40 ஆண்டுகால அமெரிக்கக் கனவை ஈடேற்றும் மோடி இன்சூரன்ஸ் கூடாரத்தில் அந்நிய ஒட்டகம் - க. சுவாமிநாதன்
14 Dec 2025, 3:45 pm

40 ஆண்டுகால அமெரிக்கக் கனவை ஈடேற்றும் மோடி இன்சூரன்ஸ் கூடாரத்தில் அந்நிய ஒட்டகம்

“ஒட்டகம் கூடாரத்தில் மூக்கை நுழைப்பது” என்பார்கள். அந்நிய முதலீட்டு ஒட்ட கம் இந்திய இன்சூரன்ஸ் கூடாரத்தையே கைப்பற்றுகிற முடிவை மோடியின் அமைச்சரவைக் கூட்டம் டிசம்பர் 12 அன்று எடுத்திருக்கிறது. 100 சதவீத அந்நிய முதலீட்டை அனுமதிக்கிற சட்ட வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படுமென்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த முடிவு, இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளத்தைப் பலிகொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும்.

அமெரிக்காவின் நீண்டகாலப் பொருளாதாரப் போர் இது அமெரிக்காவின் 40 ஆண்டுகாலக் கனவு. 1980களின் பிற்பகுதியில் அமெரிக்க வர்த்தகச் சட்டம் (சூப்பர் 301) வாயிலாக, இந்திய இன்சூரன்ஸ் துறையை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடாவிட்டால் இந்தியா பொருளாதார ரீதியான எதிர்வினைகளைச் சந்திக்க வேண்டியிருக்குமென அமெரிக்கா மிரட்டியது. இந்தியச் சந்தை நோக்கி நகரும் அமெரிக்காவின் பொருளாதார அணி வகுப்பின் கொடிக்கப்பலாக அமெரிக்கப் பன்னாட்டு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் இருக்கும் என்று அமெரிக்க வெளியுறவு செயலாளர் கார்லா கில்ஸ் ஆணவத்தோடு பேசினார். 1993 இல் வெளியான மல்கோத்ரா குழு அறிக்கை 100% அந்நிய முதலீட்டை அனுமதிக்கலாமெனப் பரிந்துரையை அளித்தது. அன்றைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் அப்பரிந்துரைகளை அரசு ஏற்பதாக உடனே அறிவித்தார். ஆனாலும் இடதுசாரிகள் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் உறுதியான எதிர்ப்பால் 1999 வரை இதனை அமலாக்க முடியவில்லை.

வாஜ்பாய் ஆட்சி வரும் வரை பன்னாட்டு மூலதனம் காத்திருக்க வேண்டிய தாயிற்று. அப்போதும் கூட 26% தான் அனுமதிக்க முடிந்தது. புத்தாயிரமாண்டில் அமெரிக்க வெள்ளை மாளிகை விருந்தில் இதைக் குறிப்பிட்டு அன்றைய ஜனாதிபதி பில் கிளிண்டன் வரவேற்பு தெரிவித்தார். ரொனால்ட் ரீகனில் துவங்கி டொனால்டு டிரம்ப் வரை அமெரிக்காவின் இன்சூரன்ஸ் கனவு கலைய வில்லை. இப்போது வரை நீள்கிறது. “மேக் அமெரிக்கா கிரேட் எகைன்” எனத் தீவிர வலதுசாரி தேசியத்தை முன்வைத்து டிரம்ப் தாக்குதல் தொடுக்கிற காலத்தில் மோடி அரசு இந்த முடிவை எடுத்திருக் கிறது. எல்.ஐ.சி, அரசு வங்கிகளுக்கு தரப்படும் அரசு உத்தரவாதத்தை (Sovereign Guarantee) நீக்கிக் கொள்ள வேண்டுமென்று அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதித்துவ அமைப்பு அண்மையில் இந்தியாவை வலியுறுத்தியதும் கவனத்திற்குரியது. நடிப்புச் சுதேசிகள்: இரட்டை வேடம் “தாயின் மணிக்கொடி பாரீர்” என்று பாரதியின் பாடலை நாடாளுமன்றத்தில் முழங்கி விட்டு அடுத்த நாட்களில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

1990களின் துவக்கத்தில் “சுதேசி” என்ற முழக்கத்தை பாஜக முன் வைத்தது. “சுதேசி ஜாக்ரான் மஞ்ச்” அமைப்பாளராக இருந்து இன்சூரன்ஸ் துறையில் அந்நிய முதலீட்டுக்கு எதிராக குருமூர்த்தி பேசிய தேச பக்திப் பேச்சுக்கள் எல்லாம் இன்னமும் செவி களுக்கு மறக்கவில்லை. தேசியத்தின் மொத்த குத்தகையாளர்களாகத் தங்களைக் காட்டிக் கொண்டார்கள். ஆனால், இவர்களின் ஆட்சியிலேயே அந்நிய முதலீடு படிப்படியாக உயர்த்தப்பட்டது: * 1999 இல் வாஜ்பாய் ஆட்சியில் 26 சதவீதம் அனுமதிக்கப்பட்டது. * 2015 இல் மோடி 1 ஆட்சியில் 49 சதவீதமாக உயர்த்தப்பட்டது. * 2021 இல் மோடி 2 ஆட்சியில் 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டது. * இப்போது 2025 இல் மோடி 3 அரசாங்கத்தில் 100 சதவீதம் ஆக்குவதற்குச் சட்ட வரைவைக் கொண்டு வருபவர்களும் இவர்களே. பாரதியார் பாடிய நடிப்புச் சுதேசிகள் இவர்களே என்பதற்கு வேறு சாட்சியம் ஏதும் தேவையில்லை. சந்தை ஊடுருவல் குறித்த பொய்ப் பிரச்சாரங்கள் அந்நிய முதலீடு அதிகரிக்கப்பட்டால், இன்சூரன்ஸ் பரவல் நடக்கும், பாலிசிதாரர் சேவை செழுமையாகும், புதிய திட்டங்கள் கிடைக்கும், இந்திய நாட்டின் ஆதார தொழில் வளர்ச்சிக்கு நிதியா தாரம் கிடைக்குமென்று ஒன்றிய ஆட்சியாளர்களும், கார்ப்பரேட் ஜால்ரா ஊடகங்களும் பிரச்சாரம் செய்கிறார்கள்.

ஆனால் உலக அனுபவமோ, இந்திய அனுபவமோ இந்த வாதங்கள் என்ப தெல்லாம் அப்பட்டமான பொய்கள் என்பதையே நிறுவி இருக்கின்றன. இந்திய நாட்டில் 1999 இல் இருந்து 24 தனியார் நிறுவனங்கள் ஆயுள் இன்சூரன்சில் அனுமதிக்கப் பட்டுள்ளன. இவற்றில் 18 நிறுவனங்கள் அந்நிய மூல தனத்துடன் கை கோர்த்துத் தொழில் செய்கின்றன. மொத்த ஆயுள் இன்சூரன்ஸ் பிரிமியத்தில் அரசு நிறுவனமான எல்.ஐ.சி, 65 சதவீத சந்தைப் பங்கை யும், பாலிசி எண்ணிக்கையில் 78 சதவீத சந்தைப் பங்கையும் வைத்திருக்கிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வசதி படைத்தவர்களுக்கே சேவை செய்கின்றன; அரசு நிறுவனமான எல்.ஐ.சி தான் எளிய மக்களின் கதவுகளைத் தட்டுகிறது என்பதை இந்த புள்ளிவிவரம் தெளிவாகக் காண்பிக்கிறது. கிராமப்புறங்களை புறக்கணிக்கும் தனியார் பொது இன்சூரன்ஸ் துறையில் மொத்த அரசுப் பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் 5137 இல் 36 சதவீதம் இரண்டாம் தட்டு (Tier 2) துவங்கி ஆறாம் தட்டு (Tier 6) நகரங்களில் அமைந்துள்ளன. ஆனால் தனியார் பொது இன்சூரன்ஸ் அலுவலகங்கள் 2954 இல் 13% மட்டுமே இரண்டாம் தட்டு துவங்கி ஆறாம் தட்டு நகரங்களில் அமைந்துள்ளன. தனியார் நிறுவனங்களுக்குச் சிற்றூர்கள், கிராமங்கள் என்றால் கசக்கின்றன. லாபம் தரும் வணிகம், மாநகர உயர்தட்டுச் சந்தை மட்டுமே இனிக்கிறது. இவை இன்சூரன்ஸ் கட்டுப்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வத் தரவுகள். ஓடிப்போகும் பன்னாட்டு நிறுவனங்கள் அந்நிய முதலீட்டு உயர்வால் பாலிசிதாரர் சேவை செழுமைப்படுமென்பதும் உண்மையல்ல.

ஆயுள் இன்சூரன்ஸ் என்பது நீண்ட கால முதலீடு ஆகும். ஆனால் 2000க்குப் பிறகு இந்திய இன்சூரன்ஸ் துறைக்குள் வந்த அந்நிய இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பல இந்த 25 ஆண்டுகளிலேயே தொழிலை விட்டே முதலீடுகளை எடுத்துக் கொண்டு வெளியேறிச் சென்றுவிட்டன. அமெரிக்க இன்டர்நேச னல் குரூப், அல்லையன்ஸ், நியூயார்க் லைப், ஐ.என்.ஜி என அந்தப் பட்டியல் நீள்கிறது. நீண்ட காலம் தொழிலிலேயே தங்காத இந்த நிறுவனங்களை நம்பி நீண்ட கால முதலீடுகளைச் செய்யுங்கள் என்கிறது அரசாங்கம். 1956-க்கு முன்பு இந்தியாவில் 245 தனி யார் நிறுவனங்கள் – 16 அந்நிய நிறுவனங்கள் உள்ளிட்டு – களத்தில் இருந்ததும், மக்கள் சேமிப்பு களைச் சூறையாடிய காரணத்தினால்தான் தேசியமய முடிவெடுக்கப்பட்டது என்பதும் வரலாறு. இன்று எல்.ஐ.சி பாலிசிதாரர் உரிமப் பட்டுவாடா விகிதம் 99% ஆக இருப்பது அதன் சீரிய சேவைக்குச் சாட்சியம். வண்ணத்துப் பூச்சி மூலதனத்தின் ஆபத்து புதிய காப்பீடு திட்டங்கள் கிடைக்கும் என்பதும் உண்மை அல்ல.

சர்வதேச நிதி மூலதனத்தின் சூதாட்டத்திற்கு உதவுகிற வகையில் பங்குச் சந்தை யுடன் இணைக்கப்பட்ட பாலிசித் திட்டங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன என்பதே இந்தத் துறை கண்டுள்ள ‘பெரிய மாற்றம்’. இந்திய நாட்டின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள் உதவுமென்பதெல்லாம் காலத்தால் குப்பையில் தூக்கி எறியப்பட்டுள்ள பழைய கதை. அந்நிய முதலீடுகளில் பெரும்பாலானவை ஊக முதலீடு களுக்கே வருகின்றன. அவை “வண்ணத்துப் பூச்சி” மூலதனமாக திடீரென்று பறந்து சென்று விடுவதுமே நடப்பாக உள்ளது. தற்போதைய டாலருக்கான ரூபாய் மதிப்பு 90 ரூபாய்க்கு மேல் வீழ்ந்து போயிருப்பதில் இத்தகைய அந்நிய முதலீடு வெளியேற்றம் முக்கிய காரணமாக இருப்பதும் நமக்குக் கிடைத்திருக்கும் படிப்பினை ஆகும். மேலும், ஏற்கனவே 74 சதவீதம் அந்நிய முதலீடு வரை வரம்பு உயர்த்தப்பட்டாலும், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் தற்போது இருப்பது 30 சதவீதம்தான். 24 தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களில் 20 நிறுவனங்களில் 74 சதவீதம் வரம்புக்குப் பக்கத்தில் கூட அந்நிய முதலீடு வரவில்லை. சாவியே அவர்கள் கைகளுக்குப் போகிற வரை நிபந்தனைகள் போடுவார்கள். ஆகவே 100 சதவீத அனுமதி தந்தாலும், இதுதான் நடக்கப் போகிறது. தனியார் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச மூலதன வரம்புகள் தளர்த்தப்படும் என்றும் ஆட்சியாளர்கள் கூறுவது, மக்களின் சேமிப்பைக் கார்ப்பரேட்டுகளின் பலி பீடத்தில் ஏற்றுகிற செயலாகும்.

பொதுத்துறையின் வெற்றி இந்திய இன்சூரன்ஸ் துறை, பொதுத் துறையின் வெற்றிக்குச் சாட்சியமாக விளங்கும் துறை. ரூ 5 கோடி முதலீட்டோடு துவங்கப்பட்ட எல்.ஐ.சி, 70 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அதன் சொத்து மதிப்பு 56.5 இலட்சம் கோடிகளை கடந்துள்ளது. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு உதவக் கூடியது உள்நாட்டுச் சேமிப்புகள்தான் என்பது காலத்தால் நிறுவப்பட்டுள்ளது. எல்.ஐ.சி , ரயில்வேக்கு 1.5 இலட்சம் கோடி நிதியுதவி செய்யத் தயாராக இருந்தபோதும் அரசாங்கம் அதைப் பயன்படுத்தாமல் குறைவாகவே வாங்கிக் கொண்டது. கையில் இருக்கிற வெண்ணெயை விட்டு விட்டு சுண்ணாம்புக்கு அலைவதுதான் உலகமயம். டிரம்ப் சுண்ணாம்பு விற்கிறார். இந்திய அரசு வெண்ணெயைக் கொட்டிக் கவிழ்க்கிறது.