வேளாங்கண்ணி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாற்று வழிச்சாலைத் திட்டம் முதலமைச்சரிடம் நாகை மாலி நேரில் வலியுறுத்தல்!
19 Feb 2026, 3:09 pm
<p><strong>வேளாங்கண்ணி போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாற்று வழிச்சாலைத் திட்டம் முதலமைச்சரிடம் நாகை மாலி நேரில் வலியுறுத்தல்! </strong></p>
<p>சென்னை, பிப். 19- உலகப் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகவும், தமிழகத்தின் முக்கியச் சுற்றுலா மையமாகவும் விளங்கும் வேளாங்கண்ணி நகரின் மிக நீண்ட காலப் பிரச்சனையான போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தரத் தீர்வு காணக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவர் நாகை மாலி முதலமைச்சரிடம் கோரிக்கை மனு ஒன்றை நேரில் வழங்கினார். உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணியும் மக்கள் திரளும் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வேளாங்கண்ணி சிறப்பு நிலை பேரூராட்சி, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நாகை மாலி தனது மனுவில் முதன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளார். “இங்கு அமைந்துள்ள புனித ஆரோக்கிய மாதா திருத்தலம் உலகப் புகழ் பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் பெருவிழாக் காலங்களில் தமிழகம் மட்டுமன்றி, இந்தியா மற்றும் உலகெங்கிலும் இருந்து லட்சக்கணக்கான திருப்பயணிகளும், சுற்றுலாப் பயணிகளும் வேளாங்கண்ணிக்கு வருகை தருகின்றனர்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திருவிழாக் காலங்கள் மட்டுமன்றி, சாதாரண நாட்களிலும் தினசரி சராசரியாக 15,000 சுற்றுலாப் பயணிகளும், வார இறுதி நாட்களில் 25,000-க்கும் மேற்பட்ட பயணிகளும் வேளாங்கண்ணிக்கு வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பேருந்துகள், கார் மற்றும் வேன்கள் என வாகனங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருவதை அவர் விவரித்துள்ளார். ஸ்தம்பிக்கும் நகரம்: அவசர ஊர்திகளின் அவலநிலை வாகனங்களின் வரத்து இவ்வளவு அதிகமாக இருந்தும், வேளாங்கண்ணி நகருக்குள் வாகனங்கள் செல்வதற்கோ, திரும்புவதற்கோ அல்லது முறையாக நிறுத்துவதற்கோ போதிய இடவசதி இல்லை என்பதை நாகை மாலி வேதனையுடன் பதிவு செய்துள்ளார். “தற்போதுள்ள சாலைக் கட்டமைப்பால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நகரமே ஸ்தம்பிக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி, உயிருக்குப் போராடும் நோயாளிகளை ஏற்றி வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும், தீயணைப்பு அவசரகால ஊர்திகளும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன. இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளது” என்று அவர் எச்சரித்துள்ளார். கிடப்பில் போடப்பட்ட மாற்று வழிச்சாலைத் திட்டம் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்ட முந்தைய முயற்சிகளையும் நாகை மாலி தனது மனுவில் நினைவு கூர்ந்துள்ளார். “போக்குவரத்து நெரிசலைச் சீர் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைத் தொடர்ந்து, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலர்களுடன் கூட்டாய்வு நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில், வேளாங்கண்ணி நகருக்கு ஒரு ‘மாற்று வழிச்சாலை’ அமைப்பது என முடிவெடுக்கப்பட்டது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையும், நிதியைக் கோரும் கருத்துருவும் நெடுஞ்சாலைத்துறை மூலம் ஏற்கனவே அரசிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுப் பல ஆண்டுகள் கடந்த பின்னரும், இதுநாள் வரையிலும் மாற்று வழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகளோ அல்லது அதற்குத் தேவையான உரிய நிதி ஒதுக்கீடுகளோ செய்யப்படவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அரசின் இந்தத் தாமதத்தால், ஒட்டுமொத்தப் பேரூராட்சி நகரமே வாகன நெரிசலில் சிக்கி, திருப்பயணிகள் கடும் துயரத்தைச் சந்தித்து வருவதாக அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். முதலமைச்சருக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று நாகை மாலி வலியுறுத்தியுள்ளார். “வழிபாட்டுத் தலங்களில் உலக அளவில் தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வேளாங்கண்ணி நகரத்தின் இந்தப் போக்குவரத்து நெரிசல் என்பது அந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும். மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்ற கூட்டாய்வில் பரிந்துரைக்கப்பட்ட மாற்று வழிச்சாலைத் திட்டத்திற்குத் தேவையான நிதியை முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும். நில எடுப்புப் பணிகளை விரைந்து துவக்கி, இத்திட்டத்தைச் செயல்படுத்தித் தருவதன் மூலம் பொதுமக்களின் நீண்ட காலத் துயரத்தைத் துடைக்க வேண்டும்” என்று தனது மனுவில் நாகை மாலி கேட்டுக்கொண்டுள்ளார்.</p>
