தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் கிராமப் புறங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை விரிவாக்க முடியும்!
24 Jul 2026, 9:50 pm

தனியார் வங்கிகளை பொதுத்துறை வங்கிகளாக மாற்றினால் கிராமப் புறங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை விரிவாக்க முடியும்!

ருச்சிராப்பள்ளி, ஜூலை 24 - இந்திய வங்கி ஊழியர் சம்மேளன தமிழ் மாநில 14 ஆவது மாநாடு திருச்சியில் ஜூலை 25, 26 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது. இது குறித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் டி.ரவிக்குமார் மற்றும் மாநில தலைவர் எஸ். சுனில்குமார் ஆகியோர் கூறுகையில், “1969 இல் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்ட பிறகு, சாமானிய மக்களுக்கும் வங்கி கடன்களும், சமூகத் திட்டங்களின் பலன்களும் பரவலாக சென்றடைந்தன. ஆனால் இன்று ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

தனியார் வங்கிகளையும் பொதுத் துறை வங்கிகளாக மாற்ற வேண்டும். அப்போதுதான், கிராமப் புறங்களுக்கும், மலைப் பிரதேசங்களுக்கும் வங்கி சேவைகளை முழுமையாக விரிவாக்க முடியும்.

ஒன்றிய அரசு, இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் வங்கி நிர்வாகிகள் இணைந்து வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாத கடனாளிகளிடமிருந்து முழுத் தொகையும் வசூலிக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றி, மக்களின் பணத்தை பாதுகாக்க வேண்டும். அனைத்து கிராம வங்கிகளையும் ஒன்றிணைத்து இந்திய தேசிய கிராம வங்கி அமைக்க வேண்டும். வாடிக்கையாளர்களிடமிருந்து பல்வேறு வங்கி சேவைகளுக்காக அதிகப்படியான கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. காசோலை திரும்பினால் கட்டணம், குறைந்தபட்ச இருப்புத் தொகை இல்லையென்றால் அபராதம் என சாதாரண மக்களின் மீது தேவையற்ற சுமையை ஏற்படுத்துகிறது.

எனவே, இத்தகைய அநியாயமான சேவைக் கட்டணங்களை ரத்து செய்து, வங்கி சேவைகளை அனை வருக்கும் எளிதாகவும், மலிவாகவும் வழங்க வேண்டும்.

வங்கிகளில் பணிச்சுமை காரணமாக இதுவரை 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மன உளைச்சலால் உயிரிழந்துள்ளனர். கடுமையான பணிச்சுமையை குறைக்க வாரத்திற்கு 5 நாட்கள் வேலை திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த மாநாட்டில் பொது மக்கள் மற்றும் ஊழியர்களின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. '

இந்த மாநாட்டை அகில இந்திய பொதுச் செயலாளர் தேபாசிஸ் பாசு சௌதுரி துவக்கி வைக்கிறார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ். கண்ணன், கீழ்வேளூர் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் டி. லதா மற்றும் அகில இந்திய தலைவர் அனில் ஆகியோர் மாநாட்டில் சிறப்புரையாற்றுகின்றனர்” என்றனர். பேட்டியின் போது வரவேற்புக் குழு செயலாளர் ஹேமன்குமார், பொருளாளர் ரகுராமன் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.