நீட் ஊழலை எதிர்த்து மாணவர் எழுச்சி 5-ஆவது நாளாக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிராகரிப்பு சு.வெங்கடேசன் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் கடும் கண்டனம்
24 Jul 2026, 9:48 pm

நீட் ஊழலை எதிர்த்து மாணவர் எழுச்சி 5-ஆவது நாளாக மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானங்கள் நிராகரிப்பு

சு.வெங்கடேசன் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம் கடும் கண்டனம்

புதுதில்லி, ஜூலை 24- நீட் (NEET) தேர்வு முறைகேடுகள், வினாத் தாள் கசிவு மற்றும் மாணவர்கள் மீதான காவல் துறையின் அடக்குமுறைகளைக் கண்டித்து நாடாளுமன்ற மக்களவையில் 5-வது நாளாக ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டு ள்ளது. மாணவர்களின் குரலைப் பிரதிபலிக்கும் வகையில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், விவாதத்திற்கு அனுமதி மறுத்து ஒன்றிய அரசும் சபாநாயகரும் பின்பற்றும் முரண்பட்ட போக்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் திண்டுக்கல் எம்.பி. ஆர்.சச்சிதானந்தம் ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

5-வது நாளாக சு.வெங்கடேசன் எம்.பி. ஒத்திவைப்பு தீர்மானம்

நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவா திக்கக் கோரி சு.வெங்கடேசன் எம்.பி மக்கள வையில் வெள்ளியன்று 5-வது நாளாக ஒத்தி வைப்பு தீர்மானம் தாக்கல் செய்தார். இத்தீர்மா னத்தில், ஜந்தர் மந்தரில் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் மாணவர்கள் கைது செய்யப்பட்ட விவகாரமும் இணைக்கப் பட்டுள்ளது.

தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தியும், மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்தும் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எல்லா தேர்வுகளிலும் பிழை செய்யும் அரசு... இப்போது மாணவர்கள் உங்கள் விடைத்தாளை திருத்துகிறார்கள்” என்று பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துள் ளார். மேலும், நள்ளிரவில் வீடியோ வெளியிடும் பிரதமர், காலை 11 மணிக்கு மக்களவைக்கு நேரில் வந்து விவாதத்திற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசின் இரட்டை நிலைப்பாடு

கடந்த 5 நாட்களில் நீட் பிரச்சனை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த 100-க்கும் மேற்பட்ட ஒத்திவைப்பு தீர்மானங் களை அரசு ஒட்டுமொத்தமாக நிராகரித்துள்ளதாக சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.

ஒருபுறம், “நீட் குறித்த விவாதத்திற்கு அரசு தயாராக இருக்கிறது” என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் அறிவிக்கிறார்; மறுபுறம், எதிர்க்கட்சிகள் கொடுத்த ஒத்திவைப்பு தீர்மானங்கள் அனைத்தையும் சபாநாயகர் நிராகரிக்கிறார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டு கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடியபோது, சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த ஜெகதாம்பிகா பால், “அரசு விவாதிக்கத் தயாராக இருக்கிறது, ஆகவே நீங்கள் மீண்டும் எழுதிக் கொடுங்கள், அது குறித்து சபாநாயகர் முடிவு செய்வார், அதுவரை வேறு சில சட்ட மசோதாக்களை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளலாம்” என்று திசைதிருப்பும் முயற்சியில் ஈடுபட்டார். அமைச்சர்களின் பகல் பொய்கள் மோடியின் நள்ளிரவு பொய்களை விஞ்சுவதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சாடியுள்ளனர்.

ஆர்.சச்சிதானந்தம் எம்.பி. கண்டனம்

இந்த மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் விடுத்துள்ள செய்தியில், “முன்னுக்குப் பின் முரணாகப் பேசி, நாடே போராடிக் கொண்டிருக்கிற போது அது குறித்துக் கூட நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி இல்லை என்று மறுக்கும் பா.ஜ.க.வின் பச்சோந்தித்தனத்தை என்னவென்று கூறுவது? கல்வித்துறையில் மோடி அரசின் மொத்த தோல்வியை மூடி மறைப்பதற்கு பா.ஜ.க செய்யும் தந்திரங்களைப் பார்த்து நாடே தலைகுனிந்து நிற்கிறது.

நீட் தேர்வால் உயிரிழந்த மாணவர்களை இழந்த பெற்றோரின் கண்ணீர் ஆறாய் ஓடுகிறது! அதற்கு நிகராய் போராடியவர்களின் சிந்திய ரத்தம் தில்லியின் தெருக்களிலே தெறிக்கிறது! இவ்விரண்டும் ஒன்று சேர்ந்தால் ஏற்படும் காட்டாற்று வெள்ளத்தில் கரை சேராது உமது ஆட்சி! அன்று மகாத்மா சிந்திய ரத்தமும் இன்று மாணவர்கள் சிந்திய ரத்தமும் சங்பரிவாரக் கூட்டத்தின் நயவஞ்சகத்தால் ஏற்பட்டது! நாடு தழுவிய இயக்கத்தால் நயவஞ்சகத்திற்கு முடிவு கட்டுவோம்! நாளை நமது என்று நம்பிக்கையுடன் போராடுவோம்!” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கல்வி அமைச்சரின் ராஜினாமா, தேர்வு முறைகேடுகள் மற்றும் மாணவர்கள் மீதான காவல்துறை அடக்குமுறை குறித்து விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்தியா கூட்டணி எம்.பி.க்களின் தொடர் போராட்டங்களால் நாடாளுமன்ற வளாகம் தொடர்ந்து போர்க்கள மாக காட்சியளிக்கிறது.