தமிழறிஞர் சீகன்பால்குவிற்கு ரூ.7 கோடியில் சிலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல்
21 Dec 2025, 3:21 pm

தமிழறிஞர் சீகன்பால்குவிற்கு ரூ.7 கோடியில் சிலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல்

மயிலாடுதுறை, டிச.21- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகே, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், இந்தியாவிலேயே முதன்முறையாக அச்சு இயந்திரத்தை நிறுவி காகிதம் மூலம் பைபிளை தமிழில் அச்சிட்டு வெளியிட்ட தமிழறிஞர் சீகன் பால்குவிற்கு ரூ.7 கோடி மதிப்பீட்டில் உருவச் சிலையுடன் அரங்கம் கட்டுவதற்கு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக அரசு சீகன் பால்குவின் பெருமையை போற்றும் வகையில், சட்டமன்றத்தில், சீகன் பால்குவுக்கு, உருவச் சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பின்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மூலம் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் 9,490 சதுர அடி பரப்பளவில் தரைதளத்தில், 350 நபர்கள் அமரும் வகையில், திருமண மண்டபம், உணவருந்தும் அறை, சமையலறை, வரவேற்பறை, கழிவறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டுவதற்கான அடிக்கல் நடும் நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி, பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரான், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கவிதா, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுண சங்கரி, தரங்கம்பாடி பேரூராட்சி துணைத் தலைவர் பொன் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.