திருச்சி விரைவு செய்திகள்
7 Dec 2025, 3:52 pm

திருமண மண்டபத்தில் நகை, பணம் திருடியவர் கைது

தஞ்சாவூா், டிச.7- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சாத்தனூர் முக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் வ.பாஸ்கரன்(49). இவரது சகோதரியின் மகள் திருமணம், தஞ்சையில் உள்ள ஒரு மண்டபத்தில் கடந்த நவ.30 ஆம் தேதி நடைபெற்றது. இதற்காக பாஸ்கரன் தனது குடும்பத்தினருடன் வந்திருந்தார். மண்டபத்தின் ஒரு அறையில் நகை மற்றும் பணத்தை பையில் வைத்திருந்தார். பின்னர் அந்த பையை அங்கேயே வைத்துவிட்டுச் சென்றார். திருமணம் முடிந்து வந்து பார்த்தபோது, அந்த பையில் இருந்த பொருட்களை காணவில்லை. அதிர்ச்சியடைந்து பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து பாஸ்கரன் தஞ்சை கிழக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணியைச் சேர்ந்த புருஷோத்தமன் (56) என்பவர் பையிலிருந்த அரை பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரம் ரொக்கத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறையினர் புருஷோத்தமனை கைது செய்தனர்.

தஞ்சாவூர் முன்னாள் எம்.பி., வீட்டில் கொள்ளை அடித்த 4 பேர் கைது

தஞ்சாவூர், டிச.7- தஞ்சாவூரில் திமுக முன்னாள் எம்.பி.,யின் வீட்டில் 87 பவுன் நகைகளை கொள்ளை அடித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் சித்தமல்லியைச் சேர்ந்தவர் ஏ.கே.எஸ். விஜயன். இவர் திமுக சார்பில், நாகை நாடாளுமன்ற தொகுதியில் 1999, 2004, 2009 ஆம் ஆண்டுகளில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியாகவும், திமுக விவசாய அணியின் மாநிலச் செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் அருகே, சேகரன் நகரில் ஒரு வீடு உள்ளது. இந்த வீட்டில் அவரது மனைவியும், மகளும் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த நவ.28 ஆம் தேதி இரவு ஏ.கே.எஸ். விஜயனின் மனைவி ஜோதிமணி தனது மகளை அழைத்துக் கொண்டு சித்தமல்லியில் உள்ள வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். பின்னர், கடந்த டிச.1 ஆம் தேதி ஏகேஎஸ். விஜயன் மற்றும் அவரது மனைவி, மகள் ஆகியோர் தஞ்சாவூரில் உள்ள வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் இருந்த 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதுகுறித்து, ஏ.கே.எஸ். விஜயன் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு தமிழ்ப் பல்கலைக்கழக காவல்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, முன்னாள் எம்பி.,யின் வீடு அமைந்துள்ள பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் உதவியோடு, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், இந்தக் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தருமபுரியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அம்மா, மகன்கள், மகள் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, தனிப்படையினர் விரைந்து சென்று ராயல் நகரை சேர்ந்த சாதிக் பாஷா (33), மொய்தீன் (37), மகள் ஆயிஷா பர்வீன் (30), மனைவி பாத்திமா ரசூல் (54) ஆகியோரை தஞ்சாவூருக்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முன்னாள் எம்.பி., ஏ.கே.எஸ்.விஜயன் வீட்டில் கொள்ளையடித்தது மேற்கண்ட 4 பேரும்தான் என்பது தெரிய வந்தது. இதையடுத்து 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொள்ளையடிக்கப்பட்ட 87 பவுன் நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதே குடும்பத்தை சேர்ந்த தலைமறைவாக உள்ள ஷாஜகான் (26) என்பவரை தேடி வருகின்றனர்.

முன்னாள் படைவீரர் கொடிநாள்: குமரியில் ரூ.1.50 கோடி வசூல்

நாகர்கோவில்,டிச.7- கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் டிசம்பர் 7 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா , முன்னாள் படைவீரர் கொடிநாள் வசூலை துவக்கி வைத்தார். இதுகுறித்து ஆட்சியர் தெரிவிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் நாள் இந்தியா முழுவதும் கொடிநாள் அனுசரிக்கப்படுகிறது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நாளில் முன்னாள் படைவீரர்கள் ஆற்றிய தொண்டுகளை நினைவு கூர்ந்து அரசு நன்றி பாராட்டி வருகிறது. கொடிநாளில் திரட்டப்படும் நிதியானது போர்க்களத்தில் உயிர்நீத்த படை வீரர்களின் கைம்பெண்கள், ஊனமுற்ற படைவீரர்கள், முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவரது விதவைகளின் மறுவாழ்விற்காகவும், நலத்திட்ட ங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கு கொடிநாள் வசூல் செய்திட அரசால் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ரூ.1,47,95,000 நிர்ணயம் செய்யப்பட்டு ரூ.1,50,76,040 வசூல் செய்யப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் சீரிய முயற்சியால் தொடர்ச்சியாக 3 ஆண்டுகள் ஒரு கோடிக்கு மேல் வசூல் புரிந்து சாதனை புரிந்துள்ளது. தொடர்ந்து பொது மக்கள் அனைவரும் கொடிநாள் நிதியுதவி வாரி வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி, டிச. 7- அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்விநிறு வனங்கள் மற்றும் தனி யார் தொழிற் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.சி, எம். பி.சிசீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாண வியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்புகல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.சி., எம்.பி.சி., சீர்மர பினர் மாணவ, மாண வியருக்கு எவ்வித நிபந் தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முது கலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் ளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட் சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு மாணவ, மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப் பட்டுள்ள உமிஸ்” எண் மூலம் htts://umis.tn.gov. in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணவர்கள்ள் தாங்கள்பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக் கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி https://umis. tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். பயன்பெற மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வரும் 31ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வி உதவித்தொகை தொடர்பான சங்தே கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவ லக நேரங்களில் அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.

இசைப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா

திருச்சிராப்பள்ளி, டிச.7- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் வேலை மேம்பாட்டு நிறுவனமானது, திருச்சியில் உள்ள ட்ரினிட்டி இசைப்பள்ளியுடன் இணைந்து 2008-2009 ஆம் கல்வி ஆண்டு முதல், கீபோர்டு கிதார் மற்றும் டிரம்ஸ் பயிற்சிகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறது. 2024-2025 இல் சான்றிதழ் பயிற்சியில் கீபோர்டில் 41 பேரும், கிதாரில் 14 பேரும், டிரம்ஸில் 18 பேருமாக 73 பேரும், பட்டயப் பயிற்சியில் கிபோர்டில் 21 பேரும், டிரம்ஸில் 5 பேருமாக மொத்தம் 26 பேரும் என மொத்தம் 99 பேர் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (ஐ.ஈ.சி.டி) இயக்குநர் ராம்கணேஷ் தலைமையேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். மான்ட்போர்ட் பள்ளியின் முதல்வர் அருட்திரு சகோ. ராபர்ட். வாழ்த்துரை வழங்கினார். திரைப்பட இசையமைப்பாளர் ஜெயா கே. தாஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக, ட்ரினிட்டி இசைப்பள்ளி இசை ஆசிரியர் அகிலன் ராயன் வரவேற்றார். ட்ரினிட்டி இசைப்பள்ளி மாணவர் ரோஹித் சரவணன் நன்றி கூறினார்.

கோவில்பட்டியில் ரயில் மோதி முதியவர் பலி

தூத்துக்குடி, டிச. 7- கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி முதியவர் இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடம்பூர் ரயில் நிலையத்துக்கு இடையே லட்சுமி மில் மேம்பாலம் பின்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் ரயில் மோதி இறந்து கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் காவல் சார்பு ஆய்வாளர் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆலம்பட்டி கிராம நிர்வாக அதிகாரி சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.