கூலி உயர்வு கோரிக்கை - போராட்டத்தை தீவிரப்படுத்த விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு
26 Sept 2026, 12:57 am

கூலி உயர்வு கோரிக்கை - போராட்டத்தை தீவிரப்படுத்த விசைத்தறி தொழிலாளர்கள் முடிவு

நாமக்கல், செப்.25-விசைத்தறி தொழிலாளர்களுக்கு 75 சதவீதம் கூலி உயர்வுவழங்க கோரி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், வருவாய்த்துறை ஏற்பாடு செய்த பேச்சுவார்த்தையில் ஜவுளி உற்பத்தியாளர்கள் பங்கேற்காததால் தொழிலாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் பகுதிகளில் ஏற்கனவே விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. இதையடுத்து, சிஐடியு நாமக்கல் மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்கம்உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி பல்வேறு கட்ட ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, குமாரபாளையம் வட்டாட்சியர் தலைமையில் கூலி உயர்வு குறித்த பேச்சுவார்த்தை வியாழனன்று நடைபெற்றது. இதில் சேலம் மண்டல தொழிலாளர் நலத் துறை துணை ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் தொழிலாளர்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். ஆனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் தரப்பில் யாரும் இதில் பங்கேற்கவில்லை.

தொடர்ந்து 3 முறை அழைத்தும் ஜவுளி உற்பத்தியாளர்கள் பேச்சுவார்த்தைக்கு வராததால், வரும் புதனன்று மீண்டும் ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அப்போதும் அவர்கள் வரவில்லையெனில் திருச்செங்கோடு வருவாய் கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ள நிலையில், கூலி உயர்வு ஒப்பந்தம் எட்டப்படாததால், தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த தொழிற்சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதனால் நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறி தொழில் சார்ந்தபகுதியில் பரபரப்பு நிலவுகிறது.