நீலமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரிக்கை
27 Jun 2026, 12:25 am

நீலமங்கலம் புறவழிச்சாலை சந்திப்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கக் கோரிக்கை

கள்ளக்குறிச்சி,ஜூன் 26- உளுந்தூர்பேட்டை -சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நீலமங்கலம் புற வழிச்சாலையிலிருந்து கள்ளக்குறிச்சி நகருக்குள் நுழையும் சந்திப்பில், உயர்கோபுர மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இருளில் மூழ்கும் சந்திப்பு

நீலமங்கலம் மேம்பாலத்திற்கு அருகே, புறவழிச்சாலையிலிருந்து நகருக்குள் நுழையும் பிரிவுச் சாலையில் போதிய மின்விளக்கு வசதியோ, எச்சரிக்கைப் பலகைகளோ இல்லை. மேம்பாலத்திலிருந்து சாலை இறங்கும் பகுதியில் இந்தச் சந்திப்பு அமைந்துள்ளதால், பாதுகாப்பிற்காகப் பேரிகார்டுகளை (Barricades) அமைப்பதிலும் சிக்கல் நீடிக்கிறது. முறையான மின்விளக்கு வசதி இல்லாததால், இரவு நேரங்களில் அப்பகுதி மிகுந்த இருள் சூழ்ந்து காணப்படுகிறது. புறவழிச்சாலையின் ஓரங்களில் லாரிகள் நிறுத்தப்படுவதும், சாலை ஓரம் உள்ள வாகனப் பட்டறைகளால் பழுதான வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. இதனால் பிரிவுச் சாலை இருட்டில் மறைந்து போவதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். இது அப்பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழும் அபாயத்தை அதிகரித்துள்ளது.

அதிகாரிகளுக்குப் பொதுமக்கள் வேண்டுகோள்

ஏமப்பேர் பகுதியில் ரவுண்டானா, உயர்கோபுர மின்விளக்கு மற்றும் பேரிகார்டு வசதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதைப் போல, நீலமங்கலம் சந்திப்பிலும் உயர்கோபுர மின்விளக்கை அமைக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் இதுகுறித்து உடனடியாகக் கவனம் செலுத்தி, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.