இயற்கை அதிகாரம்
28 Mar 2026, 4:13 pm
<p><strong>இயற்கை அதிகாரம்</strong></p>
<p>வெடிக்கும் வெயில் போர் கண்டிக்காத கடல் ராசா அமைதியாய் ஆவியாகும் அக்கிரமம்.. வான முதலாளியை வந்தடைந்ததும் அமில மழையாய் சிந்தும் அநியாயம்.. நாக்கு நனைக்க வேண்டிய நிதி எச்சில் விழுங்கச் சொல்லும் எகத்தாளம்! பேரரசக் கதிர்வீச்சு வியர்வையை உறிஞ்சிய தடம், முதுகில் ஏகப்பட்ட வரிகள்! வற்றி வறண்ட உதடுகளுக்கு மானிய விலை உதட்டுச் சாயமாய் ஆகாச வீரனின் அருட்பார்வை மோடம்! வேண்டியவர்கள் வாக்குப்பட அவர்பொருட்டு எல்லோருக்கும் அடிக்கும் வெயில்! பேரழிப்பின் தகுதி படைத்த இயற்கை அதிகாரமே, உன் இறகுகளைச் சுருக்கத் தொடங்கு, இறங்கப் போகிறாய்! ஏ வெப்பக்காற்றே, உன் உரிமையாளரை அறிவோம். எம் மூச்சுக்காற்றில் அந்த முத்திரையைப் பதிக்காவிட்டால்தான் என்ன? அறிக, மலையுச்சித் தகிப்பு நிலைக்காது.. மரநல்லிணக்க நிழல்களின் கூட்டு தோற்காது! உச்சம் நீடித்ததாய் எச்சம் இல்லை வரலாற்றில்.. நாடெங்கும் கத்திரி வெயில் தொடங்கும் தினம் எங்களுக்கும் அதற்கும்தான் போட்டியே. வெயிலின் அலை விதிமுடிந்து போகட்டும் தன்னெழுச்சி மழை தலைமுறை காக்கட்டும் இந்த மேயுடன் மேற்படி சரியட்டும்!</p>
