தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு முட்டுக்கொடுக்கும் இரட்டை நிலைப்பாடு

1 Sept 2026, 8:22 pm
ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு முட்டுக்கொடுக்கும் இரட்டை நிலைப்பாடு

ஏகாதிபத்தியத்தின் போர் வெறிக்கு முட்டுக்கொடுக்கும் இரட்டை நிலைப்பாடு

மத்திய ஆசியாவின் கிர்கிஸ் குடியரசு தலைநகரான பிஷ்கெக்கில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சிமாநாட்டின் இடையே, ஈரானியஜனாதிபதி மசூத் பெசெஷ்கியானைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மேற்கு ஆசியாவில் அமைதியையும் ஹோர்முஸ் ஜலசந்தியில் கடல்வழிப் போக்குவரத்தின் சுதந்திரத்தையும் உறுதி செய்யுமாறு ஈரானுக்கு அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலுமே தங்களின் மீதான மோதல்களுக்கும் பிராந்திய நெருக்கடிகளுக்கும் காரணம் என்றும், அமெரிக்காதனது உறுதிமொழிகளைக் காப்பாற்றத் தவறிவிட்டது என்றும் ஈரானிய ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ள சூழலில், போரைத் தொடங்கி நடத்தும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தைக் கண்டிக்கத் திராணியில்லாமல், பாதிக்கப்படும் ஈரானுக்கே அறிவுரை வழங்கும் இந்தியாவின் இந்தமண்டியிடும் வெளியுறவுக் கொள்கை கடும் விமர்சனத்திற்குரியது.

கடந்த பிப்ரவரி மாதம் ஈரானுக்கு எதிரானபோர் தொடங்கியதிலிருந்து இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்ற முதல் உயர்மட்டச் சந்திப்பு இதுவாகும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் மிரட்டல்களும், ஈரானியப் பகுதிகள் மீது நடத்தப்பட்ட நேரடித் தாக்குதல்களும், அதைத் தொடர்ந்து ஈரானின் பதிலடிகளும் பிராந்தியத்தைப் போர்க்களமாக மாற்றியுள்ளன. இத்தகைய சூழலில், இந்தியாவின் நீண்டகால நட்பு நாடான ஈரானைக் கடிந்துகொள்வதும், உண்மையான ஆக்கிரமிப்பாளரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் வெறியைக் கண்டும் காணாமல் இருப்பதும் இந்தியாவின்அணிசேரா கொள்கைக்கு இழைக்கப்படும் மிகப்பெரும் துரோகமாகும். பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கஅழுத்தங்களையும் மீறி இந்தியாவுடன் உறவை விரிவுபடுத்த ஈரான் தயாராக உள்ளதாகத் தெரிவித்த போதிலும், டொனால்டு டிரம்பின் வர்த்தக மற்றும் ராணுவ அச்சுறுத்தல களுக்குப் பயந்து மோடி அரசு பம்மி நிற்பதுஇந்தியாவின் இறையாண்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

மறுபுறம், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, மனிதகுல நலனுக்காக முடிவற்ற போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று உலகிற்கு அறைகூவல் விடுத்துள்ளார். உக்ரைன் மற்றும் மேற்கு ஆசிய மோதல்களால் கடல்வழி வர்த்தகமும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள இந்தியா,மேற்கத்திய நாடுகளின் நேரடித் தலையீட்டை எதிர்த்துப் பேசத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது. உலக அரங்கில் அமைதியைப் பற்றிப்பேசும் மோடி அரசு, மறுபுறம் அமெரிக்காவின் நலன்களுக்குச் சேவை செய்யும் வகையில் பிராந்திய சக்திகளுக்குஅறிவுரை சொல்லும் போக்கைக் கடைப்பிடிப்பது வெளியுறவுக் கொள்கையின் இரட்டை வேடத்தையே வெளிச்சம்போட்டுக் காட்டுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.