செறிவூட்டப்பட்ட அரிசி மக்களைப் பரிசோதனைக் கூடமாக்கிய மோடி அரசு - டி. ரவீந்திரன்
9 Mar 2026, 4:24 pm
<p><strong>செறிவூட்டப்பட்ட அரிசி மக்களைப் பரிசோதனைக் கூடமாக்கிய மோடி அரசு</strong></p>
<p>கடந்த 2021 ஆகஸ்ட் 15 அன்று, நாட்டின் 75-ஆவது சுதந்திர தின உரையாற்றும்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். நாட்டில் 80 கோடி மக்களுக்கு இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் நிறைந்த செறிவூட்டப்பட்ட அரிசியை வழங்கப்போவதாக அவர் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து 2022-இல் நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தியது. அரிசியை மாவாக்கி அதனுடன் வைட்டமின் A, B, B12, இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட நுண்ணூட்டச் சத்துக்களை இயந்திரங்கள் மூலம் கலந்து மீண்டும் அரிசியாக்குவதே செறிவூட்டப்பட்ட அரிசி ஆகும். இத்தகைய அரிசியை மொத்த அரிசியில் ஒரு சதவீத அளவில் கலந்து, நாடு முழுவதும் ரேஷன் கடைகள் வழியாக சுமார் 50 கோடி மக்களுக்கு ஒன்றிய அரசு விநியோகம் செய்தது. திட்ட நீட்டிப்பும் திடீர் தடையும் முதலில் 2024 வரை செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட இந்தச் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தை, 2028 டிசம்பர் வரை நீட்டிப்பு செய்வதற்கு ஒன்றிய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் வழங்கியது. பிரதான் மந்திரி கரீம் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த அரிசி விநியோகத்திற்காக 17,082 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய உணவு அமைச்சகம் தெரிவித்தது. இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, கடந்த 2026 பிப்ரவரி 10 அன்று பதிலளித்த மத்திய உணவுப் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் ஜயதீபாய் பம்பாணியா, செறிவூட்டப்பட்ட அரிசியில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார். ஆனால், இந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே, அதாவது 2026 பிப்ரவரி 27 அன்று, செறிவூட்டப்பட்ட அரிசிக்கு ஒன்றிய அரசு இடைக்காலத் தடையை விதித்துள்ளது. கோரக்பூர் ஐ.ஐ.டி மேற்கொண்ட ஆய்வின் முடிவுகளின் அடிப்படையிலேயே ஒன்றிய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. எச்சரிக்கைகளை மீறிய பாஜக அரசு இந்தியாவில் கிராமப்புறங்களில் வாழும் பெரும்பகுதி மக்கள், குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் பெண்கள் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு ஊட்டச்சத்தை வழங்குவதன் மூலம் ரத்த சோகையை நீக்க முடியும் என்று கூறித்தான் இத்திட்டத்தை ஒன்றிய பாஜக அரசு செயல்படுத்தியது. ஆனால், இதற்கான ஆய்வுகள் நடந்து கொண்டிருந்த போதே, செறிவூட்டப்பட்ட அரிசி ரத்த சோகையைப் போக்காது என்று ஆய்வாளர்கள் எச்சரித்தனர். குறிப்பாகத் தலசீமியா மற்றும் அனீமியா நோய் உள்ளவர்களுக்கு இரும்புச்சத்து நிறைந்த பொருட்களை வழங்கக் கூடாது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். பெங்களூரு செயின்ட் ஜான்ஸ் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் குர்பாட், இந்த அரிசி வழங்கப்பட்ட குழந்தைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைத் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். 2019-இல் எடுக்கப்பட்ட காக்ரைன் பதிப்பாய்வு, உலகில் பல நாடுகளில் செறிவூட்டப்பட்ட அரிசி ரத்த சோகை குறைபாட்டைச் சரிசெய்யவில்லை என்பதை மெய்ப்பித்துள்ளது. இத்தனைக்கும் மேலாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) இந்தத் திட்டம் குழந்தைகளுக்குத் தீவிரமான பிரச்சனைகளை உருவாக்கும் என்று எச்சரித்தும், அவை அனைத்தையும் நிராகரித்துவிட்டு மோடி அரசு இத்திட்டத்தைப் பிடிவாதமாகச் செயல்படுத்தியது. கார்ப்பரேட் லாபமும் விவசாயிகளின் எதிர்ப்பும் மக்களிடம் உள்ள ரத்த சோகையைப் போக்குவதற்கு ஊட்டச்சத்துகளைச் செயற்கை முறையில் புகுத்தி மக்களைச் சாப்பிட வைப்பதன் மூலம் தீர்வு கண்டுவிட முடியாது. இது இயற்கைக்கு மாறானது. இயற்கையாகக் கிடைக்கும் உணவுகளைச் சரிவிகித அளவில் உட்கொள்வதன் மூலமே ஆரோக்கியமாக வாழ முடியும். அதற்குத் தேவை முறையான வேலையும் வருமானமுமே ஆகும். ஒன்றிய பாஜக அரசு வறுமையை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, மக்களின் உடல்நலப் பாதிப்புகளைப் பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்கள் லாபம் ஈட்டுவதற்கான வழிமுறைகளைச் செய்து கொடுத்தது. விவசாயிகள் விளைவித்த அரிசியை மாவாக்கி, மீண்டும் இயந்திரத்தில் விட்டு அரிசியாக்கி மக்களுக்கு விநியோகம் செய்வது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான லாப வேட்டை என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் வலுவாக எச்சரித்தது. அபார்ட் போன்ற மருந்து நிறுவனங்கள் ‘அல்ட்ரா ரைஸ்’ என்ற பெயரில் இதற்கு உலகக் காப்புரிமை பெற்றுள்ளன. இத்திட்டத்தின் மூலம் அந்த நிறுவனங்கள் பல்லாயிரம் கோடியை லாபமாகச் சம்பாதிக்கின்றன. ஒன்றிய பாஜக அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவே இத்தகைய திட்டங்களைச் செயல்படுத்தியது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் இதனை எதிர்த்துத் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். தற்போது இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இதுவரை இந்த அரிசியைச் சாப்பிட்ட மக்களின் உடலில் நுண்ணூட்டச் சத்துத் தேக்கத்தால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பதை ஒன்றிய அரசு கணக்கெடுக்க வேண்டும். கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக மக்களின் உடலைச் சோதனைக் களமாக மாற்றிய ஒன்றிய பாஜக அரசும், இத்திட்டத்தைப் பெருமையுடன் அறிவித்த பிரதமர் மோடியும் இதற்கு நாட்டு மக்களுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள்.</p>
