மேகதாது அணை விவகாரம்: மே 29 தஞ்சையில் இடதுசாரி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்!
23 May 2026, 8:11 pm

கர்நாடக அரசின் மேகதாது அணை கட்டப்படுவதைத் தடுத்திடக் கோரி வரும் மே 29-ஆம் தேதி தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக இடதுசாரி கட்சிகள் அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக சிபிஎம், சிபிஐ, சிபிஐ(எம்.எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரி வெளிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,

“தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தின் உயிர் நாடியாக காவிரி நதிநீர் அமைந்திருக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 20ஆம் நூற்றாண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர்நாடக அரசு, தன்னிச்சையாக நிராகரித்து வந்ததால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி, நீர் பங்கீட்டு அளவை கண்காணிக்க மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்து, பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கியது. கர்நாடக மாநில அரசின் அத்துமீறல் நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், தமிழ்நாடு அரசும் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் முறையீட்டை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், கடந்த 2025 நவம்பர் 13-ஆம் தேதி “மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்யலாம்" என தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு சார்பு தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2025 டிசம்பர் 2 ஆம் தேதி தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசும் டிசம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த வழக்கில் அலட்சியம் காட்டி வந்த நிலையில், " மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த புதிய விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்" என கர்நாடக மாநில அரசின் துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

"காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை" என ஆத்திரமூட்டும் வகையிலும் பேசியுள்ளார்.

காவிரி நதிநீர் பங்கீடு, நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிற கர்நாடக அரசையும், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி, வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 29ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தஞ்சாவூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட்) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.