நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது!
3 Oct 2026, 11:13 pm

நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாளச் சாக்கடை திட்டப் பணியை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது!

நாகர்கோவில், அக்.3-நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.189.82 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதாளச் சாக்கடைதிட்டத்தை, அரசு-தனியார் பங்களிப்பு (PPP) என்ற பெயரில் முழுமையாகத் தனியார் வசம் ஒப்படைக்கத் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது. இந்த மக்கள் விரோத முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.இது தொடர்பாக கட்சியின் நாகர்கோவில் மாநகரச் செயலாளர் எஸ். அருணாச்சலம், மாநகராட்சி ஆணையாளரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:

பாதாளச் சாக்கடைத் திட்டம் என்பது மக்களின் அடிப்படை சுகாதாரம் மற்றும் வாழ்வுரிமை சார்ந்த ஒரு பொதுச் சேவையாகும். இதனை லாப நோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைக்க அரசு டெண்டர் கோரியிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இத்திட்டம் தனியார் வசம் சென்றால், பராமரிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மீது மிகக் கடுமையான கழிவுநீர்க் கட்டணங்களும், புதிய வரிகளும் சுமத்தப்படும்.

மேலும், பொதுமக்கள் தங்களின் குறைகளையும் புகார்களையும் உள்ளாட்சி அமைப்புகளிடம் தெரிவிக்கும் ஜனநாயக உரிமை முற்றிலுமாகப் பறிக்கப்படும். கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவைமட்டுமே எதிர்பார்க்கும் அவலநிலை மக்களுக்கு உருவாகும். அத்துடன், இத்துறையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சித்துறை தற்காலிகத் தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு கேள்விக்குறியாகி, அவர்கள் கடுமையான சுரண்டலுக்கு ஆளாக நேரிடும்.

எனவே, இந்தத் திட்டத்தைத் தனியார்மயமாக்கும் டெண்டர் நடவடிக்கையைத் தமிழக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். பெரு நிறுவனங்களின்லாப வேட்டைக்குத் தாரை வார்க்காமல், அரசே முழு நிதி ஒதுக்கீடு செய்து, உள்ளாட்சி அமைப்புகளின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் பொதுத்துறை மூலமாகவேஇத்திட்டத்தைத் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் வலியுறுத்தப்பட்டுஉள்ளது.