வாட்ஸ்அப் பயனர்களை உளவு பார்க்க முயற்சி: இஸ்ரேல் நிறுவனம் மீது மெட்டா அவமதிப்பு வழக்கு!
8 Jun 2026, 9:11 pm

வாட்ஸ்அப் மற்றும் அதன் பயனர்களின் ரகசியத் தகவல்களை ஒருபோதும் உளவு பார்க்கக் கூடாது என்ற நீதிமன்றத்தின் நிரந்தரத் தடையுத்தரவை மீறியதற்காக, இஸ்ரேலிய உளவு மென்பொருள் நிறுவனமான NSO-விற்கு எதிராக அமெரிக்கக் கூட்டாட்சி நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்போவதாக மெட்டா (Meta) நிறுவனம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த உளவு மென்பொருள் நிறுவனமான NSO, வாட்ஸ்அப் செய்திச் சேவையைப் பயன்படுத்திப் புதிய 'ஸ்பியர் ஃபிஷிங்' (Spear Phishing) தாக்குதல்களை நடத்த முயன்றதாகவும், அதனைத் தங்களது பாதுகாப்பு அமைப்பு கண்டறிந்து முறியடித்துள்ளதாகவும் மெட்டா நிறுவனம் திங்களன்று தெரிவித்துள்ளது.

முன்பு நடத்தப்பட்ட "1-கிளிக் ஃபிஷிங்" தாக்குதலைப் போன்றே இந்த புதிய முயற்சியும் அமைந்திருந்ததாக மெட்டா குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலில், பயனர்கள் தங்களுக்கு வரும் இணைப்பு (Link) அல்லது கோப்பை ஒரே ஒருமுறை கிளிக் செய்தால் போதும்; அவர்களின் போன் அல்லது கணக்குகள் முற்றிலுமாக ஹேக் செய்யப்பட்டு, ரகசிய விவரங்கள் அனைத்தும் திருடப்பட்டுவிடும்.

இந்தத் தாக்குதலுக்காக NSO நிறுவனம் தனது தளத்தில் உருவாக்கியிருந்த சோதனைக் கணக்குகள் மற்றும் குழுக்களை வாட்ஸ்அப் கண்டறிந்து நீக்கியுள்ளது. இச்சம்பவம் குறித்துக் கருத்து கேட்கத் தொடர்பு கொண்டபோது NSO நிறுவனம் உடனடியாக பதிலளிக்க மறுத்து விட்டதாக ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு, மெட்டாவின் வாட்ஸ்அப் தளத்தை ஹேக் செய்வதை உடனடியாக நிறுத்துமாறும், 167 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதம் செலுத்தும்படியும் அமெரிக்க நீதிமன்றம் NSO-வுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்தத் தடை உத்தரவு தங்களை வணிக ரீதியாக முற்றிலும் முடக்கிவிடும் என்றும், அபராதத் தொகையைக் குறைக்கும்படியும் நீதிமன்றத்தில் NSO நிறுவனம் மன்றாடியது. இதனைத் தொடர்ந்து, அபராதத் தொகையை 4 மில்லியன் அமெரிக்க டாலராக நீதிமன்றம் குறைத்தது.

எனினும் அந்நிறுவனம் வாட்ஸ் அப் பயனர்களை தொடர்ந்து ஹேக் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனிடையே, NSO-வின் 'பெகாசஸ்' (Pegasus) ஹேக்கிங் மென்பொருள் மூலம் உலகளவில் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து வருவதாகத் தொடர்ச்சியான குற்றச்சாட்டுகள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.