில் வென்ற அயோவாவிலும் ஜனநாயகக் கட்சி செனட் இடத்தைப் பிடித்தது. குடியரசுக் கட்சியின் கோட்டையான டெக்சாஸில் ஜேம்ஸ் தலாரிகோ வென்றார். ஜார்ஜியா, ஓஹையோ, அயோவா, டெக்சாஸ் ஆகிய நான்கு மாநில ஆளுநர் பதவிகளையும் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியது.

இளைய தலைமுறையின் கோபமும் சோசலிச அரசியலும்

இந்த எழுச்சியின் பின்னணியில் இருப்பவை மக்கள் சந்திக்கும் பொருளாதார நெருக்கடிகளே. வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பில், ஏறத்தாழ 90 சதவீதம் பேர் பெருகிவரும் வாழ்க்கைச் செலவை முக்கியக் காரணியாகக் கூறினர்; சுமார் 75 சதவீதம் பேர் விலை உயர்வுக்கு டிரம்ப்பைக் குற்றம் சாட்டினர். நாட்டின் நிலை குறித்துப் பெரும்பாலான வாக்காளர்கள் கடும் கோபமும் அதிருப்தியும் கொண்டுள்ளனர். ஈரான் போரும், அரசு ஊழல் குறித்த கவலையும் இதனுடன் சேர்ந்துள்ளன. 30 வயதுக்குட்பட்ட வாக்காளர்களில் பத்தில் ஏழு பேர் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்தனர். வாழ்க்கை நெருக்கடியைச் சந்திக்கும் இளைய தலைமுறை மாற்றத்தைத் தேடுவதையே இது காட்டுகிறது.

மார்க்சிய சோசலிசப் பார்வை இல்லையென்றாலும், சோசலிச அரசியலின் தாக்கம் பிரச்சாரத்தில் தெரிந்தது. மிச்சிகனில் அமெரிக்க ஜனநாயக சோசலிஸ்டுகள் அமைப்பின் (DSA) ஆதரவு பெற்ற மருத்துவரும் பொதுச் சுகாதார நிபுணருமான அப்துல் எல்-சையத் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆகஸ்டில் நடந்த கட்சி முதன்மைத் தேர்தலில், செனட் ஜனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷுமர் உள்ளிட்டோர் ஆதரித்த வேட்பாளரை, ‘அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு’ என்ற கோரிக்கையுடன் ஒரு சதவீதத்துக்கும் குறைவான வித்தியாசத்தில் வென்றவர் அவர். பெருநிறுவனப் பண ஆதிக்கத்துக்கு எதிரான அவரது பிரச்சாரம் இளம் வாக்காளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

நவம்பர் புரட்சியும் பாட்டாளி வர்க்க எழுச்சியும்

இந்த மாற்றங்கள் ரஷ்யப் புரட்சி சாதித்த மாற்றங்களோடு ஒப்பிடக் கூடியவை அல்ல. எனினும், மக்களின் எதிரி முதலாளித்துவச் சுரண்டல், அதிலிருந்து மக்கள் மீள வேண்டும் என்ற நவம்பர் புரட்சியின் பாடங்கள் இன்றும் உயிர்த்துடிப்புடன் இருப்பதைச் சமகால நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. புரட்சியின் 109ஆம் ஆண்டு நிறைவில், அது ஏற்படுத்திய நம்பிக்கையையும் படிப்பினைகளையும் புதிய தலைமுறை உணர வேண்டியது அவசியம்.

1871இல் பாரீஸ் கம்யூன் 72 நாட்கள் உழைக்கும் மக்களின் ஆட்சியாக நிலைத்தது. பின்னர் வெர்சாய் படைகள் அதை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தன. “ஒழுங்கு திரும்பியது” என்று ஐரோப்பிய முதலாளித்துவம் நிம்மதியடைந்தது. மேலோட்டமாக அமைதி நிலவினாலும், அடித்தளத்தில் வர்க்க முரண்பாடுகள் கொதிநிலையில் இருந்தன. 1905இல் முதல் ரஷ்யப் புரட்சி வெடித்தது. முதல் உலகப் போரின் பேரழிவு, பசி, ஜார் ஆட்சியின் சீரழிவு ஆகியவற்றால் 1917 பிப்ரவரியில் ஜார் ஆட்சி வீழ்ந்தது. ஆனால் அதன்பின் வந்த தற்காலிக அரசு போரைத் தொடர்ந்தது; நிலத்தைப் பகிரவில்லை; மக்களின் கோரிக்கைகள் நிறைவேறவில்லை.

பாரீஸ் கம்யூனின் தோல்வியிலிருந்து லெனினும் போல்ஷ்விக்குகளும் பாடம் கற்றனர்: பழைய அரசு இயந்திரத்தை அப்படியே பயன்படுத்த முடியாது. ‘அமைதி, நிலம், ரொட்டி’ என்ற முழக்கத்துடன், தொழிலாளி–விவசாயி வர்க்கக் கூட்டணியை அமைத்து போல்ஷ்விக் கட்சி மக்களை அணிதிரட்டியது. 1917 நவம்பர் 7 அன்று பெட்ரோகிராடில் தொழிலாளர்களும் படைவீரர்களும் மாலுமிகளும் அதிகாரத்தைக் கைப்பற்றினர்; புதிய வரலாறு தொடங்கியது. அதிகாரம் சோவியத்துகளுக்கே என்று சோவியத்துகளின் மாநாடு அறிவித்தது. மறுநாளே அமைதிக்கான ஆணையையும் நிலத்துக்கான ஆணையையும் லெனின் வெளியிட்டார்; நிலப்பிரபுக்களின் நிலம் உழவர்களுக்கு வழங்கப்பட்டது. ஒழுங்கமைந்த கட்சித் தலைமை, மக்களின் உடனடித் தேவைகளோடு இணைந்த திட்டம், சோவியத்துகள் என்ற மக்கள் அதிகார வடிவம் ஆகியவை இணைந்தபோது மக்கள் எழுச்சி சோசலிச வெற்றியானது. வரலாற்றில் முதன்முறையாகச் சுரண்டப்பட்ட வர்க்கம் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றிப் புதிய சமூகத்தைக் கட்டத் தொடங்கியது.

வரலாற்றுப் பாடங்களிலிருந்து கற்க வேண்டியது

சோவியத் ஒன்றியம் வீழ்ந்தாலும், அதன் படிப்பினைகள் இன்றும் மானுடத்துக்கு வழிகாட்டுகின்றன. கள எதார்த்தம் சாதகமாக உள்ள இன்றைய நிலையில், இடதுசாரி ஜனநாயகச் சக்திகள் செய்ய வேண்டியது என்ன என்பதே முக்கியக் கேள்வி.விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற அன்றாடப் பொருளாதாரப் பிரச்சனைகளே மக்களை மாற்றத்தை நோக்கித்தள்ளுகின்றன. எனவே வலதுசாரிகளின் கலாச்சார, மதரீதியான திசைதிருப்பல்களை முறியடித்து, பொருளாதாரப் பாதிப்புகளை முன்னிறுத்திய திரட்டலும் பிரச்சாரமும் தேவை.

தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட வர்க்க அமைப்புகள், மாணவர், வாலிபர் அமைப்புகள், சமூகப் போராட்ட இயக்கங்களை அரசியல் மாற்றத்தை நோக்கி முன்னேற்றும் முயற்சிகள் இடையறாது தொடர வேண்டும்.

செர்பியாவில் ஊழலுக்கு எதிரான மாணவர்களின் வீதிப் போராட்டங்கள் அரசையே பதவி விலகச் செய்ததைப் போல, மக்கள் கோபத்தை ஒருங்கிணைக்க வீதிப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். திரட்டலுக்கும் பிரச்சாரத்துக்கும் சமூக ஊடகக் கருவிகளைத் திறம்படப் பயன்படுத்த வேண்டும்.

மாற்றத்தை நோக்கித் திரும்பும் மக்களின் கரங்களே வரலாற்றின் திசையைத் தீர்மானிக்கின்றன. நவம்பர் புரட்சி ஏற்றிவைத்த அணையா விளக்கின் ஒளியில், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைக்கும் எதிரான மக்களின் வெற்றிப் பயணம் தொடரும்!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.