மேற்கு வங்க தேர்தலில் பெரும் சதி
5 May 2026, 9:04 pm
<p><strong>மேற்கு வங்க தேர்தலில் பெரும் சதி</strong></p><p>கொல்கத்தா, மே 5 - மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியடைந்த போதிலும், முதலமைச்சர் பதவியில் இருந்து விலகப்போவதில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கொல்கத்தாவில் செவ்வாயன்று செய்தியாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறுகையில், “மேற்கு வங்க தேர்தல் முடிவுகள் உண்மையான மக்கள் ஆணை அல்ல, இது ஒரு சதி. நாங்கள் மக்கள் ஆணையால் தோற்கடிக்கப்படவில்லை, ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டோம். அதனால் நான் ராஜினாமா செய்யும் கேள்விக்கே இடமில்லை. நான் தோற்கவில்லை; நான் ராஜ் பவனுக்கு (ஆளுநர் மாளிகை) செல்லமாட்டேன். அரசியலமைப்பு விதிகளின்படி ஆளுநர், ஒன்றிய அரசு என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும். எனக்கு பயமில்லை. உண்மையாக திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட்டது பாஜகவுடன் அல்ல, பாஜகவிற்காகப் பணியாற்றிய தேர்தல் ஆணையத்துடன் தான். தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மக்களின் ஜனநாயக உரிமைகளைக் குலைத்துவிட்டார். சுமார் 100 தொகுதிகளில் மக்களின் தீர்ப்பு கொள்ளையடிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தொண்டர்களைச் சோர்வடையச் செய்யவே வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே மெதுவாக நடத்தப்பட்டது. இதன்மூலம் தேர்தல் வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளது” என மம்தா பானர்ஜி கூறினார்.</p>
