தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரைப்பார்வை: நூறு சாமி திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்! - எஸ்.வி.வேணுகோபாலன்

28 Jun 2026, 10:21 pm
திரைப்பார்வை: நூறு சாமி திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்! -  எஸ்.வி.வேணுகோபாலன்

திரைப்பார்வை: நூறு சாமி திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்! - எஸ்.வி.வேணுகோபாலன்

“காதல் சுரக்கின்ற நெஞ்சத்திலே கெட்ட கைம்மையைத் தூர்க்காதீர்! - ஒரு கட்டழகன் திருத் தோளினைச் சேர்ந்திடச் சாத்திரம் பார்க்காதீர்!” – பாவேந்தர் பாரதிதாசன் கணவனைப் பறிகொடுத்துவிடும் பெண்ணின் மனசை யார் அறிவார்? ‘நூறு சாமி’ திரைப்படம் அதற்கான ஓர் அருமையான முயற்சி. கணவன் மரித்துப் போனால் அவனை எரிக்கும் சிதையிலேயே மனைவியையும் சேர்த்து எரிக்கும் ‘சதி’ கொடுமைக்கு எதிரான சட்டம் வந்தபின்னும், ஓர் இளம் விதவை தன் வாழ்நாள் முழுக்க வேறு எத்தனையோ சமூகச் சதிகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு மிடறு கூட முழுதாக உறிஞ்சி இராத வாழ்க்கையை, ஓர் இளம் விதவை உலர்ந்துபோன உதடுகள் பார்த்திருக்க, எச்சிலையே விழுங்கி வாழ்ந்து வெந்து தணிந்துவிட வேண்டுமா? கோரிக்கையற்றுக் கிடக்க வேண்டுமா வேரில் பழுத்த பலா? ‘மறுமணம்’ என்கிற சொல் என்ன கெட்ட வார்த்தையா என்ற கேள்வியைச் சமூகத்தின் முன் எழுப்புகிறது இத்திரைப்படம்.

உணர்வுப் போராட்டமும் திரைக்கதையும்

திருமணம் மற்றும் இளமை வயதில் இருக்கும் மகன்கள், தங்களது விதவைத் தாய்க்கு மறுவாழ்க்கை தேவை என்று உணர்கிற இடம் ஒரு போராட்டம். அந்தக் கணத்தில், அப்படியான நினைப்பில் இருந்து விடுபட்டுவிட்ட கொதிப்பில் அதை மறுதலிக்கும் தாயின் உளவியல் மற்றும் உணர்வியல் போராட்டம், புறவுலகில் இதற்கு எதிரான குரலை முறியடிக்க வேண்டிய இறுதிக்கட்ட போராட்டம் என இவற்றை அருமையான முறையில் திரைக்கதையாக்கி வழங்கி இருப்பது இயக்குநர் சசியின் வெற்றி. வெளியூரில் படிக்கும் மகனோடு விதவைத் தாய் கிராமத்தில் நடந்து போகையில், எப்போதும் அவள் மீது ஒரு கண் வைத்திருக்கும் உள்ளூர் பிரமுகர் பச்சைப்பெருமாள், “பாஸ்கர், உங்க வூட்ல நேத்து ராத்திரி பதினோரு மணிக்கு லைட் எரிஞ்சுதே” என்று கேட்கும் பேச்சிலுள்ள அருவருப்பையும் தாயின் ரணத்தையும் மகன் ஆரம்பத்தில் அறிவதில்லை. இரவு உறக்கத்தில் எலி புகுந்து பாத்திரம் உருட்டும் சத்தம் கேட்டு விளக்கு போட்டுப் பார்த்தால், “என்னென்ன கேள்வி கேட்கிறாங்க” என்று பின்னர் ஒரு காட்சியில் குமுறுகிறாள் அந்தத் தாய். எலி பாத்திரங்களை மட்டுமே உருட்டிவிட்டுப் போகிறது. ஆனால், சபலத்தோடு இராப்போக்குகளில் குடிசைக்கு வெளியே இருந்து அவளை நோக்கி வந்து விழும் ரகசியக் காம அழைப்புகள், அவளது நிம்மதியற்ற வாழ்க்கையின் ஓய்வு நேரத்தையும் உறக்கத்தையும் பறித்துப் போகின்றன. “விதவைக்குத்தான் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறதே, என்ன கேடு” என்னும் பச்சைப்பெருமாளுக்கு, “சாகிற வரைக்கும் ஆயிரம் ரூபாயை வைத்துக் கொண்டு வேறு வாழ்க்கையை யோசிக்காமல் இருக்க வேண்டுமா?” என்று பதிலடி கொடுக்கிறாள் அவள். எதிர்ப்புகளால் தன் மனத்தின் மூலையில் முகிழ்த்த கனவு ஆரம்பத்தில் கருகிப்போனாலும், காலம் மகனைப் பக்குவப்படுத்துகிறது. அடியும் உதையும் வலியும் அன்புமாகத் தம்பியையும் உணர வைத்துத் தாய்க்கு ஒரு வரன் தேட முடிவெடுக்கும் கட்டம் முக்கியமானது. அதல பாதாளக் கிணற்றிலிருந்து தன்னை மீட்டெடுத்த தோழமை மிக்க பெண்மணியின் மூலமே, ஒரு சிற்றூரில் எல்லா எதிர்ப்புகளையும் மீறி அந்த மறுமணப் புரட்சி சாத்தியமாகிறது.

சாதியும் பெண்ணடிமைத்தனமும்

செல்வியின் அண்ணன் குறுக்கீடும், “நாற்பத்து மூணு வயசாச்சு, அவளுக்கு இன்னும் அடங்கலடி” என்று பெற்ற தாயே மகளைக் கொச்சையாகப் பேசுவதும் கொடுமையின் உச்சம். அந்தத் தகாத வசவுக்கு உடனடி பதிலடி கொடுக்கிறாள் செல்வி. இந்தக் கட்டத்தில், அண்ணன்காரனின் முன்னெடுப்பில் ஆணவக்கொலை நோக்கி மொத்தக் குடும்பமும் சீறி எழுவது திரையரங்கை அதிர வைக்கும் காட்சி. கைக்குழந்தையோடு வரும் இளம் விதவை ஒருத்தி, தன்னைவிட வயது மூத்த விதவையிடம், “இதெல்லாம் சமூகம் ஏற்றுக் கொள்ளாது, வேண்டாம்க்கா” என்று சொல்ல நேர்வது சமூகக் கட்டமைப்பின் கோர முகம். பச்சைப்பெருமாள் தன் கூட்டாளிகளிடம், “சாதி, மரபு எல்லாத்தையும் காப்பாத்தற பொறுப்பை நாம பெண்களிடம் தானே கொடுத்திருக்கோம்” என்று சொல்லுமிடம், இன்றும் பெண்களைச் சுற்றியிருக்கும் ஆணாதிக்க வேர்களை அம்பலப்படுத்திக் காட்டுகிறது. எல்லாம் மீறி, மனைவியை இழந்த ஒருவரை இந்த விதவைத் தாய் நேரில் பார்த்துப் பேசி, பழைய கசப்புகள் யாவும் மறந்து இதழ் மலர சிரிக்கும் இறுதிக்காட்சிகள் கவித்துவத்தின் உச்சம். அவளது மூத்த மகன், தன் தாய் தேர்வு செய்திருக்கும் மனிதரை ‘அப்பா’ என்று விளிக்கும் நொடியில் அரங்கமே நெகிழ்கிறது.

அசாத்திய நடிப்பும் ஆக்கமும்

விதவைத் தாயாக ஸ்வாசிகா அசாத்திய நடிப்பை வழங்கி இருக்கிறார். எளிய உழைப்பாளியாக, வெப்பப் பெருமூச்சிலேயே வெந்து போகும் பாத்திரத்தை வியக்கத்தக்க வகையில் சுமந்துள்ளார். பிள்ளைகளிடம் பொழியும் பாசமும், கயவர்களிடம் அஞ்சாது எதிர்கொள்ளும் வெஞ்சினமும், எதிர்பாராத காதலுக்குள் தன்னை ஒப்புக்கொடுக்கும் நெகிழ்ச்சியுமாகப் படம் முழுக்க விருதுகளை அள்ளித் தரும் நடிப்பு. செல்வியைக் கைப்பிடிக்கும் ஏழுமலையாக விஜய் ஆண்டனி, மிகச் சுருக்கமான கால வரையறைக்குள் மலரும் காதலைக் கொண்டாட்டமாகக் கடத்தியிருக்கிறார். மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி மற்றும் பாலாஜி சக்திவேல், கருணாஸ், லிஜோ மோல் ஜோஸ் என அனைத்துக் கலைஞர்களும் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். பாலாஜி ஸ்ரீராமின் இசையில் பாடல்களும், தர்ஷன் கிர்லோஷின் ஒளிப்பதிவும் உணர்வுகளுக்கு வலுசேர்க்கின்றன. குறிப்பாக, பன்றியின் துரத்தலில் செல்வி கிணற்றில் விழும் காட்சியும், கருணாஸ் கழுத்தை நெரிக்கும் காட்சியும் படத்தொகுப்பின் நேர்த்திக்குச் சான்றுகள். பெண்களே பெண்களுக்கு எதிரி என்கிற வழக்கமான தவறான பார்வையை முன்வைக்காது, கிராமத்தில் செல்வியின் பக்கத்து நியாயத்திற்காக வாதாடும் சில பாத்திரங்களையும் இயக்குநர் பேசியிருக்கலாம். ‘சொல்லாமலே’, ‘பூ’ போன்ற சிறந்த படங்களைத் தந்த இயக்குநர் சசியின் ‘நூறு சாமி’, நிச்சயம் அவரது முக்கியப் படைப்பாக இடம்பெறும். இக்கதை மொத்தமும் ஓர் உண்மைக் கதையைத் தழுவி படைப்பாக உருவானது என்பதை இயக்குநர் நிறைவாகக் காட்சிப்படுத்துகையில் ரசிகர்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் பிடிக்கிறது. ‘விதவா மறுவிவாகம்’ பற்றிய தனது சிந்தனையில் மகாகவி பாரதி அன்று ஆவேசமாக எழுதினார். இந்த நூற்றாண்டிலும் கூட நிலைமைகள் மாறிவிடவில்லை என்பதைச் சமூகத்தின் தலையிலடித்து விவாதிக்கத் தூண்டுகிறது ‘நூறு சாமி’.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.