மக்கள் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முருகாபாடி கிராம மக்கள் மனு
21 Jul 2026, 11:32 pm
<p><strong>மக்கள் ஒற்றுமையுடன் திருவிழா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் முருகாபாடி கிராம மக்கள் மனு</strong></p><p>திருவண்ணாமலை, ஜூலை 20- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம் முருகாபாடி கிராமத்தில் அமைந்துள்ள தண்டு மாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவை அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் இணைந்து நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனர். முருகாபாடி கிராமத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழாவை நடத்துவதில் கடந்த பல ஆண்டுகளாக இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தற்போது, கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள தரப்பினர், கூழ்வார்த்தல் நிகழ்ச்சியின் போது இரு தரப்பினரும் தனித்தனியாக இரண்டு கொப்பரைகளை வைத்து கூழ் ஊற்ற வேண்டும் அல்லது தங்கள் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் தனியாகத் திருவிழா நடத்திக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். ஆனால், மற்றொரு பிரிவினரான வீரக்கொடி வேளாளர் சமூகத்தினர், ஒரே ஊரில் உள்ள கோயிலில் ஒரே கொப்பரையை வைத்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் திருவிழா நடத்த வேண்டும் என்றும், இரு சமூகத்தினரும் தனித்தனியாகத் திருவிழா நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற போது, கோயில் திருவிழா நடத்துவது குறித்து போளூர் காவல்துறையினர் பொருத்தமான முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் வழிகாட்டியது. அதன் அடிப்படையில், ஜூலை 19 ஞாயிற்றுக்கிழமையன்று சேத்துப்பட்டு காவல் ஆய்வாளர் குணபாலன் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருப்பினும், இக்கூட்டத்தில் இரு தரப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் திருவிழா நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. இருப்பினும், பெரும்பான்மை தரப்பினர் வீரக்கொடி வேளாளர் மக்களைத் தவிர்த்துவிட்டுத் தனியாகத் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். எனவே, ஒரு தரப்பினர் மட்டும் தனியாக நடத்தும் திருவிழாவைத் தடுத்து நிறுத்தி, ஊர் மக்கள் அனைவரும் இணைந்து ஒற்றுமையாகக் கோயில் திருவிழாவை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வீரக்கொடி வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கிராம மக்கள் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.</p>
