மணலியில் கட்டுமானப் பணியின்போது கேஸ் குழாய் உடைப்பு: எரிவாயு கசிவு
yesterday
<p><strong>மணலியில் கட்டுமானப் பணியின்போது கேஸ் குழாய் உடைப்பு: எரிவாயு கசிவு</strong></p><p>சென்னை, ஜூன் 22 - சென்னை மணலி பகுதியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிக்காகப் பள்ளம் தோண்டியபோது, எதிர்பாராதவிதமாக எரிவாயுக் குழாய் உடைந்து மீத்தேன் வெளியேறிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மணலி மண்டலம், 21-ஆவது வார்டு நெடுஞ்செழியன் சாலையில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திங்கள்கிழமை காலை கட்டுமான ஊழியர்கள் ராட்சத இயந்திரங்களைக் கொண்டு பள்ளம் தோண்டியபோது, அங்கு பூமிக்கு அடியில் இருந்த தனியார் எரிவாயு நிறுவனத்தின் (டோரண்டோ) குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் எரிவாயு பலத்த நெடியுடன் வெளியேறத் தொடங்கியது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் இயந்திரங்களை நிறுத்திவிட்டு அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு ஓடினர். இது குறித்துத் தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதிச் செயலாளர் டி. பாபு மற்றும் தோழர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காவல் துறைக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் மணலி தீயணைப்பு வீரர்கள் வந்து, அப்பகுதியில் கூடியிருந்த பொதுமக்களை அப்புறப்படுத்திப் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தனர். முதற்கட்டமாகப் பள்ளத்தில் மணலைக் கொட்டி வாயு வெளியேறுவதைத் தடுக்க முயன்றனர். ஆனால், குழாயில் அழுத்தம் அதிகமாக இருந்ததால் எரிவாயு வெளியேறுவதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. பின்னர், நிறுவன அதிகாரிகள் அந்தப் பகுதிக்கான கேஸ் விநியோகக் குழாயின் வால்வுகளை முழுமையாக மூடியதை அடுத்து, சிறிது நேரத்திற்குப் பிறகு எரிவாயு வெளியேறுவது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விரைவான நடவடிக்கையால் பெரிய அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.</p>
