நெசவாளர்களிடம் மட்டுமே வேட்டி, சேலை கொள்முதல் செய்யப்படும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி பேச்சு
14 Jun 2026, 1:05 am
<p><strong>நெசவாளர்களிடம் மட்டுமே வேட்டி, சேலை கொள்முதல் செய்யப்படும் கைத்தறித்துறை அமைச்சர் விஜய்பாலாஜி பேச்சு</strong></p><p>வேலூர், ஜூன் 13- வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ம.விஜய்பாலாஜி தலைமையில் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பி.எஸ்.லீலா அலெக்ஸ் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ம.விஜய்பாலாஜி, “கடந்த ஆட்சியில் இலவச வேட்டி, சேலைகள் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், இனிவரும் காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த கைத்தறி மற்றும் விசைத்தறி நெச வாளர்களிடமிருந்து மட்டுமே அவை கொள்முதல் செய்யப்படும்” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், நெச வாளர்களுக்கு உரிய கூலி கிடைப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், கோ-ஆப்டெக்ஸ் விற்பனையை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பின்னலாடை உற்பத்தியைப் பாதிக்கும் 11 சதவீத ஜிஎஸ்டி வரி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால் நூல் விலை குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசு சார்பில் பருத்தி கொள்முதல் செய்து நூல் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார். வேலூரில் மாம்பழக் கூழ் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும், மகிமண்டலத்தில் விவசாயிகளுக்குப் பாதிப்பின்றி சிப்காட் அமைக்கப்பட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். மேலும், பாதாளச் சாக்கடைப் பணிகளை ஜூலை 15-க்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் வளர்ச்சித் திட்டங்களை மாதம் ஒருமுறை நேரில் ஆய்வு செய்வேன் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
