திருச்சி விரைவு செய்திகள்
3 Jan 2026, 4:57 pm

பால் விலையை உயர்த்த கோரி ஜன.8-இல் மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு

அரியலூர், ஜன.3- தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்க அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் தலைமை வகித்தார். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரியலூர் மாவட்டச் செயலாளர் மணிவேல், பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி, சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயலாளர் சொக்கலிங்கம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்டக் குழு உறுப்பினர்கள் தட்சிணாமூர்த்தி, சேகர், மனோகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், மாநில மாநாடு அறைகூவல் படி 2026 ஜனவரி 8 இல் தமிழ்நாடு முழுவதும் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.10 விலை உயர்த்த கேட்டு, மாடுகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோட்டில் ஜனவரி 8 ஆம் தேதி காலை 10 மணிக்கு மாவட்டத் தலைவர் மகாதேவன் தலைமையிலும், அணைக்குடத்தில் மாவட்டக் குழு உறுப்பினர் சின்னதுரை தலைமையிலும், வி.கைகாட்டியில் ஜனவரி 8 இல் மாலை 4 மணிக்கு மாவட்ட துணைச் செயலாளர் அன்புமதி தலைமையிலும், அதே போல ஆண்டிமடம் வட்டம் கவரப்பாளையம் பால் கூட்டுறவு சங்கத்தின் முன்பு மாவட்ட துணைச் செயலாளர் ஜெரோம் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

டிப்பர் லாரி மோதி ஓய்வுபெற்ற ஆசிரியர் பலி

அரியலூர், ஜன.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள சின்னவளையம் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் மனைவி தேவி (61). இவர் கங்கைகொண்ட சோழபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி கடந்த ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். இவரது கணவர் பாண்டியன் ஹோமியோபதி மருத்துவராக உள்ளார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள தேவியின் பெற்றோரை பார்ப்பதற்காக, தனது கணவர் பாண்டியனுடன் மொபைட்டில் பின்னால் உட்கார்ந்து கொண்டு ஜெயங்கொண்டம் நான்கு ரோடு அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஆயங்குடியில் இருந்து பெரம்பலூர் நோக்கி வந்த டிப்பர் லாரி பாண்டியன் மோட்டார் சைக்கிள் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த தேவியை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பரிசோதனை செய்த மருத்துவர் தற்போது அவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தீவிர பிரிவில் சேர்த்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் தெரிவித்தார். இதுகுறித்து அறிந்த ஜெயங்கொண்டம் போலீசார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் ஆயங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (31) என்பவரை கைது செய்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக தாம்பரத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தஞ்சாவூர், ஜன.3- பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே நிர்வாகம், ராமேஸ்வரத்தில் இருந்து பட்டுக்கோட்டை வழியாக தாம்பரத்திற்கு, ராமேஸ்வரம் - தாம்பரம் - ராமேஸ்வரம் சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது. ராமேஸ்வரம் - தாம்பரம் சிறப்பு ரயில் ஜன.13, ஜன.20 இரண்டு நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து இரவு 8.15 மணிக்கு புறப்பட்டு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி வழியாக பட்டுக்கோட்டைக்கு நள்ளிரவு 12.14 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், பேரளம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு வழியாக தாம்பரத்திற்கு புதன்கிழமை காலை 10.15 மணிக்கு சென்றடைகிறது. மறு மார்க்கத்தில் தாம்பரம் - ராமேஸ்வரம் சிறப்பு விரைவு ரயில் ஜன.14 மற்றும் ஜன.20 இரண்டு நாட்களில் தாம்பரத்தில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் அதே வழியில் பட்டுக்கோட்டைக்கு இரவு 9.25 மணிக்கு வந்தடைந்து, தொடர்ந்து ராமேஸ்வரத்திற்கு அதிகாலை 3.30 மணிக்கு சென்று அடைகிறது. இந்த சிறப்பு ரயிலில் மூன்றடுக்கு குளிர்சாதன வசதி உடைய பெட்டிகள் 3, குளிர் சாதன வசதி இல்லாத படுக்கை வசதி உள்ள பெட்டிகள் 9, முன்பதிவில்லாத பொது பெட்டிகள் 4, சரக்கு பெட்டி 1, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி 1 என மொத்தம் 18 ஐசிஎப் ரயில் பெட்டிகள் இருக்கும். பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு ரயில்களை இயக்க உத்தரவிட்ட தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என் சிங், தலைமை பயணிகள் போக்குவரத்து மேலாளர் சுப்பிரமணியம், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி, முதுநிலை கோட்ட இயக்கக மேலாளர் மா.ரமேஷ் உள்ளிட்டோர் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பினர்.

ஊராட்சி செயலர் கூட்டம்

பாபநாசம், ஜன.3- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஊராட்சி செயலாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஆனந்தராஜ் தலைமை வகித்தார். இதில், ஊராட்சிகளில் செயல்படுத்தப்படும் குடிநீர், பொது சுகாதாரம், தெருவிளக்கு, பிரதமர் வீடு கட்டும் திட்டம், தனிநபர் கழிவறை, வரி, வருவாய் இனங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.