திருவள்ளுவருக்கு காவி பூசி அரசியல் ஆதாயம் தேடுவது ஏற்புடையதல்ல! அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்
31 May 2026, 8:44 pm

திருவள்ளுவருக்கு காவி பூசி அரசியல் ஆதாயம் தேடுவது ஏற்புடையதல்ல! அமைச்சர் அருண்ராஜ் கண்டனம்

சென்னை, மே 31 - சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் சிலைக்கு காவி சாயம் பூசப்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வள்ளுவரை களங்கப்படுத்தாதீர்கள் திருவள்ளுவருக்கு காவி பூசுவதும் அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட முயல்வதும் எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல என்று அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் தனது பதிவில், திருவள்ளுவர் உலகப் பொதுமறை தந்தவர் என்றும், அவரை ஒரு குறுகிய வட்டத்திற்குள் சுருக்குவது அவரது உலகளாவிய சிந்தனைகளை சிறுமைப்படுத்துவதற்குச் சமம் என்றும் தெரிவித்துள்ளார்.

திருவள்ளுவர் எந்தவொரு மதத்திற்கும் சாதிக்கும் இனத்திற்கும் தன்னைச் சுருக்கிக் கொள்ளவில்லை என்றும், கடவுள் வாழ்த்து அதிகாரத்தில்கூட ‘ஆதி பகவன்’, ‘மலர்மிசை ஏகினான்’ என்று பொதுவான சொற்களையே பயன்படுத்தினாரே தவிர குறிப்பிட்ட மதக் கடவுளின் பெயரை குறிப்பிடவில்லை என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

வள்ளுவர் நமக்குக் கற்றுக் கொடுத்தது ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற சமத்துவத்தைத்தான் என்று வலியுறுத்திய அமைச்சர் அருண்ராஜ், அவரது உடைகளின் நிறத்தை மாற்றுவதை விடுத்து அவரது குறள் காட்டும் நல்வழியில் நடக்க முயல்வதே உண்மையான மரியாதை என்று எடுத்துரைத்துள்ளார்.