நீட் மறுதேர்வால் மன அழுத்தம்: கோவையில் மாணவி தற்கொலை!
17 Jun 2026, 3:54 pm

கோவையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 19 வயது மாணவி வலி நிவாரணி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கோவைப்புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில் பிரபு. சி.ஐ.டி.யு. டாஸ்மாக் ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளராக உள்ளார். இவரது மகள் அணு கீர்த்தனா (19). மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்தார்.

முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று பி.டி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், மீண்டும் கீர்த்தனா நீட் தேர்வு எழுதினார். ஆனால் ராஜஸ்தானில் நடந்த நீட் வினாத்தாள் மோசடியால் நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மறுதேர்வு ஜூன் 21-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

இத்தேர்வுக்காக தயாராகி வந்த அணு கீர்த்தனா, நேற்று நள்ளிரவு 2 மணியளவில் தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ்அப் மூலம், தன்னால் எதிர்பார்த்த அளவு தேர்வுக்கு தயாராக முடியவில்லை எனவும், இதனால் தொடர்ந்து மன அழுத்தத்தில் இருப்பதாகவும் செய்தி அனுப்பிவிட்டு, வீட்டில் இருந்த வலி நிவாரணி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

இந்த வாட்ஸ்அப் தகவலை கண்ட அவரது சித்தப்பா வீட்டுக்கு தகவல் அளித்ததோடு, விரைந்து வந்து அணு கீர்த்தனாவை மீட்டு கோவை கணபதி அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.

தொடர் சிகிச்சையில் இருந்த மாணவி அணு கீர்த்தனா, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தந்தை செந்தில் பிரபு அளித்த புகாரின் அடிப்படையில் குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.