மணிப்பூரில் தொடரும் ரத்த ஆறு: இரட்டை இஞ்சின் படுதோல்வி!
17 May 2026, 9:47 pm

மணிப்பூரில் தொடரும் ரத்த ஆறு: இரட்டை இஞ்சின் படுதோல்வி!

மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளதும், அப்பாவிப் பொதுமக்கள் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டு வரு வதும் இரட்டை இஞ்சின் என்று பெருமை பேசும் பாஜக அரசுகளின் மிக மோசமான நிர்வாகத் தோல்வியையே அப்பட்டமாக வெளிப்படுத்து கிறது. கடந்த மே 13 அன்று மூன்று குக்கி-ஜோ திருச்சபை தலைவர்கள் தீவிரவாதிகளால் கொடூரமாகக் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் பதற்றம் உச்சக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து குக்கி மற்றும் நாகா சமூகங்களைச் சேர்ந்த 38-க்கும் மேற்பட்ட மக்கள் பல்வேறு ஆயுதக் குழுக்களால் சிறைபிடிக்கப்பட்டனர். பல்வேறு சிவில் சமூக அமைப்புகளின் பேச்சு வார்த்தைக்குப் பிறகு 28 பேர் விடுவிக்கப்பட்ட போதிலும், இன்னும் 14 குக்கி பழங்குடியின மக்கள் ஆயுதக் குழுக்களின் பிடியில் தவித்து வருவது அம்மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு முற்றி லும் சீர்குலைந்துவிட்டதையே காட்டுகிறது.

இந்தக் கொடூரங்களுக்கு எதிராகச் சுராசந்த்பூர் மற்றும் காங்க்போக்பி மாவட்டங் களில் பல்லாயிரக்கணக்கான குக்கி-ஜோ பழங்குடியின மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றனர். பிணைக்கைதிகளை நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்புப் பாதுகாப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும் மற்றும் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் ஒட்டுமொத்த மாநிலமும் 48 மணி நேர முழு அடைப்பால் ஸ்தம்பித்துள்ளது. வன்முறையை ஒடுக்கத் தவறிய பைரேன் சிங் தலைமையிலான மாநில அரசைக் கலைத்துவிட்டு, உடனடியாக மீண்டும் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பழங்குடியின அமைப்புகள் தந்தி அனுப்பும் அவலநிலை தொடர்கிறது.

இரண்டாண்டுகளுக்கும் மேலாக 260-க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலிவாங்கி, 60,000-க்கும் அதிகமான மக்களை அகதிகளாக்கிய மணிப்பூர் இனக் கலவரத்திற்கு காரணமான பாஜக அரசால் அதற்குத் தீர்வு காண இயலவில்லை. இதில் தோல்வியடைந்த நரேந்திர மோடியின் அரசு, வெறுமனே விசாரணைக் கமிஷன்களின் காலக்கெடுவை நீட்டிப்பதி லேயே (ஐந்தாவது முறையாக நவம்பர் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது) குறியாக உள்ளது. தேசபக்தி மற்றும் சுதேசி குறித்துச் சாமானிய மக்களுக்கு உபதேசம் செய்யும் பிரதமர் மோடி, சொந்த நாட்டு மக்கள் தீவிரவாதக் குழுக் களால் கடத்தப்பட்டுப் படுகொலை செய்யப்படும் போது மௌனச் சாமியாராக வேடிக்கை பார்ப்பது ஏன்? கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தேசத்தின் சொத்துகளைக் கூட்டுக்களவாக மடை மாற்றுவதில் காட்டும் தீவிரத்தை, மணிப்பூரில் அமைதியை மீட்டெடுப்பதில் இந்த நிர்வாகத் திறனற்ற மோடி அரசு காட்டாதது ஏன்? “இரட்டை எஞ்சின்” அரசின் இந்த அப்பட்டமான மக்கள் விரோத, பாசிசப் போக்கை முற்போக்குச் சக்திகள் அனைத்தும் ஒன்றிணைந்து வீரியத்துடன் அம்பலப்படுத்த வேண்டிய தருணம் இதுவே.