தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

திரைப் பார்வை கொண்டாடிப் பார்க்க வைக்கும் மண்டாடி - எஸ்.வி.வேணுகோபாலன்

3 Oct 2026, 11:41 pm
திரைப் பார்வை கொண்டாடிப் பார்க்க வைக்கும் மண்டாடி - எஸ்.வி.வேணுகோபாலன்

திரைப் பார்வை கொண்டாடிப் பார்க்க வைக்கும் மண்டாடி - எஸ்.வி.வேணுகோபாலன்

கடலை, கடல் அலைகளின் பாய்ச்சலை, கடலின் சீற்றத்தைப் பார்த்திருக்கிறோம் திரைப்படங்களில். நீரோட்டங்களின் ஊடே போட்டி, பந்தயங்கள், பகைமை உணர்ச்சியின் வெறி வெளிப்பாடுகள், பழிதீர்த்தல் இவற்றையும் எத்தனையோ படங்கள் காட்சிப்படுத்தியுள்ளன. கடல் நிறைய வியப்புகளை உள்ளடக்கியே விரிந்து பரந்திருக்கிறது. அதன் ஆழத்தில் எத்தனையோ கதைகள் புதைந்திருக்கின்றன. காலகாலமாக இயற்கையோடு இயைந்து, இயற்கையோடு விளையாடி, இயற்கையின் மடியில் தங்களை இருத்திக் கொள்ளத் துடிக்கின்றனர் மனிதர்கள். தனி மனிதர்களின் வாழ்க்கையைப் புறச்சூழல் எப்படி தீர்மானிக்கிறது, சந்தை எப்படி எல்லா அறங்களையும் வீழ்த்தத் துடிக்கிறது, நட்பு, பாசம், காதல், தோழமை இவற்றை எப்படிப் பணம் ஈவிரக்கமின்றி வெட்டிச் சாய்க்கிறது என்பதை ஒரு படைப்பூக்கத் திறனோடு ரசிகர்களுக்கு வழங்குவதில் தனித்துச் சிறந்து நிற்கிறது ‘மண்டாடி’. அத்தனை கதாபாத்திரங்களையும் அச்சு அசலாக உயிர்ப்போடு உணரவைக்கும் அளவுக்கு அபாரமாக நடித்துள்ளனர் அத்தனை கலைஞர்களும்.

சோகக் கடலிலிருந்து சாகசக் கடல் நோக்கி…

பல ஆண்டுகளுக்கு முன்பே கடற்புறமான முகவையை விட்டு விலகிப்போய், சென்னை கிழக்கு கடற்கரை சாலை கேளிக்கை நிறுவனம் ஒன்றில் நீச்சல் குளத்தின் பயிற்சியாளராகப் பிழைப்பைத் தேடிக்கொண்டு ஒதுங்கி வாழ்ந்து வருபவர் முத்துக்காளி (சூரி). உள்ளூரை விட்டு அவர் வெளியேற நேர்ந்த பின்கதை ஒரு சோகக் கடல் ஆகும்.

சுனாமி ரைடர்ஸ் படகுக்குழுத் தலைவனான இளைஞன் கிட்டானை, மாரி எனும் வாலிபன் கொலைவெறியோடு கத்தியால் குத்தும் இடத்தில் தொடங்குகிறது படம். சட்டை மட்டுமே கிழிபடுகிறது. சண்டை தொடர்வதற்கான களம் அங்கே பற்றி எரியத் தொடங்குகிறது. மாரியின் பெற்றோர் கிட்டானின் தந்தை சாட்டைப்புலியின் (சுஹாஸ்) காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாலும், மாரியின் உயிருக்குக் குறைவாக எந்த உடன்பாட்டுக்கும் இந்தத் தரப்பு தயாரில்லை. காதலன் மாரியை எப்படியாவது தப்புவிக்கச் செய்ய, அவனை சென்னையிலிருக்கும் முத்துக்காளியிடம் அனுப்பிவிடுகிறாள் உள்ளூர் பண்பலை வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் இளம்பெண் பாகம்பிரியா (கிருத்திகா). எந்தப் படகுப் போட்டிச் சண்டையின் நிமித்தம் ஊரைவிட்டே தொலைவிடத்திற்குச் சென்றாரோ, அதே படகுப் போட்டியில் உண்மையான திறமையை வென்று காட்டவும், நேர்மையற்ற அணியை வீழ்த்தவும் மாரியையும் அழைத்துக்கொண்டு முத்துக்காளி ஊர் திரும்புமிடத்தில் கடலலை பொங்கித் தணிகிறது.

ஊஞ்சல் ஆடும் ஏஞ்சல் மனம்

சாவிலிருந்து தப்பிய தங்கள் மகனை மீண்டும் மரணக்குழியில் தள்ளவே ஊர் திரும்பியிருக்கிறான் காளி என்று வெறுப்பு நெருப்பை உமிழ்கிறாள் மாரியின் தாய் ராக்கம்மா. “எதிரிகிட்டேயிருந்து காப்பாத்தித் துரோகிகிட்டே கொடுத்துட்டே என் பிள்ளையை” என்று கணவனைக் காய்கிறாள்.

அந்த ஊர் இளவட்டங்களுக்கு அந்தப் பெருங்கடலைப் பாடம்கற்பித்து, துணிவூட்டி, படகுப் போட்டிகளில் சாகசமாக இறங்கி இலாவகமாக மோதி வெற்றி பெற்றுத் திரும்பும் கலையை விளக்கிய மச்சமுனி (சத்யராஜ்) மகள் அவள். அவளது முழுப் பெயர் ஏஞ்சல் ராக்கம்மா. ஏஞ்சல் பெயரைக் கையில் பச்சை குத்தி வைத்திருப்பவன் முத்துக்காளி. அந்தக் காதல் மச்சமுனிக்கும் தெரிந்திருந்தது. ஆனால், படகுத் துறையில் வெள்ளைக்காரர் ஒருவர் ஃபைபர் படகு ஒன்றை இலவசமாகக் கொண்டு இறக்கியபோது சந்தைமயாகிறது படகுப் போட்டி.

இலவசத்தில் தொடங்கும் வர்த்தக சூட்சுமம்

“வெள்ளைக்காரன் ஒரு பொருளை இலவசமா தந்தா... அதை வச்சு வியாபாரம் தொடங்குறான்னு அர்த்தம்” என்கிறார் மச்சமுனி. அந்த வர்த்தகத்தைச் சாட்டைப்புலி கவ்விக் கொள்ளும் இடத்தில் மச்சமுனி முதல்கட்ட மனமுடைதலுக்கு உள்ளாகிறார். சாட்டைப்புலி தனது உற்ற நண்பன் முத்துக்காளியையும் அந்தச் சுழலில் சேர்த்துவிடுகிறான்; அவர் ஆகச்சிறந்த மண்டாடி என்பதால்!

ஒரு கலத்தைப் பொறுப்பேற்று வழிநடத்தி, ஆபத்துகளிலிருந்து சக போட்டியாளர்களையும் தற்காத்து வெற்றி வாகை சூடுபவன் ‘மண்டாடி’ ஆவான். நிறுவனங்களுக்குப் போட்டியை விட வெற்றி முக்கியமானது; அந்த வெற்றியின் குறியீட்டில் வர்த்தகம் இன்னும் வலுப்பட்டு லாபம் குவிக்க வேண்டியது சந்தை நியமம் ஆகும். மச்சமுனி மீதிருக்கும் குருபக்திக்கும், சாட்டைப்புலி தன்னிடம் பாராட்டும் நட்புக்கும் இடையேயான போராட்டத்தில் முத்துக்காளி எடுக்கும் முடிவில் மேலும் மனம் நொறுங்கிப் போகிறார் மச்சமுனி.

விலைப் பண்டமாகும் விளையாட்டுத் திறமை

வர்த்தக சூது விளையாட்டின் அதிர்ச்சியில் ஒரு கட்டத்தில் முத்துக்காளி வெளியேற முற்படும்போது, அவனது வாழ்க்கைக் கடலின் சுழி மிகவும் உக்கிரமாகச் சுழன்று கொண்டிருக்கிறது. 1848 கம்யூனிஸ்ட் அறிக்கையில் மார்க்சிய மூலவர்கள் எழுதி வைத்திருப்பது போல், விளையாட்டு வீரன் கூலியடிமையாக்கப்பட்டுவிட, பணத்தின் ஆதிக்கம் காதல், பாசம், நட்பு எல்லாவற்றின் மீதும் ஈவிரக்கமின்றி நடந்து சிதைக்கிறது. சாட்டைப்புலியின் கோபத்தின் விளைவாக அந்தச் சுழல் மச்சமுனியையும், முத்துக்காளி மீது ஏஞ்சல் ராக்கம்மா வைத்திருந்த காதலையும், நட்பு உறவுகளையும் உள்ளிழுத்துக் காணாமல் அடித்துவிடுகிறது. தந்தையைப் பறிகொடுக்கும் ராக்கம்மா காளியைத் துரோகி என்று ஏசி, தந்தையின் சடலத்தைக் கூடப் பார்க்கவிடாது துரத்திவிட்டுக்கதறுகிறாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மாரிக்காக ஊர் திரும்பும் முத்துக்காளிக்கும் சாட்டைப்புலிக்கும் நடுவே புதிய போர்க்களம் உருவாகி நிற்கிறது. ஒரு மண்டாடி தன்னை அல்ல, ஒரு போட்டியின் அறத்தை வெல்ல வைக்கப் போராட வேண்டி இருப்பதை முத்துக்காளி வேதனையோடும், பழைய நினைவுகளின் ரணங்களோடும் மேற்கொள்வதுதான் மண்டாடியின் அசாத்திய திரைக்கதை.

உண்மை வென்றிட வேண்டும்

உண்மை வென்றுவிடும், அராஜகம் தோற்றுவிடும் என்று எல்லோருக்கும் தெரியும்; ஆனால், அதை வழங்கும் விதத்தில் வெற்றிமாறனின் உதவியாளராக இருந்த மதிமாறன் புகழேந்தி அருமையான படைப்பை வழங்கியுள்ளார். சவாலான கடல் போட்டிக் காட்சிகளை அசலாகக் கடலிலேயே சென்று படப்பிடிப்பு நடத்தியதில், அபாயங்களை எதிர்கொண்டு, பொருள் சேதங்களைச் சந்தித்தும் விடாப்பிடியாக எடுத்து முடித்தது பாராட்டுக்குரிய விஷயமாகும்.

அசத்தல் நடிப்பு

முத்துக்காளியாக பரோட்டா சூரியின் நடிப்பு நகைச்சுவை நடிகரிலிருந்து நாயகனாக அவர் எட்டியிருக்கும் உயரத்தை உணர்த்துகிறது. இறுதிப்போட்டிக்கு முன்பாகத் தனது காதலியிடம் நேரே சென்று தனது இதயத்தைத் திறந்து காட்டிக் கதறி மன்னிப்பு கோருமிடத்தில் சூரி அசத்துகிறார். ராக்கம்மாவாக நடிக்கும் மகிமா நம்பியார் அபாரமாக நடித்துள்ளார். சாட்டைப்புலியாக வரும் சுஹாஸின் நடிப்பு மெச்சத் தகுந்தது (அவருக்குப் பின்னணிக் குரல் இயக்குநர்). மாரி (மிதுன்), கிட்டான் (கிருஷ் ஹசன்), மாரியின் தந்தை சிங்காரம் (ரவீந்திர விஜய்), காளியின் நண்பர்கள் (ஆடுகளம் முருகதாஸ், பால சரவணன்) எல்லோருமே அந்தந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கின்றனர். மிக முக்கிய பாத்திரத்தில் சத்யராஜ் தோன்றி படத்தின் உறுதிமிக்க அடித்தளத்தை நிறுவிவிடுகிறார்.

தன்னுடைய தாயிடம் மாரி அவளது முந்தைய காதலைப் பற்றி சினத்தோடு கேட்பதும், அவள் ஆவேசமாகப் பதில் சொல்வதும், சாட்டைப்புலியும் முத்துக்காளியும் மோதும் இடங்களும், ராக்கம்மாவைத் தான் திருமணம் செய்துகொண்டதே காளியின் வேண்டுகோளால் தான் என்று சிங்காரம் மனம் திறக்குமிடமும், கடலைப் பற்றி சத்யராஜ் பேசும் தருணங்களும் படம் முடிந்தபிறகும் உள்ளத்தில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன.

சத்யராஜ் தனது சீடர்களான முத்துக்காளி, சாட்டைப்புலி நண்பர்களுக்கு படகுப் போட்டியைச் சொல்லித் தருவதை, சிறார்களுக்கு ஒரு பொம்மைப் பாய்மரப் படகை வைத்துக் காற்றின் திசை, கடல் நீரின் விசை, எப்போது பாயை விரிப்பது, எப்போது சுருட்டுவது, எந்தப் பக்கம் வலிப்பது எல்லாவற்றையும் கற்பிப்பது போல் காட்டுவது இயக்குநரின் திறமைக்குச் சான்றாகும்.

ரசிகர்களைக் கட்டிப்போடும் படப்பிடிப்பு

சுனாமி ரைடர்ஸ் குழுவை எதிர்த்து அனுபவமற்ற மாரியின் குழு முகவை மைந்தன்ஸ் படகில் போட்டியை எதிர்கொண்டு கடலில் அசாத்திய சாகசம் செய்யும் காட்சிகள், கிட்டான் செய்யும் சூழ்ச்சிகள், இறுதிப்போட்டியில் முத்துக்காளியே களத்தில் இறங்குவது, பெருஞ்சுழலில் சிக்கும் வேளையில் கடல் அபாயங்கள் நிறைந்ததுதான் என்றாலும் இயற்கையைக் கொண்டாடி அதன் விதிகளுக்கு உட்பட்டு விளையாடும்போது தப்பித்து வெளியேறும் தருணங்களையும் கடல் கொடுக்கும், போட்டி என்பது அறிவு என்று மச்சமுனி சொன்னதை வைத்துக் கதையின் நிறைவுக் காட்சியை வடித்திருப்பது பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது.

சுரண்டலின் தடங்கள்

சென்னை கிழக்கு கடற்கரை கேளிக்கை வளாகத்தில் பத்தாயிரம் சம்பளம் பத்தாது என்று சொல்லும் சக தொழிலாளியிடம், “மூவாயிரத்துக்கு ஆளு ரயில்ல வந்து இறங்கிக்கிட்டு இருக்கியான்” என்று சூரி சொல்லுமிடம் சந்தைமய உலகின் சுரண்டலை இலகுவாகக் கடத்துகிறது. போட்டியில் விலகிவிட்டால், உள்ளூர்க்காரர்கள் இனி போட்டியில் பங்கு பெறவே முடியாது என்று சூரி அறிவுஞ்சும் இடமும் விளையாட்டுக் களத்தை கார்ப்பரேட் களவாடிச் செல்லும் சமகால நிலவரத்தை விளக்கிவிடுகிறது. தன்னிடம் மன்னிப்பு கோரும் சூரியைக் கண்ணீரால் எதிர்கொள்ளும் மகிமா, மறுநாள் போட்டி நேரத்தில் நடக்கும் சூதாட்டங்களின் வழி உண்மையை நெருக்கமாக உணர்ந்து தனக்குள் மனமாற்றம் அடைந்து முகவை மைந்தன்ஸ் வெற்றி பெற வேண்டும் என்று துடிக்குமிடம் இயக்குநரின் முத்திரைக் காட்சிகளில் ஒன்றாகும்.

ஒளிப்பதிவு (எஸ்.ஆர். கதிர்), படத்தொகுப்பு (பிரதீப் ராகவ்) யாவும் மண்டாடியின் வலுவுக்குப் பெரும்பலம். அஜ்மல் கான், மதிமாறன் எழுத்தில் வசனங்கள் பளீர் என்று அமைந்திருக்கின்றன. பாடல்களும், கடலின் ஓசையை இசையாகத் தரும் பின்னணி இசையும் ஜி.வி. பிரகாஷுக்குப் பாராட்டு பெற்றுத் தருகின்றன. கொண்டாடிப் பார்க்கும் அனுபவத்தை வழங்குகிறது ‘மண்டாடி’!

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.