நூலாற்றுப் படை
yesterday

நூலாற்றுப் படை

எளிய வழியில் சமத்துவக் கோட்பாட்டைப் புகட்டும் தத்துவார்த்த ஆயுதம்! - எஸ். பாலா

“மார்க்சியம் என்பது புரிந்து கொள்வதற்கு மிகக் கடினமானது என்ற எதிரிகளால் பரப்பப்பட்ட கட்டுக்கதையை” உடைத்தெறிந்து, மார்க்சியத்தின் அடிப்படை சிந்தனைகள் எவ்வளவு எளிமையானவை என்பதை விளக்குகிறது கிரிஸ் ஹார்மேன் எழுதிய ‘மார்க்சியம் எவ்வாறு இயங்குகிறது?’ (How Marxism Works) என்னும் நூல். சிந்தன் புக்ஸ் வெளியீடாக வெளிவந்துள்ள இந்நூல், மார்க்சியத்தைக் கற்றுக்கொள்வதற்குச் சிறப்பு அறிவோ, பட்டங்களோ தேவையில்லை; மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் கடும் சுரண்டலையும், பொருளாதார நெருக்கடியையும் கொண்டே அதனை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதை உணர்த்துகிறது.

சமூக மாற்றத்திற்கான வழியைக் காட்டும் தத்துவத்தின் அவசியத்தை எடுத்துரைக்கும் இந்நூல், 1842-ல் இங்கிலாந்து தொழிலாளி வர்க்கம் நடத்திய உலகின் முதல் பொது வேலைநிறுத்தப் பின்னணியில் காரல் மார்க்ஸ் மற்றும் பிரெடரிக் ஏங்கெல்ஸ் ஆகியோரின் சிந்தனைகள் எவ்வாறு உருப்பெற்றன என்பதை விவரிக்கிறது. உற்பத்தி முறைகளும், பகிர்வு முறைகளும் மாறும்போது சமூக அமைப்பும், வர்க்க உறவுகளும் எவ்வாறு மாறுகின்றன என்பதை வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தின் வழியே அறிவியல் பூர்வமாகத் தெளிவுபடுத்துகிறது. முதலாளித்து வத்தின் தோற்றம், சுரண்டல், உபரி மதிப்பு, உழைப்பின் மதிப்பு மற்றும் அது சந்திக்கும் உள்ளார்ந்த பொருளாதார நெருக்கடிகள் குறித்து ஆழமாக ஆராயும் நூலாசிரியர், முதலாளித்துவம் தனக்குத்தானே சவக்குழி தோண்டிக் கொள்ளும் வகையில் தொழிலாளி வர்க்கத்தை உருவாக்குகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறார். ஆளும் வர்க்கம் அரசு அதிகாரத்தையும், நாடாளுமன்ற அமைப்பையும் பயன்படுத்தி எத்தகைய அடக்குமுறைகளை மேற்கொள்கிறது என்பதையும், முதலாளித்துவக் கருத்துக்களின் மேலாதிக்கத்தை மீறித் தொழிலாளர்கள் எவ்வாறு புரட்சிகர உணர்வு பெற்ற வர்க்கமாக ஒன்றிணைகிறார்கள் என்பதையும் நூல் படம்பிடிக்கிறது.

மேலும், ஏகாதிபத்தியம், பெண்ணியம், புரட்சிகரக் கட்சியின் கட்டமைப்பு மற்றும் ஜனநாயகத் தன்மை குறித்து விரிவாகப் பேசும் இந்நூலில், ரஷ்ய இளைஞர் கழக மாநாட்டில் லெனினும், இந்திய மாணவர் சங்க மாநாட்டில் தோழர் பி. சுந்தரய்யாவும் ஆற்றிய உரைகள் நடைமுறை உதாரணங்களாகக் கூடுதல் இணைப்பாகச் சேர்க்கப்பட்டுள்ளன. “புரட்சிகரமான தத்துவம் இல்லாமல் புரட்சிகர நடைமுறை இல்லை” என்ற லெனினிய நெறிக்கு ஏற்ப, மார்க்சியத் தத்துவத்தையும் அதன் நடைமுறையையும் மிக எளிமையாகப் புரிந்து கொள்ள உதவும் ஓர் அத்தியாவசியமான தத்துவார்த்தக் வழிகாட்டி இப்புத்தகமாகும்.

மார்க்சியம் எவ்வாறு இயங்குகிறது?ஆசிரியர்: கிரிஸ் ஹார்மேன்வெளியீடு: சிந்தன் புக்ஸ்பக்கங்கள்: 196 | விலை: ₹250 தொடர்புக்கு:+91-9445123164

இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல! - எம்.ஜே.பிரபாகர்

சமூக அக்கறையும் அறிவியல் பார்வையும் ஒன்றிணைந்த எழுத்துகளுக்குச் சொந்தமானவர் எழுத்தாளர் சிதம்பரம் ரவிச்சந்திரன். இவர் எழுதியுள்ள “வாழ்வோம் வாழ விடுவோம்” நூல், மனித மையவாத உலகத்தில் ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட சக உயிரினங்களின் குரலாகவும், இயற்கையின் காப்பரணாகவும் ஒலிக்கிறது. பட்டறிவு பதிப்பக வெளியீடாக வந்துள்ள இந்நூலில் 25 மிகச் சிறந்த சூழியல் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. பேராசிரியர் விஜயகுமார் அவர்களின் ஆழமான அணிந்துரை இந்நூலுக்குக் கூடுதல் சிறப்பு சேர்க்கிறது.

இவ்வுலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமானதல்ல; சகல ஜீவராசிகளுக்கும் இங்கு வாழ சம உரிமை உண்டு என்ற உயரியதத்துவத்தை மையமாக வைத்து இந்நூலின் கட்டுரைகள் வடிக்கப் பட்டுள்ளன. மனிதர்களின் நிலப்

பரப்பு விரிவாக்கத்தினால் வாழ்விடங்களை இழந்து நிற்கும் காட்டுயிர்கள் மற்றும் பறவைகளின் அவல நிலை, இயற்கைச் சூழல் சிதைவு, காடுகளின் அழிப்பு மற்றும் மனித-விலங்கு மோதல்கள் குறித்த பல அத்தியாவசிய உண்மை களை அறிவியல் பூர்வமாகவும் எளிய நடையிலும் இந்நூல் வாச கர்களுக்குக் கொண்டு சேர்க்கிறது.

இயற்கையின் சங்கிலித் தொடரில் ஒவ்வொரு சிறிய உயிருக்கும் எவ்வளவு பெரிய பங்குண்டு என்பதை விளக்கி, மரங்கள், காடுகள் மற்றும் நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. வெறும் புள்ளிவிவ ரங்களாக இல்லாமல், சூழியல் பாதுகாப்பை ஒரு தார்மீகக் கடமையாக வாசகர்களின் மனதில் விதைக்கும் வகையில் கட்டுரைகள் கட்டமைக்கப்பட்டுள்ளன.

அறிவியல் மற்றும் சூழியல் சார்ந்த கடினமான கோட்பாடுகளை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதியிருப்பது ஆசிரியரின் பலம். காடழிப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் உலக வெப்பமயமாதல் போன்ற மாபெரும் சூழியல் அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டுள்ள வேளையில், இயற்கையைநேசிப்பவர்கள், மாணவர்கள் மற்றும் சூழியல் ஆர்வலர்கள் கட்டாயம் வாசிக்க வேண்டிய விழிப்புணர்வுப் பெட்டகமாக இந்நூல் திகழ்கிறது.வாழ்வோம் வாழ விடுவோம்ஆசிரியர்: சிதம்பரம் ரவிச்சந்திரன்வெளியீடு: பட்டறிவு பதிப்பகம், மதுரை.விலை: ₹160/- தொடர்புக்கு: 0452 2302566

குழந்தைகளைப் புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்குமான நூல்!

குழந்தைகளுடன் இயங்கும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் படைப்பாளிகள் அனைவரும் வாசிக்க வேண்டிய மிக முக்கியமான கையேடாகும் எழுத்தாளர் இரா. மேரி ஜான் எழுதி, ‘புக் ஃபார் சில்ட்ரன்’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள “சிறார் உலகம்”. குழந்தையின் முதல் ஆண்டு, இரண்டாம் ஆண்டு, மூன்று மற்றும் நான்காம் ஆண்டுகள், ஐந்தாம் ஆண்டு மற்றும் குழந்தையின் ஐந்து முதல் பன்னிரண்டு வரையுள்ள ஆண்டுகள் என 5 விரிவான அத்தியா யங்களைக் கொண்ட இந்த நூல், குழந்தை உளவியல், அவர்களின் கற்பனைத் திறன் மற்றும் வாசிப்பு ஆர்வம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன காலத்தில் டிஜிட்டல் ஊடகங்களின் ஆதிக்கத் தால் குழந்தைகள் வாசிப்புப் பழக்கத்தி

லிருந்தும் இயற்கையான சூழலிலிருந்தும் விலகிச் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், குழந்தை களை எவ்வாறு ஆக்கப்பூர்வமான வழிகளில் ஈடுபடுத்துவது, அவர்களின் உலகத்தை நாம் எந்தக் கோணத்தில் புரிந்துகொள்வது என்பது குறித்த ஆழமான வழிகாட்டுதல்களை இந்நூல் வழங்குகிறது. பெரியவர்களின் எண்ணங்களைச் சிறார் மீது திணிக்காமல், அவர்களின் சொந்த உலகத்திற்குள் சென்று தேவைகளையும் உளவியலையும் புரிந்துகொள்ள இந்நூல் தூண்டுகிறது.

குழந்தைகளுக்கு எத்தகைய புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்வாசிப்பை எப்படி ஒரு கொண்டாட்டமாக மாற்றலாம் என்பது குறித்த ஆலோச னைகள் இதில் மிகவும் பயனுள்ளவை. மேலும், அவர்களின் கற்பனைத் திறனை மேம்படுத்தும் கலை, கைவினைப் பணிகள் மற்றும் எழுத்து முயற்சிகளை எவ்வாறு ஊக்குவிப்பது என்பதற்கான நடைமுறை வழிகாட்டிகளும் இடம் பெற்றுள்ளன. டிஜிட்டல் யுகத்தில் குழந்தைகளுடன் தரமான நேரத்தைச் செலவிடத் திணறுபவர்களுக்கு எளிய தீர்வுகளையும் மாற்று வழிகளையும் இந்நூல் முன்வைக்கிறது.

ஆராய்ச்சி மாணவர்கள் தொடங்கி பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் வாசித்துத் தங்கள் நடைமுறை வாழ்வில் பயன்படுத்த வேண்டிய பொக்கிஷமாகத் திகழும் இந்நூல், குழந்தைகளைப் புரிந்துகொள்ளவும் அவர்களின் உலகத்தை வண்ணமயமானதாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றவும் விரும்பும் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டிய அத்தியாவசியமான திறவுகோலாகும்.

சிறார் உலகம் (சிறார் உருவாக்க கையேடு)ஆசிரியர்: இரா. மேரி ஜான்வெளியீடு: புக் ஃபார் சில்ட்ரன், சென்னை. விலை: ₹190/- தொடர்புக்கு: 9444567935

இந்திய சமூகத்தின் யதார்த்த முகத்தை வெளிச்சமிட்டுக் காட்டும் நூல்!

‘முடி திருத்துநர் தொழிற்சங் கம்’ என்பது இந்திய இலக்கியத்தின் தலைசிறந்த எழுத்தா ளர்களின் கதைகளைத் தழுவி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்த ஒரு முக்கியமான சிறுகதைத் தொகுப்பாகும். நாதன் பதிப்பக வெளியீடாக வந்துள்ள இத்தொகுப்பு, இந்திய சமூகத்தின் அடக்கப்பட்ட குரல்களையும், சாதிய கட்டமைப்பின் நிழலாடும் பக்கங்களையும் மிக அழுத்தமாகப் பதிவு செய்கிறது. இந்தியாவின் பல்வேறு மொழி ஆளுமைகளின் 5 முக்கியச் சிறுகதைகளின் தமிழ் வடிவமாக இது அமைந்துள்ளது.

இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகள் அனைத்தும் இந்தியாவின் வெவ்வேறு மாநிலங்களின் மண் வாசனையையும், அங்கு நிலவும் சமூக மற்றும் பொருளாதார முரண்பாடுகளையும் பிரதிபலிக்கின்றன. இத்தொகுப்பின் தலைப்புக் கதையான ‘முடி திருத்துநர் தொழிற்சங்கம்’ உலகப் புகழ்பெற்ற இந்திய, ஆங்கில எழுத்தாளர் முல்க் ராஜ் ஆனந்த் எழுதியதாகும். இந்திய சமூக அமைப்பில் பாரம்பரியமாக ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் மீது திணிக்கப்பட்ட தொழில்கள், அவர்கள் சந்திக்கும் அவமானங்கள், வறுமை மற்றும் அதிலிருந்து மீள அவர்கள் மேற்கொள்ளும் சின்னஞ்சிறு முயற்சிகளை இத்தொகுப்பில் உள்ள கதைகள் பேசுகின்றன.

முல்க் ராஜ் ஆனந்த் தவிர்த்து, இந்திய கிராமப்புற எதார்த்தவாதத்தின் தந்தையான முன்ஷி பிரேம்சந்த், வங்காள இலக்கியத்தின் முன்னணி ஆளுமை மாணிக் பந்தோபாத்யா, ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைக்காகப் போராடிய மகாஸ்வேதா தேவி மற்றும் பெண்களின் உளவியல் தளைகளைப் பற்றி எழுதும் மஞ்சு கபூர் ஆகியோரின் கதைகள் இதில் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

வெவ்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த கதைகள் என்றாலும், இந்தியாவின் அடிமட்ட மக்களின் துயரமும் வர்க்க-சாதிய வேறுபாடுகளும் ஒன்றுதான் என்பதை கதைகள் உணர்த்துகின்றன. மூல மொழியின் ஆன்மா கெடாமல், தமிழ் வாசகர்களுக்கு எளிதில் புரியும் வகையிலும் மொழிபெயர்ப்பாளர் எழுத்தாளர் கி. ரமேஷ் தனது எளிய மற்றும் வலிமையான நடையைக் கையாண்டுள்ளார். 86 பக்கங்களைக் கொண்டிருந்தாலும் வாசகர்களின் மனசாட்சியை உலுக்கும் மிக முக்கியமானதொரு இலக்கியத் திறவுகோல் இந்நூல்.

முடி திருத்துநர் தொழிற்சங்கம்தமிழாக்க ஆசிரியர்: கி. ரமேஷ்வெளியீடு: நாதன் பதிப்பகம், சென்னை. விலை: ₹120/- தொடர்புக்கு: 9884060274