வளர்ச்சித் திட்டங்களுக்குள் காணாமல் போகும் புலம்பெயர் தொழிலாளர்கள் - ஜி. ரவிச்சந்திரன்
5 Mar 2026, 3:59 pm

வளர்ச்சித் திட்டங்களுக்குள் காணாமல் போகும் புலம்பெயர் தொழிலாளர்கள்

இந்திய நகரங்களில் உயர்ந்து நிற்கும் வானளாவிய கட்டிடங்களும், மெட்ரோ ரயில்களும் “வளர்ச்சி” என்ற பெயரில் கொண்டாடப்படுகின்றன. ஆனால், இந்த வளர்ச்சியின் அடித்தளத்தில் யாரும் பேசாத புலம்பெயர் தொழிலாளர்களின் உழைப்பும் கண்ணீரும் புதைந்து கிடக்கின்றன. இன்றைய உலகப் பொருளாதார அமைப்பில், உழைக்கும் மக்களின் இடப்பெயர்வு இன்றி எவ்வகையான வளர்ச்சியும் சாத்தியமில்லை என்பதே நிதர்சனம். மறைக்கப்பட்ட கணக்குகளும் கசப்பான உண்மைகளும் 2025-ஆம் ஆண்டின் அதிகாரப்பூர்வ கணக்கின்படி, தமிழகத்தில் சுமார் 12.17 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளனர். இதில் ஒடிஷா, பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம். ஆனால், இது பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை மட்டுமே.

நடைமுறையில் 70 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் தமிழகத்தில் இருக்கக்கூடும் என அதிகாரிகள் கணிக்கின்றனர். இந்த மிகப்பெரிய இடைவெளி, இவர்களின் உழைப்பு எந்த அளவிற்கு “கணக்கில் கொள்ளப்படாமல்” சுரண்டப்படுகிறது என்பதற்கான சாட்சியாகும். பிற மாநிலங்களில் புலம்பெயர் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அநீதிகள் பல அடுக்குகளைக் கொண்டவை. மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகள், முறையான ஆவணங்கள் இல்லாமை, ரேஷன், சுகாதாரம், கல்வி போன்ற அடிப்படை உரிமைகள் மறுக்கப்படுதல் என இவர்களின் வாழ்வு விளிம்புநிலையிலேயே உள்ளது. வேலை இட விபத்துகள், சம்பள நிலுவை மற்றும் தரமற்ற தங்குமிடங்கள் இவர்களின் அன்றாடத் துயரங்களாகிவிட்டன. 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலம், இந்த உழைக்கும் கரங்களைப் பாதுகாப்பற்ற நிலையில் வீதியில் விட்டதன் மூலம் வளர்ச்சியின் கோர முகத்தை உலகுக்குக் காட்டியது.

சுரண்டலுக்கான அரசியல் திரை: அந்நியர் வெறுப்பு (Xenophobia) பொருளாதார நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண முடியாத ஆட்சியாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்களைப் பலியாடுகளாக மாற்றுகின்றனர். “புலம்பெயர்ந்து வந்து உள்ளூர் வேலைவாய்ப்புகளைப் பறிக்கிறார்கள்” என்ற போலிப் பிரச்சாரத்தின் மூலம் ‘அந்நியர் வெறுப்பு’ (Xenophobia) அரசியல் முன்னெடுக்கப்படுகிறது. உண்மையில், உள்ளூர் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு இடையே செயற்கையான போட்டியை உருவாக்குவதன் மூலம், இரு தரப்பினரையும் குறைந்த கூலியில் பணியமர்த்தும் முதலாளித்துவச் சூழலே இங்கு நிலவுகிறது.

இத்தகைய சுரண்டலுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கவே புதிய ‘தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்’ கொண்டு வரப்பட்டுள்ளன. இவை தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்குப் பதில், “அமர்த்து, துரத்து” என்பன போன்ற முதலாளித்துவச் சாதக அம்சங்களையே கொண்டுள்ளன. மார்க்சியப் பார்வையில் உழைப்புச் சுரண்டல் முதலாளித்துவப் பொருளாதாரத்தில் தொழிலாளி ஒரு மனிதராக அல்லாமல், வெறும் ‘உழைப்பு அலகாக’ (Labour Unit) மட்டுமே பார்க்கப்படுகிறார். காரல் மார்க்ஸ் விளக்கிய ‘உபரி மதிப்பு’ (Surplus Value) கோட்பாடு இன்றைக்கும் இவர்களின் வாழ்வில் துல்லியமாகப் பொருந்துகிறது.

தொழிலாளி ஒரு நாளில் 1,000 ரூபாய் மதிப்புள்ள உற்பத்தியைச் செய்கிறார் என்றால், அவருக்குக் கூலியாக 400 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மீதமுள்ள 600 ரூபாய் ‘உபரி மதிப்பு’ என்ற பெயரில் முதலாளியின் கூடுதல் லாபமாக மாறுகிறது. புலம்பெயர் தொழிலாளர்களின் விஷயத்தில் இந்தச் சுரண்டல் இன்னும் தீவிரமாக உள்ளது. ஒன்றிணைவோம்! வர்க்கப் பார்வையில் பார்க்கும்போது, புலம்பெயர் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மேலும் கூடுதலாக சுரண்டப்படுவதோடு, சமூக ரீதியாக இரண்டாம் தரக் குடிமக்களாகவும் ஒடுக்கப்படுகிறார்கள். இந்த இரட்டை ஒடுக்குமுறையை முறியடிக்க, தொழிலாளர் வர்க்கம் மொழி மற்றும் இன அடையாளங்களைக் கடந்து வர்க்க ரீதியாக ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். கட்டுரையாளர் : இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர், விழுப்புரம்