தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி
24 Jan 2026, 3:38 pm
<p><strong>தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி</strong></p>
<p>பெரம்பலூர், ஜன.24- தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை, பெரம்பலூரில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் ந. மிருணாளினி சனிக்கிழமை தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் இந்திய தேர்தல் ஆணையம் உருவான தினமான ஜனவரி 25 ஆம் நாள் தேசிய வாக்காளர் தினமாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் மற்றும் குன்னம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளிலும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனியார் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார். ரோவர் ஆர்ச் பகுதியில் தொடங்கிய இப்பேரணி, சங்குப்பேட்டை, பாலக்கரை வழியாக பெரம்பலூர் நகராட்சி அலுவலகத்தில் முடிவுற்றது. பேரணியின்போது, மாணவ, மாணவிகள் “நமது வாக்கு நமது உரிமை, வாக்களிப்பது சிறந்தது, நான் நிச்சயம் வாக்களிப்பேன், எனது இந்தியா எனது எனது பாரதம்’’ போன்ற பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணி முடிவுற்ற நகராட்சி அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியினை மாவட்ட ஆட்சியர் வாசிக்க, பேரணியில் கலந்துகொண்ட இளம் வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.</p>
