விளையாட்டு
14 Dec 2025, 3:45 pm

மகளிர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பையை கைப்பற்றியது நெதர்லாந்து

மகளிர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடை பெற்று வந்தது. இந்த தொடரின் இறுதி ஆட்டம் இந்திய நேரப்படி விடுமுறை நாளான ஞாயிறன்று நடைபெற்றது. இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து - அர்ஜெண்டினா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 5 முறை சாம்பியனான (1997, 2009, 2013, 2022, 2023) நெதர்லாந்து அணி 7ஆவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி, உலகக்கோப்பை கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது. அதே போல 2 முறை சாம்பியன் (1993, 2016) பட்டம் வென்ற அர்ஜெண்டினா அணி 7ஆவது முறையாக (4 முறை இரண்டாவது இடம் - 2001, 2009, 2013, 2023) இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பை வெல்லும் கனவோடு தீவிர பயிற்சியுடன் களம்கண்டது. இந்நிலையில், இறுதி ஆட்டத்தின் முதல் கால்பகுதியில் இரு அணிகளும் கோலடிக்கவில்லை. இரண்டாம் கால்பகுதியில் நெதர்லாந்து அணி அடுத்த டுத்து 2 கோல்களை அடித்தது. 3ஆம் கால்பகுதியில் கடுமை யான போராட்டத்துக்கு இடையே அர்ஜெண்டினா கோலடித்தது. அர்ஜெண்டினா கோலடித்தவுடன் டிரா ஆகி பெனால்டி சூட் அவர் வரை செல்லக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்த நெதர்லாந்து அணி தடுப்பாட்டத்தில் பாதுகாப்பு அரணை அமைத்தது. இத னால் அர்ஜெண்டினா மேற்கொண்டு கோலடிக்கவில்லை. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் 6ஆவது முறை யாக நெதர்லாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது. மேலும் மகளிர் இளையோர் ஹாக்கி பிரிவில் அதிகமுறை உலகக்கோப்பை வென்ற அணி (6 முறை) என்ற பெருமையையும் நெதர்லாந்து அணி தக்கவைத்துள்ளது. அர்ஜெண்டினா அணி 5ஆவது முறையாக வெள்ளிப்பதக்கம் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜியத்திற்கு வெண்கலம்

இறுதிப்போட்டிக்கு முன்னதாக, வெண்கலப்பதக்கதிற்கான ஆட்டம் நடைபெற்றது. 2ஆவது முறையாக வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றும் முனைப்பில் பெல்ஜியம் அணியும், இளையோர் ஹாக்கி அரங்கில் முதன்முறையாக பதக்கம் (வெண்கலம்) வெல்லும் முனைப்பில் சீனாவும் களமிறங்கின. தொடக்கம் முதலே பெல்ஜியம் அணி ஆக்ரோஷமாக விளையாடியது. இறுதியில் 5-1 என்ற கோல் கணக்கில் பெல்ஜியம் அபார வெற்றி பெற்று, மகளிர் இளையோர் ஹாக்கி உலகக்கோப்பை வரலாற்றில் 2ஆவது முறையாக வெண்கலப்பதக்கத்தை தட்டிச் சென்றது. சீனா 4ஆவது இடம் பிடித்தது.