குடிநீர் தட்டுப்பாடு – ஊராட்சி அலுவலகம் முற்றுகை
4 Jun 2026, 11:06 pm

நாமக்கல், ஜூன் 4-

குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் குடிநீர் முறையாக வழங்கப்படாததை கண்டித்து பொதுமக்கள் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட காந்தி நகர் பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த சில நாட்களாகவே குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொது மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்பட்ட மின்மோட்டார் பழுதடைந்ததால் தண்ணீர் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்திருந்தது. இருப்பினும் பிரச்சினை நீடித்ததால், புதனன்று

காலை அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் ஊராட்சி அலுவலர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் உடனடி தீர்வு குறித்து உறுதியான பதில் கிடைக்காததால் பேச்சு

வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. குடிநீர் இல்லாததால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தண்ணீர் பிடிப்பதற்காக வேலைக்கு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் லோகமணிகண்டன், போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலுடன் புதிய மின்மோட்டார் வாங்கப்பட்டுள்ளதாகவும், அதை உடனடியாக பொருத்தி மறுநாள் முதல் சீரான குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதியளித்தார்.

அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட பொது மக்கள், தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதியாக கலைந்து சென்றனர்.