திருச்சி விரைவு செய்திகள்
12 Mar 2026, 4:20 pm

பேராவூரணி வட்டார தலைமை ஆசிரியர்களுக்கு `புதிய பாரத எழுத்தறிவு திட்ட’ பயிற்சி முகாம்

தஞ்சாவூர், மார்ச் 12- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டார வள மையத்திற்குட்பட்ட தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு `புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம்’ குறித்த விழிப்புணர்வு பயிற்சி பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் நடைபெற்றது. இந்த பயிற்சிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் க.கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் வரவேற்றார். இப்பயிற்சியில், பள்ளியையொட்டிய குடியிருப்புப் பகுதியில் 15 வயதிற்கு மேல் உள்ள படிக்காதவர்கள் குறித்து, கணக்கெடுத்தல் மற்றும் அவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் அடிப்படை எழுத்தறிவு , எண்ணறிவு பயிற்சி வழங்குதல் குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது. இதில், ஆசிரியர் பயிற்றுநர் சாஜிதாபானு பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

உலமாக்கள் இருசக்கர வாகனம் வாங்க ரூ.50 ஆயிரம் மானியம்

தஞ்சாவூர், மார்ச் 12 - தமிழ்நாட்டில் உள்ள பள்ளி வாசல்களில் பணியாற்றும் உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 வயது முதல் 60 வயது வரை உள்ள உலமாக்களுக்கு இருசக்கர வாகனம் வாங்க மானியத் தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரம் ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்களில் பணியாற்றும் பேஷ்இமாம்கள், ஆலிம்கள், அரபி ஆசிரியர்கள், ஆசிரியைகள் உள்ளிட்ட உலமாக்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரு சக்கர வாகனத்திற்கான மானியம் பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையனிர் நல அலுவலரிடம் படிவத்தினை பெற்று உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து ஒப்புதல் பெற்ற பின்னரே பயனாளி இரு சக்கர வாகனம் வாங்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ண ப்பங்களை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் (அறை எண்: 154) 13.3.2026 தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்” என்றார்.

ஆற்றில் மிதந்த முதியவர் உடல் மீட்பு

தஞ்சாவூர், மார்ச் 11- தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டை பகுதியில் கல்யாண ஓடை ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றில் செவ்வாய்க்கிழமை மதியம் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் உடல் மிதந்துள்ளது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாலுகா காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் காவல்துறையினர் ஆற்றில் பிணமாக மிதந்த முதியவரின் உடலை மீட்டனர். பின்னர் முதியவர் உடலை கூராய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து துறையூர் கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரின் பேரில் தஞ்சை தாலுகா காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மீன் மார்க்கெட் கட்டடப் பணியை விரைந்து முடிக்க மக்கள் கோரிக்கை

பாபநாசம், மார்ச் 12 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் மேலவீதியில் இருந்த மீன் மார்க்கெட் கட்டடம் பழுதடைந்த காரணத்தால், கட்டடம் இடிக்கப்பட்டு, ரூ.80 லட்சத்தில் நவீன இறைச்சி மற்றும் மீன் சந்தை கட்டட பணி தொடங்கப்பட்டது. இப்பணி தொடங்கி, ஒரு வருடம் 3 மாதம் ஆன நிலையில், கட்டடப் பணிகள் முடிவடையாமல் உள்ளன. இதனால் மீன் மார்க்கெட், புதிதாக கட்டப்படும் கட்டடத்தின் அருகில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பாபநாசம் கிளை எதிரில் ஷெட் போட்டு தற்போது இயங்கி வருகிறது. இதனால் அப்பகுதியில் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளியில் மீன் மார்க்கெட் இயங்குவதால், வங்கிக்கு வரும் மக்கள் சிரமப்படுகின்றனர். வெளியில் இயங்கும் மீன் மார்க்கெட்டால் நாய்களின் தொல்லையும் அதிகமாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உரிய கவனம் செலுத்தி மீன் மார்க்கெட் கட்டடப் பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.