தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மீண்டும் புத்துயிர் பெறும் அலையாத்திக் காடுகள் (Mangroves)! - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

11 Jun 2026, 6:37 pm
மீண்டும் புத்துயிர் பெறும் அலையாத்திக் காடுகள் (Mangroves)! - ஆய்வாளர்கள் மகிழ்ச்சி

மனிதர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அலையாத்திக் காடுகள் (Mangroves), தற்போது உலகளவில் வியக்கத்தக்க வகையில் மீண்டும் செழித்து வளரத் தொடங்கியுள்ளது புதிய ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அலையாத்தி காடுகள் என்றால் என்ன:

அலையாத்தி காடுகள் (Mangrove Forests) என்பது கடல்நீரும் நன்னீரும் சங்கமிக்கும் கடலோரப் பகுதிகளில், சதுப்புநிலங்களில் வளரும் தனித்துவமான தாவரக் கூட்டமைப்பு ஆகும். இவற்றுக்கு சதுப்புநிலக் காடுகள் என்ற மற்றொரு பெயரும் உண்டு.

கடல் அலைகளின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, கரையை நோக்கிக் வரும் ஆக்ரோஷமான அலையை 'ஆத்தி' (தணித்து) அனுப்புவதால், இதற்குத் தமிழில் அலையாத்தி காடுகள் என்று மிகக் காரணப் பெயராக அழைக்கப்படுகிறது.

இந்த அலையாத்திக் காடுகள் புயல் மற்றும் சுனாமியிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் அரணாகவும், பூமியை வெப்பமயமாக்கும் கரியமில வாயுவை உறிஞ்சுவதிலும் மிக முக்கியப் பங்கு வகித்து வருகின்றன.

அலையாத்தி காடுகளின் முக்கியத்துவம்

ஆனால், கடந்த காலங்களில் இறால் பண்ணைகள் அமைப்பதற்காகவும், நகரமயமாக்கலுக்காகவும் இந்தச் சதுப்புநில மரங்கள் மிக வேகமாக அழிக்கப்பட்டன. இதனால் அலையாத்திக் காடுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது மட்டுமின்றி, மனிதர்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்குப் பெரும் பாதிப்பும் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2010ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகளவில் அலையாத்திக் காடுகள் அழியும் விகிதத்தை விட, அவை புதிதாக உருவாகும் விகிதம் அதிகரித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

2004 சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களுக்குப் பின் மக்களிடையே ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக, அலையாத்திக் காடுகளின் முக்கியத்துவத்தை புரிந்துகொண்ட மக்கள் அதனைப் பாதுகாக்கத் தொடங்கியுள்ளனர்.

மிக முக்கியமாக, அலையாத்திக் காடுகள் இயற்கையாகவே தங்களை மீட்டுருவாக்கம் செய்துகொள்ளும் அபாரத் திறன் கொண்டவை என்பதால் அதனை அழிக்காமல் இருந்தாலே போதும் அவை செழித்து வளரும்.

அலையாத்திக் காடுகளின் சிறப்புகள்

அலையாத்திக் காடுகள் நிலத்தில் உள்ள சாதாரண காடுகளை விட 5 மடங்கு அதிக கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சிச் சேமித்து வைக்கின்றன. இவற்றின் அடர்ந்த, பின்னப்பட்ட வேர்கள் கடல் அலைகளின் வேகத்தைக் குறைத்து, புயல் சீற்றம் மற்றும் சுனாமியிலிருந்து கடற்கரைக் கிராமங்களைக் காக்கின்றன. இதன் வேர்கள் பல கடல்வாழ் உயிரினங்கள் மற்றும் மீன் குஞ்சுகள் எதிரி மீன்களிடமிருந்து தப்பித்து, இனப்பெருக்கம் செய்யவும், பாதுகாப்பாக வளரவும் சிறந்த புகலிடமாக உள்ளது.

காடுகளின் அழிப்பு

கடந்த 1980ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு வரை ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா முழுவதும் சுமார் 12,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவிற்கு அலையாத்திக் காடுகள் அழிக்கப்பட்டன. இது ஜமைக்கா நாட்டின் பரப்பளவிற்கு நிகராகும்.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில் சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தால், காடுகளின் நிகர இழப்பு 849 சதுர கிலோமீட்டராகக் குறைந்துள்ளது.

இந்தோனேசியா மற்றும் மியான்மர் போன்ற அலையாத்திக் காடுகள் அதிகம் உள்ள நாடுகளில், தற்போது காடுகளின் பரப்பளவு நிலையாக இருப்பதோடு, புதிய காடுகளும் வளர்ந்து வருகின்றன. 2004 சுனாமிக்குப் பின் இந்தோனேசியாவிலும், 2008இல் ஏற்பட்ட நர்கிஸ் புயல் மற்றும் 2016இல் விதிக்கப்பட்ட காடுகள் வெட்டுவதற்கான நாடு தழுவிய தடை உத்தரவுக்குப் பின் மியான்மரிலும் பொதுமக்களிடையே பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதோடு காடுகள் அழிப்பும் வெகுவாகக் குறைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தப் புதிய ஆய்வில் நாசாவின் (Landsat) செயற்கைக்கோள் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இது மரங்களின் அடர்த்தியில் ஏற்படும் சிறிய மாற்றங்களையும் துல்லியமாகக் காட்டக்கூடியது. இதில், நாம் நினைத்ததை விட அதிக எண்ணிக்கையில் புதிய மரங்கள் வளர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 1980ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது அதிக கார்பனைச் சேமிக்கும் அடர்ந்த காடுகளின் (Closed Canopy) அளவு 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பிரேசில் உட்பட பல நாடுகளில், வண்டல் மண்ணில் (sediments) அதிகளவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக, ஆறுகள் மற்றும் கடற்கரைகளை ஒட்டி புதிய அலையாத்திக் காடுகள் உருவாகியுள்ளன. இருப்பினும், ஆற்றின் மேல் பகுதியில் (upstream) காடுகள் அழிக்கப்பட்டதாலும், சுரங்கத் தொழில்களாலும் மண்ணிலிருந்த நைட்ரஜன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அடித்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கலந்திருக்கக்கூடும்; இதுவே ஆற்றின் கீழ்பகுதியில் உள்ள அலையாத்திக் காடுகளுக்குச் சாதகமாக அமைந்திருக்கிறது.

"இது அலையாத்திக் காடுகளுக்கு ஒரு நல்ல செய்தி - நாம் நினைத்ததை விட அவை அதிக எண்ணிக்கையில் உள்ளன, மேலும் அவை தங்களின் மீள்தன்மையை (resilience) நிரூபித்து வருகின்றன," என்று இந்த ஆய்வறிக்கையின் ஆசிரியர்களில் ஒருவரான அபரிஸ்த்வித் (Aberystwyth) பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் பண்டிங் (Dr Pete Bunting) கூறியுள்ளார்.

மேலும், மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் இன்னும் காடுகள் அழிக்கப்படுவது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, நைஜர் டெல்டா பகுதியில் உள்ள எண்ணெய் குழாய்கள் மற்றும் மாசு, அலையாத்திக் காடுகளைப் பெரிதும் பாதிக்கின்றன. ஆஸ்திரேலியா முதல் கரீபியன் வரையிலான பகுதிகளில் ஏற்படும் கடுமையான வெப்பமண்டலச் சூறாவளிகள், ஒரே வருடத்தில் பெரும் அளவிலான காடுகளை அழிப்பதாகவும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

எனினும், தற்போது அலையாத்திக் காடுகள் வியக்கத்தக்க வகையில் செழித்து வளரத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் நாம் சரியான பாதையில் தான் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் ஜென் ஜாங் (Dr Zhen Zhang) தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர்பன் அலையாத்திக் காடுகள் உலகிலேயே மிகப்பெரிய அலையாத்திக் காடாகும். தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பிச்சாவரம், இந்தியாவின் மிக முக்கிய மற்றும் அழகான அலையாத்தி காடுகளில் ஒன்றாகவும் பிரபலமான சுற்றுலாத் தளமாகவும் உள்ளது. முத்துப்பேட்டை பகுதியிலும் இவ்வகைக் காடுகள் பரவலாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.