வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை
19 Jul 2026, 10:51 pm
<p><strong>வறண்டு கிடக்கும் மேட்டூர் அணை</strong></p><p>சேலம், ஜூலை 19 - கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் இதுவரை தண்ணீர் திறக்கப்படாததால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 30 கனஅடியாகச் சரிந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருவதால் சம்பா சாகுபடிக்கான நீர் திறப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. மேட்டூர் அணை தண்ணீ ரை நம்பி, டெல்டாவின் 12 மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வழக்கமாக அணையின் நீர்மட்டம் 90 அடியாக இருந்தால் பருவமழையை எதிர்நோக்கி ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படும். ஆனால், இந்தாண்டு அணையின் நீர் இருப்பும், நீர்வரத்தும் போதியளவு இல்லாததால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தற்போது நீர்மட்டம் 75 அடியாக உள்ளது. கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பிய பிறகே தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீரை திறக்க முடியும் என்று கர்நாடக நீர்வளத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள் ளன. மேலும், கபினி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப் படாததோடு, தமிழக எல்லையில் காவிரியுடன் கலக்கும் துணை நதியான பாலாறும் வறண்டுள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து சனிக்கிழமை காலை விநாடிக்கு 30 கன அடியாக இருந்தது. பருவமழை கைகொடுத்து கர்நாடக அணைகள் நிரம்பினால் மட்டுமே, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும். அதன்பிறகே சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது குறித்து முடிவு எடுக்க முடியும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
