தியாகி வேலுச்சாமி நினைவு தினம் அனுசரிப்பு
10 Mar 2026, 3:51 pm
<p><strong>தியாகி வேலுச்சாமி நினைவு தினம் அனுசரிப்பு</strong></p>
<p>நாமக்கல், மார்ச் 10- கந்துவட்டி கும்பல் தாக்குதலில் உயிரிழந்த தியாகி வேலுச்சாமி நினைவு தினம் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுசரிக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் தோழர் வேலுசாமி, கந்துவட்டி கும்பலின் அராஜகத்திற்கு எதிராக போரிட்டவர். வட்டிப் பணம் கட்ட முடியாத ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, அதை சமூக வலைதளங்களில் பரப்பிய கந்துவட்டி கும்பலின் கொடூரத்தை எதிர்த்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆத்திரமடைந்த அந்த கும்பல், காவல் நிலைய வாசலிலேயே தோழர் வேலுசாமியை கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்தது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்தான வழக்குகள் நீதிமன்றத்தில் நீண்ட வருடங்களாக நடைபெற்று வந்தது. மேலும் இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் தோழர் வேலுச்சாமி அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதன்ஒருபகுதியாக செவ்வாயன்று பள்ளிபாளையம் காவேரி ஆர்.எஸ், ஆவரங்காடு கட்சி அலுவலகம் மற்றும் அக்ரகாரம் பேருந்து நிறுத்த பகுதியில் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது. அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு கட்சியின் பள்ளிபாளையம் தெற்கு ஒன்றியச் செயலாளர் எம்.லட்சுமணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், சிபிஎம் முன்னாள் செயலாளர் ஆர்.ரவி, மறைந்த தோழர் வேலுச்சாமியின் தம்பி சண்முகசுந்தரம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள், கட்சிக் கிளை செயலாளர்கள் உள்ளிட்ட பலர் தோழர் வேலுச்சாமி அவர்களின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.</p>
