ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025
9 Dec 2025, 4:25 pm

ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025

கோப்பை வெல்வது யார்? ஜெர்மனி - ஸ்பெயின் இன்று பலப்பரீட்சை

2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் 21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதனன்று இறுதி ஆட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்னன் மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி - ஸ்பெயின் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 10ஆவது முறையாக இறுதிக்கு முன்னேறிய ஜெர்மனி அணி, இதுவரை 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த ஆண்டு சீசனில் கூட (2023 - அமெரிக்கா) ஜெர்மனி தான் கோப்பையை வென்றது. இத்தகைய சூழலில் மீண்டும் 8ஆவது முறையாக ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை கைப்பற்றும் முனைப்பில் ஜெர்மனி களமிறங்குகிறது. அதே போல முதல் முறையாக இறுதிக்கு முன்னேறியுள்ள ஸ்பெயின் அணி, சாம்பியன் மகுடத்தை கைப்பற்றி புதிய வரலாறு படைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. எனவே இரு அணிகளும் கோப்பை மீது குறியாக களமிறங்குவதால், சென்னையில் நடைபெறும் இறுதி ஆட்டம் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாருக்கு சாதகம்?

இறுதி ஆட்டத்தில் யாருக்கு கோப்பை என உறுதியாக கருத்து சொல்ல முடியாது. காரணம் இது 21 வயதிற்குட்பட்ட இளசுகள் பங்கற்கும் ஆட்டம். இளமை துள்ளல் அதிகமாக இருக்கும் என்பதால் இறுதி ஆட்டத்தில் என்ன நடக்கும் என்பதை ஆருடமாக கூற முடியாது. ஆனால் அனுபவத்தில் ஜெர்மனி சீனியர் என்பதால் அந்த அணிக்கு கோப்பை வெல்ல அனைத்து சாதகமான சூழலுடன், 10% கூடுதல் வாய்ப்பும் உள்ளது.

ஜெர்மனி - ஸ்பெயின் நேரம் : இரவு 8:00 மணி இடம் : சென்னை, தமிழ்நாடு சேனல் : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் செலக்ட் -1, ஜியோ ஸ்டார் (ஓடிடி)

3ஆவது இடம் பிடிக்குமா இந்தியா?

அரையிறுதியில் போட்டியை நடத்தும் நாடான இந்தியா, ஜெர்மனியிடம் 1-5 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியை தழுவியது. இதனால் 2 முறை சாம்பியனான இந்தியா இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில், அரையிறுதியில் தோல்வியடைந்த மற்றொரு அணியான அர்ஜெண்டினா அணியுடன் (ஸ்பெயின் அணியிடம் வீழ்ந்தது) 3ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் இந்தியா விளையாடுகிறது. இந்த ஆட்டம் இறுதிப் போட்டிக்கு முன்னதாக நடைபெறுகிறது. அதே போல 7ஆவது இடத்திற்கான ஆட்டத்தில் பிரான்ஸ் - நியூஸிலாந்து (மதியம் 12:30) அணியும், 5ஆவது இடத்திற்கான போட்டியில் பெல்ஜியம் - நெதர்லாந்து (மதியம் 3:00 மணி) அணிகள் மோதுகின்றன. இந்த இரு ஆட்டங்களும் சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெறுகிறது.

இந்தியா - அர்ஜெண்டினா நேரம் : மாலை 5:30 மணி இடம் : சென்னை, தமிழ்நாடு