மோடியா தமிழ்நாடா ஒரு கை பார்த்துவிடலாம்
31 Mar 2026, 4:50 pm
<p><strong>மோடியா? தமிழ்நாடா?: ஒரு கை பார்த்துவிடலாம்!</strong></p>
<p>திருவண்ணாமலை, மார்ச் 31- “தமிழகச் சட்டமன்றத் தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான களமல்ல; அது தில்லிக்கும் தமிழ்நாட்டிற்குமான அதிகாரப் போர். இதில் மோடியா அல்லது தமிழ்நாடா என்பதை ஒரு கை பார்த்துவிட வேண்டும்” எனத் திருவண்ணாமலையில் கடலெனக் கூடியிருந்த மக்களிடையே திமுக இளைஞரணிச் செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் உணர்ச்சி பொங்க முழக்கமிட்டார். அதிரடி வாக்குறுதிகள் செவ்வாயன்று திருவண்ணாமலை தொகுதி வேட்பாளர் எ.வ.வேலுவை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த அவர், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளைக் கொண்டு எதிர்க்கட்சிகளின் வியூகத்தைச் சிதறடித்தார். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகை ₹2,000 ஆகவும், முதியோர் உதவித்தொகை ₹2,000 ஆகவும் உயர்த்தப்படும் என்ற அதிரடி அறிவிப்புகளை முன்வைத்தார். குறிப்பாக, கல்வித் துறையில் புரட்சி செய்யும் நோக்கில் காலை உணவுத் திட்டம் எட்டாம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் என்றும், அடுத்த ஐந்தாண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். தில்லிக்கு ‘அவுட் ஆப் கண்ட்ரோல்’ தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த உதயநிதி, “பாஜகவின் நிழலாகச் செயல்படும் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்திற்குள் மோடியையும் அமித் ஷாவையும் அழைத்து வரத் துடிக்கிறார். ஆனால், தமிழ்நாடு எப்போதும் தில்லியின் கட்டுப்பாட்டுக்குள் வராத (Out of Control) மாநிலம் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உலகிற்குப் பறைசாற்றும்” என்றார். உறுதிமிக்க கூட்டணி பலம் இக்கூட்டத்தில் வேட்பாளர்கள் எ.வ.வேலு (திருவண்ணாமலை), கு.பிச்சாண்டி(கீழ் பென்னாத்தூர்), மு.பெ.கிரி(செங்கம்), பெ.சு.தி.சரவணன்(கலசப் பாக்கம்), பிரியா விஜயரங்கன் மற்றும் சிபிஎம், சிபிஐ, தேமுதிக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தோழமைத் தலைவர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றனர். ‘இல்லத்தரசித் திட்டம்’ மூலம் வழங்கப்படும் ₹8,000 மதிப்புள்ள கூப்பன் திட்டம் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் என்றும், எ.வ.வேலுவை ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.</p>
