நீட் பயிற்சி மோசடி: சுகுணா பிப் பள்ளி மற்றும் பிட்ஜி நிறுவன தலைவர்கள் மீது வழக்குப் பதிவு!
18 Jun 2026, 5:00 pm

நீட் பயிற்சிக்காக வசூலிக்கப்பட்ட முன்பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக கோவையில் பிரபல நீட் பயிற்சி மையமான பிட்ஜி (FIITJEE) நிறுவனத்தின் தலைவர் தினேஷ் குமார் கோயல் மற்றும் பிரபல சிபிஎஸ்இ பள்ளியான சுகுணா பிப் தலைவர் லட்சுமி நாராயணசாமி ஆகிய இருவர் மீது பீளமேடு போலீசார் மோசடி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவை, காளப்பட்டி பகுதியில் இயங்கி வரும் சிபிஎஸ்இ பள்ளியான சுகுணா பிப் பள்ளியில், மருத்துவ மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சியை பிட்ஜி (FIITJEE) நிறுவனத்துடன் இணைந்து வழங்குவதாக கூறி, கல்விக் கட்டணத்துடன் நீட் மற்றும் ஜேஇஇ பயிற்சிக்கான கட்டணமும் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சியில் சேரும் மாணவர்கள் ரூ.1 லட்சம் முன்பணமாக செலுத்த வேண்டும் என்றும், பள்ளிப் படிப்பு முடிந்த பின் அந்த தொகை திருப்பி வழங்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதனை நம்பி 100-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பெற்றோர் தலா ரூ.1 லட்சம் செலுத்திய நிலையில், கடந்த கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு படிப்பை முடித்த மாணவர்களுக்கு ஒராண்டிற்கு மேலாக முன்பணத்தை திருப்பி வழங்கப்படவில்லை என பெற்றோர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து மோசடி செய்ததாக மாணவரின் பெற்றோரான விக்ரம் என்பவர் பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை விசாரித்த போலீசார், பிட்ஜி (FIITJEE) நிறுவனத்தின் தலைவர் தினேஷ் குமார் கோயல் மற்றும் பிரபல சிபிஎஸ்இ பள்ளியான சுகுணா பிப் தலைவர் லட்சுமி நாராயணசாமி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.