தாம்பரம் அருகே அமைச்சர் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு – ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு!
4 hours before

காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதிய விபத்தில், இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த இறையன்பு (26), தனது ஹோண்டா டியோ மோட்டார் சைக்கிளில் அப்பகுதியில் உள்ள துலுக்கத்தம்மன் கோயில் திருவிழாவுக்குச் சென்று கொண்டிருந்தார். காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையைக் கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கிச் சென்ற மாருதி எர்டிகா கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த இறையன்புவை, அருகிலிருந்த பொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் எஸ்.பி. கோயிலில் உள்ள அரசு அவசர சிகிச்சை மையத்திற்கு அனுப்பி வைத்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட போலீஸார், விபத்தில் தொடர்புடைய மாருதி எர்டிகா கார் மற்றும் ஹோண்டா டியோ ஆகிய இரு வாகனங்களையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய கார் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்குச் சொந்தமானது என்பதும், விபத்தின் போது காரை ஓட்டி வந்தவர் மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் சின்ன அக்னி (28) என்பதும் தெரியவந்தது. உயிரிழந்த இறையன்புவின் தந்தை சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், கார் ஓட்டுநர் சின்ன அக்னி மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.