தீக்கதிர் விரைவு செய்திகள்
28 Feb 2026, 2:29 pm

இரவு வான் பூங்கா கொல்லிமலையில் தொடக்கம்

சென்னை, பிப்.28 - நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் அரியூர் சோலைக் காட்டில் அமைக்கப்பட்ட தமிழ்நாட்டின் இரவு வான் பூங்காவை வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தார். இரவு வான் பூங்கா என்பது செயற்கை ஒளி மாசுபாட்டிலிருந்து பாதுகாக்கப்பட்ட இயற்கை பரப்பாகும். இங்கு நிலவு, நட்சத்தி ரங்கள், கோள்கள் மற்றும் பிற விண்வெளி நிகழ்வுகளை தெளிவாகக் காண முடியும். உயரமான நில அமைப்பு, அடர்ந்த காடு மற்றும் குறைந்த நகர ஒளி மாசுபாடு ஆகியவற்றால் கொல்லிமலை இயற்கையான இருள் சூழலை வழங்குவதால் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த 25.6.2024 அன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காவில் மூன்று மேம்பட்ட தொலை நோக்கிகள் மற்றும் சூரிய ஒளி மின்சார வசதி நிறுவப்பட்டுள்ளது. இந்த மையம் பகல் நேரங்களில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வானியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை ஊக்குவிக்கும். அமாவாசை நேரங்களில் மாதம் இரண்டு முதல் மூன்று முறை முழு இரவு நட்சத்திரப் பார்வை முகாம்கள் நடத்தப்படும். வனத் துறையால் போக்குவரத்து மற்றும் தங்குமிட வசதிகளும் செய்து தரப்படும். இந்த முயற்சி தமிழ்நாட்டை பொறுப்பான வானியல் சுற்றுலா தலமாக நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.

பள்ளி பொதுத் தேர்வு: கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு

சென்னை, பிப்.28 - மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்க ளில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடர்பான புகார்கள் மற்றும் சந்தே கங்களுக்கு விளக்கம் பெற கட்டுப் பாட்டு அறைகள் அமைக்கப்படு கின்றன. மார்ச் 2 ஆம் தேதி முதல் ஏப்ரல் 6 ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாட்டு அறைகள் இயங்கும். பெற்றோர் மற்றும் மாணவர்கள் 94983 83075, 94983 83076 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தேர்வு தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.

விஜயபாஸ்கர் மீதான வழக்கு விசாரணை

மார்ச் 13-க்கு ஒத்திவைப்பு புதுக்கோட்டை, பிப்.28 - முன்னாள் அமைச்சர் சி.விஜய பாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப் பேரவை உறுப்பி னராக இருப்பவர் சி. விஜயபாஸ்கர். இவர், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தார். அந்தக் காலக் கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி மதிப்பில் சொத்து சேர்த்ததாக மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜரா னார். இந்நிலையில், வழக்கு விசார ணையை மார்ச் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி க. பூர்ண ஜெயஆனந்த் உத்தரவிட்டார்.