மங்களகிரி நெசவாளர்களின் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் கைத்தறித் தொழிலைக் காக்க 2,000 கோடி கோரி முழக்கம்!
14 May 2026, 9:55 pm

மங்களகிரி நெசவாளர்களின் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் கைத்தறித் தொழிலைக் காக்க 2,000 கோடி கோரி முழக்கம்!

வேலைநிறுத்தம் 16

மங்களகிரி, மே 14- ஆந்திர மாநிலத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க கைத்தறி மையமான மங்களகிரி, இன்று நெசவாளர்களின் வாழ்வாதாரப் போராட்டத்தால் அதிர்ந்து கொண்டி ருக்கிறது. உலகப் புகழ்பெற்ற மங்களகிரி கைத்தறித் துணிகளை உருவாக்கும் கலைஞர்கள், தங்களின் உழைப்புக்கேற்ற ஊதியமின்றி வறுமையில் வாடும் அவல நிலையை எதிர்த்து, ஏப்ரல் மாத இறுதியில் மாபெரும் 48 மணி நேர உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர். இத்தொடரின் 16ஆவது பகுதியில், அமராவதி தலைநகர் பகுதிக்கு மிக அருகிலேயே நிகழ்ந்த இந்தத் தீரம்மிக்க போராட்டத்தைப் பார்ப்போம்.

சின்னககானி ஒய் ஜங்ஷன் (Chinakaka ni Y Junction) பகுதியில் உள்ள ‘நேதண்ணா சர்க்கிள்’ (Nethanna Circle) பகுதியில், நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் மற்றும் சார்புத் தொழிலாளர்கள் தங்களின் குடும்பங்களுடன் 48 மணி நேரத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். கைத்தறி சங்கங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து நடத்திய இந்த தர்ணாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் தங்களின் ஒருமைப்பாட்டைத் தெரிவித்தன.

நெருக்கடியில் கைத்தறித் துறை

நூல், சாயங்கள் மற்றும் இதர மூலப்பொருட்களின் விலை உயர்வு ஒருபுறம், விசைத்தறி மற்றும் ஆலைத் துணிகளின் கடும் போட்டி மறுபுறம் என மங்களகிரி நெசவாளர்கள் இரட்டைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

• நிதி ஒதுக்கீடு புறக்கணிப்பு: ஆந்திர மாநிலத்தின் மொத்த பட்ஜெட் 3.3 லட்சம் கோடியாக இருந்தபோதிலும், கைத்தறித் துறைக்கு வெறும் 0.03% மட்டுமே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

• நிலுவைத் தொகை: கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய 203 கோடி ரூபாய் நிலுவைத் தொகை கடந்த எட்டு மாதங்களாக வழங்கப்படவில்லை.

• நலத்திட்ட முடக்கம்: ‘நேதண்ணா நேஸ்தம்’ (Nethanna Nestham) போன்ற முந்தைய நலத்திட்டங்களின் கீழ் வழங்கப்பட வேண்டிய நிதி உதவி நிறுத்தப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக் கான நெசவுக் குடும்பங்கள் கடன்பிடியில் சிக்கியுள்ளன.

முக்கியக் கோரிக்கைகள்

மாநில அரசுக்கு நெசவாளர்கள் சமர்ப்பித்த கோரிக்கைப் பட்டியலில் பின்வருவன இடம்பெற்றுள்ளன:

1.நிதி ஒதுக்கீடு: கைத்தறித் துறைக்கு பட்ஜெட்டில் குறைந்தபட்சம் 2,000 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும்.

2.நிதி உதவி: ஒவ்வொரு நெசவாளர் குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 25,000 ரூபாய் நிதி உதவி வழங்க வேண்டும்.

3.மின்சார சலுகை: தறி வைத்திருப்பவர், இல்லாதவர் என பாகுபாடின்றி அனைத்து நெசவாளர்களுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்.

4.வீட்டு மனை: மங்களகிரியில் சுமார் 20,000 நெசவாளர்களுக்கு 3 சென்ட் நிலத்துடன் கூடிய வீட்டு வசதி மற்றும் பணித்தளம் அமைத்துத் தர வேண்டும்.

5.அரசு கொள்முதல்: கைத்தறித் துணி களை அரசே மொத்தமாக கொள்முதல் செய்து, நெசவாளர்களுக்குச் சீரான வருமானத்தை உறுதி செய்ய வேண்டும்

சிபிஐ(எம்) வலியுறுத்தல்

சிபிஐ(எம்) ஆந்திர மாநிலச் செயலாளர் வி. சீனிவாச ராவ், இது தொடர்பாக கல்வி அமைச்சர் நாரா லோகேஷிற்கு கடிதம் எழுதி யுள்ளார். அதில், “மங்களகிரி நெசவாளர் களின் கைவண்ணம் சர்வதேச அளவில் மாநிலத்திற்குப் பெருமை சேர்க்கிறது. ஆனால், இன்று அவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும் கடன் தொல்லையால் தற்கொலை விளிம்பில் உள்ளனர். தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார். மேலும், கைத்தறி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உள்ள 11 ரக ஒதுக்கீடுகளைத் தீவிரமாக அமல்படுத்தி, விசைத்தறி அத்துமீறல்களைத் தடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார்.

பாரம்பரியத்தின் சின்னம் மங்களகிரி

நூற்றாண்டுகள் பழமையான லட்சுமி நரசிம்மர் கோவிலுடன் தொடர்புடைய இந்த நெசவுத் தொழில், ‘புவிசார் குறியீடு’ (GI Tag) பெற்றது. பிட் லூம் (Pit loom) முறையில் நெய்யப்படும் தனித்துவமான ஜரிகை பார்டர் கொண்ட பருத்தித் துணிகள் மங்களகிரியின் அடையாளம். இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க கலையை அழியவிடாமல் காப்பது அரசின் கடமையாகும்.

“ஒரு மாத காலத்திற்குள் எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தலைநகர் அமராவதியை நோக்கி ‘சலோ அமராவதி’ பேரணி நடத்துவோம்” என நெசவாளர்கள் எச்சரித்துள்ளனர். இவர்களின் தறிகள் தொடர்ந்து இயங்குமா அல்லது மௌனமாகுமா என்பது அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையிலேயே உள்ளது.