கடனை கேட்டு நெருக்கடி: ஒருவர் தற்கொலை; 3 பேர் கைது!
29 May 2026, 12:09 am
<p><strong>கடனை கேட்டு நெருக்கடி: ஒருவர் தற்கொலை; 3 பேர் கைது!</strong></p><p>நாமக்கல், மே 28- நாமக்கல் மாவட்டத்தில் கந்துவட்டி மற்றும் நுண் நிதி நிறுவனங்களின் கடன் வலையில் சிக்கி விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் இன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் துயரம் தொடர்கதையாகி வருகிறது. விசைத்தறி தொழிலை பிரதானமாகக் கொண்ட பள்ளிபாளையம் பகுதியில் நூல் விலை ஏற்றம், ஒன்றிய - மாநில அரசுகளின் கவனிப்பின்மை, ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் விசைத்தறி தொழில் நலிவடைந்துள்ளது. இதனால் குடும்ப பொருளாதார தேவைகளுக்காக தொழிலாளர்கள் கந்துவட்டி மற்றும் நுண் நிதி நிறுவனங்களின் பிடியில் சிக்கி, வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். தமிழக அரசு கந்துவட்டி ஒழிப்புச் சட்டத்தை அமல்படுத்தி இருந்தாலும், கடன் வசூலிப்பில் அரசு விதிகள் மீறப்படுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்காக தொடர் போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் தேவாங்கபுரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்ற கூலித் தொழிலாளி, கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால் சுமார் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி தரக்கோரி நிதி நிறுவன உரிமையாளர்கள் சிலர் கடந்த செவ்வாய்க்கிழமை மணிகண்டனை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, கடுமையாக தாக்கி மிரட்டியுள்ளனர். இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பள்ளிபாளையம் போலீசார் கண்ணன், மாரிமுத்து, சீனிவாசன் ஆகிய மூவரை கைது செய்து, தப்பியோடிய சிலரை தேடி வருகின்றனர். கடன் வலையில் சிக்கி, எரியும் தீயில் விழும் விட்டில் பூச்சிகளாய் தொழிலாளர் குடும்பங்கள் அழியும் அவலத்தைத் தடுக்க, நிதி நிறுவனங்களின் அடாவடிப் போக்கை கட்டுப்படுத்த அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
