தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நான் ராமர் பேசுகிறேன்... - பெரணமல்லூர் சேகரன்

18 Jul 2026, 9:59 pm
நான் ராமர் பேசுகிறேன்... - பெரணமல்லூர் சேகரன்
<p><strong>நான் ராமர் பேசுகிறேன்... - பெரணமல்லூர் சேகரன்</strong></p><p>நான் ராமர் பேசுகிறேன்... முன்னை பாலகன் அவதாரம் பின்னர் ராமர் அரிதாரம் பிறந்த அயோத்தியில் சிறந்த பாலக ஆலயம் என இறுமாந்திருந்தேன்; பின்னர்தான் தெரிந்தது என்னை வைத்துச் செய்யப்படுவது அரசியலென! தாழ்ந்த குலம் எனக் கருதாது சேர்ந்த குகனைச் சகோதரனாக்கினேன்; முதல் குடிமகனுக்கு ஆலயக் கால்கோள் விழாவில் அனுமதியில்லை! முதல் குடிமகளுக்கு ஆலயத் திறப்பில் அனுமதியில்லை! நான் கடைப்பிடிக்காத தீண்டாமை என் ஆலயத்தில் கடைப்பிடிக்கப்பட்டதை அரசியல் என்றுதானே சொல்ல வேண்டும்? எனக்கான ஆலயம் விரிந்து பரந்திருக்க வேண்டும் என நான் கோரவில்லை; அவர்களாகவே நிலம் கையகப்படுத்தி விரிவாகக் கட்டினார்கள். </p><p>பின்னர்தான் தெரிந்தது நிலம் கையகப்படுத்தலில் நீண்ட ஊழலென்று! கட்டுமானப் பணிக்குக் கட்டற்ற பணவெள்ளம் பாய்ந்தது; மட்டற்ற மகிழ்ச்சியில் திளைக்கும்போதே திரண்டு வந்தது முறைகேட்டுப் பட்டியல்! நாடு முழுவதுமிருந்து என்னை நாடி வருவோர் கொட்டிச் செல்கிறார் தங்கம், வைரம், வைடூரியம், பணமென தினமும்; முறையாகப் பாதுகாத்து வைக்க மனமில்லை, மறைவாகச் சுருட்டிக் கொள்ளையடித்தது கதை கதையாய்! இவ்வளவையும் பால ராமர் நான் எவ்வளவு நாளைக்கு வேடிக்கை பார்ப்பது? வெந்து நொந்து போன என் முன்னே வரிசை கட்டி நிற்கின்றன பழைய நினைவுகள்! தாழ்த்தப்பட்டவன் என்பதனால் தவம் செய்யும் உரிமையோடு தலையையும் கொய்தது நினைவில் ஆடுகிறது; பெண்ணென்றும் பாராமல் கண்டமேனிக்குச் சூர்ப்பநகையைத் தம்பியுடன் பங்கப்படுத்தியது இன்னமும் தாக்குகிறது என்னை! நேர் நின்று வதம் செய்யாமல் போர் நெறிமுறையைக் காலில் மிதித்து, வாலியை மறைந்து வதைத்தது இன்றும் என்னை வதைக்கிறது; இராவணனை வதம் செய்த கையோடு இராவணன் பாதுகாப்பில் இலங்கையிலிருந்த சீதையைச் சந்தேகப்பட்டதோடு, உலகம் சந்தேகப்படக் கூடாது என்பதற்காகத் தீக்குளிக்க வைத்த ஓரவஞ்சனை ஒதுக்கித் தள்ளிச் செய்கிறது நிந்தனை! அயோத்தி அரசபீடத்தில் இருக்கும்போது மாறுவேடத்தில் நகர்வலம் வரும்போது, துணி வெளுப்பவன் என்னை வெளுத்துக் கட்டியதற்காக நிறைமாத கர்ப்பிணி என்றுகூடப் பாராமல் சீதையை வனத்தில் விடச் செய்தது சிதைத்துக் கொண்டிருக்கிறது என்னை! எனது ஆயுட்காலம் முடிக்கச் சரயு நதியில் சங்கமமானது அக்காலம்; பாலக ராமர் முதல் அவதார ராமர் வரை என்னை வைத்துச் செய்யும் அரசியல், கொஞ்சம் கொஞ்சமாக என்னைக் கொன்று வருவது இக்காலம்! ஆதலினால் முடிவு செய்து விட்டேன்... மீண்டும் என்னை ஏற்றுக் கொள் சரயு நதியே, இதுவே கலியுக விதியே!</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.