மகாசுவேதா தேவி விளிம்புநிலை மக்களின் குரல்! - பேரா. பெ.விஜயகுமார்
26 Sept 2026, 8:23 pm

மகாசுவேதா தேவி விளிம்புநிலை மக்களின் குரல்! - பேரா. பெ.விஜயகுமார்

எழுத்தாளர்களின் சமூகப் பொறுப்பில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்த படைப்பாளி மகாசுவேதா தேவி. மகாசுவேதா தேவி பழங்குடி மக்களின் வாழ்வியல் சோகங்களை தன்னுடைய படைப்புகளில் சொற்சித்திரமாகத் தீட்டியவர். கருத்துகளை எழுத்தில் வடிப்பதுடன் நில்லாமல் பழங்குடி மக்களின் வாழ்க்கையோடு தம்மை இணைத்துக் கொண்டு அவர்களின் மேம்பாட்டுக்காகவும் போராடியவர். மேற்கு வங்காளத்தின் லோதா, சபார் போன்ற பழங்குடி மக்களின் வாழ்வியல் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் அவர்களின் துயர் துடைப்பதிலும் துணையாக நின்றவர். கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் தீவிர இடதுசாரி இயக்கங்களுடனும் தொடர்பு கொண்டிருந்தார். ’ஜான்சிராணி’, ’ருடாலி’, ’ஹஜர் சௌராசீர் மா,’ ’காட்டில் உரிமை’ போன்ற நாவல்களையும் ஏராளமான ஆய்வுக் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் எழுதியுள்ளார். சாகித்திய அகாதமி விருது, சரத்சந்திரர் விருது, ஞானபீட விருது, ரமான்மாக்சேசெ விருது, பத்மபூஷன் விருது போன்ற விருதுகள் பெற்றுள்ளார். வாழ்நாள் முழுவதும் குரலற்றவர்களின் குரலாக ஒலித்து அவர்களின் துயர் துடைக்கப் பாடுபட்டார்.

காட்டில் உரிமை: பீர்சா முண்டாவின் புரட்சி

’காட்டில் உரிமை’ – பழங்குடி மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய வீரர் பீர்சா முண்டாவின் உண்மைக் கதை. வரலாறையும், கற்பனையையும் இரண்டறக் கலந்து எழுதி எது புனைவு, எது வரலாறு என்றறிய முடியாது வாசகர்களைத் திகைக்கச் செய்கிறார் மகாசுவேதா தேவி. வரலாற்று நிகழ்வை புனைகதையாக மாற்றுவது சவாலான செயல். வரலாற்றைப் பிழையின்றி சொல்வதுடன் அதைச் சுவையுடனும் சொல்லிட வேண்டும். இதைச் செவ்வனே செய்து வெற்றி கண்டுள்ளார் மகாசுவேதா தேவி.

சோட்டா நாக்பூர் பகுதியிலிருந்த காடுகளும், மலைகளும் முண்டாக்களின் மூதாதையர்கள் வாழ்ந்த இடம். அந்த அடர்ந்த காடும், நெளிந்து வளைந்து பல அடுக்குகளாக நீண்டிருந்த அந்த மலையும் அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது. அவர்கள் வணங்கும் தெய்வம் ஆரண்ய மாதா அவர்களைக் காப்பாற்றுகிறாள். அவர்கள் காட்டைக் காக்கின்றனர், காட்டை அழித்தால் தங்களின் வாழ்வே அழிந்துவிடும் என்பதை அவர்கள் அறிவார்கள். ஆங்கிலேயேர் ஆட்சியில் தொடங்கியது ஆபத்து. ஆங்கிலேய அதிகாரிகளின் பொழுதுபோக்கு காட்டில் வேட்டையாடுவது. காட்டின் வளங்களைக் கொள்ளை அடிப்பது. ஆங்கிலேயர்கள் தங்களின் ஆட்சி அதிகாரத்தை காட்டிற்குள்ளும் நிலைநாட்ட எண்ணினர். காட்டிலிருந்த பூர்வகுடிகளை விரட்டி அடிக்கத் திட்டமிட்டனர். ஜமீன்தார்களை ஏவிவிட்டனர். ஜமீன்தார்கள் அதிகமான வரியைக் கொடூரமாக வசூலித்தனர். நிலங்களைப் பறித்துக் கொண்டனர். காட்டின் மீதான தங்களின் உரிமைகளை இழந்தவர்கள் என்ன செய்வதென்று அறியாது தவித்தனர்.

இச்சூழலில் அவர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார் பீர்சா முண்டா. கிறித்துவ மிஷனரிகள் நடத்தும் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த பீர்சா முண்டா மக்கள் படும் துயரம் கண்டு நெஞ்சம் பதறினார். ’’நான் இனியும் சொகுசு வாழ்வு வாழ முடியாது; ஆயுதம் ஏந்திப் போராடி என் மக்களுக்கு விடுதலையைப் பெற்றுத் தருவேன்’’ என்று சூளுரைக்கிறார். அவருடைய தாய் கர்மி முண்டாக்களின் தலைவனாகத் தன் மகன் பீர்சா திகழ்வது குறித்து ஒருபுறம் பெருமை அடைகிறார். அதே சமயம் தன் மகன் சாவை நெருங்குகிறார் என்பதறிந்து அவர் தாயுள்ளம் வேதனை அடைகிறது. பீர்சா உடனடியாக களத்தில் இறங்குகிறார். ’காட்டில் உரிமை’ என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் மக்களைத் திரட்டுகிறார். முண்டாக்களின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறார். மலைகளின் அனைத்து அடுக்குகளிலும் உள்ள கிராமங்கள் தோறும் கூட்டங்கள் நடத்துகிறார். அவருக்கு ஆதரவு பெருகுவது கண்டு அதிகார வர்க்கம் நடுங்குகிறது. சோட்டாநாக்பூர் டெபுடி கமிஷனர் ராணுவத்தின் உதவியை நாடுகிறார். ராணுவம் பீர்சாவைப் பிடிப்பதற்காக மலையில் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை நடத்துகிறது.

பீர்சா தலைமையில் நூற்றுக்கணக்கான போராளிகள் கைதாகிறார்கள். விசாரணைக் கைதிகளாக அடைக்கப்படும் அவர்கள் சிறையில் கொடூரமாக நடத்தப்படுகிறார்கள். கல்கத்தாவில் இருக்கும் பத்திரிகைகள் சில முண்டாக்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவாக கட்டுரைகள் வெளியிடுகின்றன. ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட ஆங்கிலேயேர்கள் சிலரும் முண்டாக்களைச் சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று குரல் கொடுக்கிறார்கள். ஜேக்கப் என்ற ஆங்கிலேய வழக்கறிஞர் முண்டாக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடுகிறார். ஓராண்டுக்கும் மேலாக விசாரணைக் கைதிகளாக வைத்திருப்பது அனைத்துச் சட்டங்களுக்கும் எதிரானது என்று வாதிடுகிறார். காவல்துறை வேண்டுமென்றே விசாரணையை முடிக்காமல் இழுத்தடிக்கிறது. அமுல்யா பாபு என்ற சிறை அதிகாரி மட்டும் பீர்சாவின் வீரத்தையும் தியாகத்தையும் மனதுக்குள் பாராட்டுகிறார். சிறையின் உயர் அதிகாரிகளை மீறி தன்னால் பீர்சாவுக்கு உதவ முடியாதது குறித்து வருந்துகிறார்.

கைதிகளைப் பிணைக்கப்பட்ட சங்கிலியுடன் நீதிமன்றத்திற்கு நடத்தியே கூட்டிச் செல்வதும், திரும்பவும் கொண்டு வந்து அடைப்பதுமாக இருக்கின்றனர். போதுமான உணவும், மருத்துவ வசதியும் இல்லாததால் சிறைக்குள் கைதிகள் பலரும் இறக்கின்றனர். இறுதியில் பீர்சாவையும் மரணம் தழுவுகிறது. ஆங்கிலேய அதிகாரிகள் ’அப்பாடா!’ என்று பெருமூச்சு விடுகின்றனர். குற்ற உணர்வுக்கு ஆளாகும் அமுல்யா பாபு தன் பதவியை ராஜினாமா செய்கிறார். பீர்சாவின் தியாகக் கதையை மகாசுவேதா தேவி உணர்ச்சிப் பூர்வமாகச் சொல்லியுள்ளார். பீர்சாவின் தியாகம் இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் என்றென்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியது. பீர்சாவின் உருவப்படம் 1989 அக்டோபர் 16 அன்று இந்திய நாடாளுமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டது. பீர்சாவின் முழு உருவச் சிலை ஜார்க்கண்டு மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் கம்பீரமாக நிற்கிறது.

‘1084இன் அம்மா’: தாயின் துயரமும் வர்க்க அரசியலும்

‘1084இன் அம்மா’ - ஓர் அரசின் பயங்கரவாதத்தினால் தன் மகனை இழந்த ஒரு தாயின் துயரைச் சித்தரிக்கும் நாவல். ’ஹஜர் சவுராஸி மா’ எனும் தலைப்பில் மகாசுவேதா தேவி எழுதிய நாவலை தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி ’1084இன் அம்மா’ என்ற பெயரில் நேர்த்தியாகவும், நேர்மையாகவும் மொழிபெயர்த்துள்ளார். பிரபல இயக்குநர் கோவிந்து நிஹால்னி இந்நாவலை இந்தியில் திரைப்படமாகவும் எடுத்துள்ளார்.

தன் மகனின் அகாலமான, அசாதாரணமான மரணத்தின் துயர நினைவுகளுடன் வாழ்ந்திடும் சுஜாதா என்ற பெண்மணியே நாவலின் தலையாய கதாபாத்திரமாவார். ’ஜனவரி பதினேழு’ அவர் வாழ்வில் மறக்க முடியாத நாள்! அன்று தான் அவரின் செல்ல மகன் ப்ரதீ கொடூரமாகக் கொல்லப்பட்ட நாள்! அதுவே அவனின் பிறந்த நாளும் கூட! இருபது வயது இளைஞன் ப்ரதீ தான் உயர்த்திப் பிடித்த கொள்கைகளுக்காக தன்னுயிரை ஈந்த நாள்! இந்திய ’ஜனநாயகத்தைப் பாதுகாக்கிறோம்” என்று சொல்லி கல்கத்தா நகரக் காவல்துறை என்கவுண்டர் செய்து ப்ரதீ உட்பட நான்கு இளைஞர்களை ஈவு இரக்கமின்றி கொன்ற நாள்! இவ்வாறு கொல்லப்பட்ட இளைஞர்கள் கல்கத்தா நகர் மருத்துவமனையின் சவக்கிடங்கில் நூற்றுக்கணக்கில் வைக்கப்பட்டிருந்தனர். ப்ரதீயின் பூதவுடலின் நம்பர் 1084. இதனால் ப்ரதீயின் அம்மா “1084இன் அம்மா” ஆகிறார்.

ப்ரதீயின் இரண்டாவது இறந்த நாளும், இருபத்திரெண்டாவது பிறந்த நாளுமான ஜனவரி பதினேழாம் நாள் முழுவதையும் ப்ரதீயின் நினைவுகளைச் சுமந்தவாறே சுஜாதா கழிக்கிறார். இந்த ஒரு நாள் நிகழ்வுகளையும். அவரின் நினைவலைகளையும் மட்டுமே நாவல் காட்சிப்படுத்துகிறது. காலை, நண்பகல், மாலை, முன்னிரவு என்று ஒரு நாட்பொழுதின் நான்கு கால அளவுகளையே நாவலின் நான்கு பகுதிகளின் தலைப்பாக்கி சம்பவங்களை விறுவிறுப்புடன் சொல்லிச் செல்கிறார் நாவலாசிரியர்.

1970களில் மேற்கு வங்காளத்தில் பொதுவுடைமைக் கட்சிகளின் அனைத்துப் பிரிவினர் மீதும் அன்று ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி நரவேட்டை நடத்திக் கொண்டிருந்தது. காங்கிரஸ் அரசின் தாக்குதலைக் கண்டு அஞ்சிடாமல் வங்காள இளைஞர்கள் மாநிலம் முழுவதும் செங்கொடி ஏந்தி பொதுமக்களுக்கு வர்க்கப் பார்வையை ஊட்டிக்கொண்டிருந்தார்கள். ப்ரதீ இடதுசாரி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு தீவிர அரசியலில் ஈடுபடுவதை அவன் தந்தையும், உடன் பிறந்தவர்களும் விரும்பவில்லை. அம்மா சுஜாதா மட்டும் அவனின் இடதுசாரி சித்தாந்தத்துக்கு ஆதரவாக நின்றார். திவ்யநாத் சாட்டர்ஜியின் குடும்பமே இரண்டு கட்சிகளாகப் பிரிந்திருந்தது. ப்ரதீயும் அவன் அம்மாவும் ஓரணியாகவும், மற்றவர்கள் எல்லாம் எதிரணியாகவும் நின்றனர். நாவலின் முடிவில், காலையிலிருந்து மன உளைச்சலில் இருக்கும் சுஜாதாவின் உடல் சோர்வடைகிறது. சமாளித்துக் கொண்டு நிற்க முயற்சிக்கிறார். பார்ட்டியிலிருந்த ஒருவன் தன்னை பத்திரிகையாளன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு சுஜாதாவிடம் “உங்கள் மகன் ப்ரதீ பற்றி ஒரு பேட்டி எடுத்துக்கொள்ளலாமா” என்று கேட்கிறான். சுஜாதாவின் மனது மிகவும் வேதனைப்படுகிறது. தான் மிகவும் சோர்வடைவதை உணரும் சுஜாதா அடுத்த நிமிடம் கீழே சரிந்து விழுகிறது. ”அப்பெண்டிக்ஸ் வெடித்திருக்க வேண்டும்” என்று திவ்யநாத் சொல்வதுடன் நாவல் நிறைவடைகிறது.

அர்ச்சுனன்: பழங்குடி மக்களின் மீதான சுரண்டல்

’அர்ச்சுனன்’ சிறுகதையில் பழங்குடியினர் எவ்வளவு கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாகிறார்கள் என்பதை மகாசுவேதா தேவி சித்தரிக்கிறார். பழங்குடியினர் விலங்குகள் போல், அடிமைகள் போல் நடத்தப்படும் அவலம் நம் மனதைப் பதறச் செய்கிறது. தங்களுக்கு குற்றேவல் புரியவே பழங்குடியினர்கள் பிறந்துள்ளார்கள் என்று மேட்டுக்குடியினர் கருதுகின்றனர். கதையில் மேற்கு வங்கத்தின் புரூலியா வனப்பகுதியில் பிஷால் மகாதேவ், ராம் ஹல்தார் ஆகிய இரு மேட்டுக்குடியினர் நடத்தும் அராஜக அரசியலைப் பார்க்கிறோம். இருவரும் வெவ்வேறு அரசியல் கட்சியினர். ஒருவரையொருவர் மேடையில் திட்டிக்கொள்வார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் கள்ளக் கூட்டு வைத்துக்கொள்வார்கள்.

புரூலியா வனத்துக்குள் இருந்த நிறைய மரங்கள் வெட்டி விற்கப்பட்டுள்ளன. ஊரின் நடுவில் நெடிது வளர்ந்து நிற்கும் அர்ச்சுனன் மரம் பிஷால் மகாதேவ் கண்களை உறுத்துகிறது. சபார் பழங்குடி கேதுவைக் கூப்பிட்டு அந்த மரத்தை வெட்டச் சொல்கிறான். கேது அப்போதுதான் சிறையில் இருந்து வெளிவந்துள்ளான். பிஷால் கூறுவது கேட்டு என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறான். மரத்தை வெட்டுவதற்குத் கொஞ்சம் முன்பணம் பெற்றுக் கொள்கிறான். அவன் ஒருவனால் அந்த வேலையைச் செய்து முடிக்க முடியாது என்பதால் தன்னுடைய கூட்டாளிகளான திகா, பிதாம்பர், பனாமலி மூவரையும் கலந்து ஆலோசிக்கச் செல்கிறான். அவர்கள் நால்வரும் சாராயம் குடித்தவாறு திட்டமிடுகின்றனர்.

அர்ச்சுனன் மரம் பளபளக்கும் பட்டைகளுடன் வானைத் தொடும் உச்சியுடன் பிரம்மாண்டமாக நிற்கிறது. நால்வரும் அந்த மரத்தின் மேன்மைகள் குறித்துப் பேசுகிறார்கள். ஒரு காலத்தில் இம்மரத்தின் அடியில்தான் அவர்கள் குடியிருந்ததை நினைவு கூர்கிறார்கள். சபார் பழங்குடியினரின் கடைசி மௌனக் குறியீடாக அர்ச்சுனம் மரம் இருந்து வருகிறது. அதையும் பலியிடச் சொல்கிறான் பிஷால் மகாதேவ். அடுத்த நாள் அர்ச்சுனன் மரத்தை வெட்டியிருக்கிறார்களா என்று பார்க்க வரும் பிஷால் அதிர்ச்சி அடைகிறான். மரத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான சபார் பழங்குடியினர் கூடியுள்ளனர். மரம் அழகாக அலங்கரிங்கப்பட்டுள்ளது. மேளச் சத்தம் காதைப் பிளக்கிறது. அங்கிருந்தவர்களிடம் விசாரிக்கிறான். ’’திகா கனவில் அந்த மரத்தைக் காக்க வேண்டியது அவர்களின் கடமை என்று சாமி கட்டளை இட்டுள்ளது. எனவே மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பி பாதுகாக்க முடிவெடுத்துள்ளோம்,’’ என்று சொல்கிறார்கள். பிஷாலுக்கு திடீரென அச்சம் தோன்றியது. கதையின் முடிவில் சபார் பழங்குடியினர் விழித்துக் கொள்வதைக் காண்கிறோம். ’’தொடர்ந்த விழிப்புணர்வு மூலமே விடுதலையைப் பெற முடியும்’’ என்பதை அந்தப் பழங்குடியினர் புரிந்து கொள்வது நம்பிக்கையளிக்கிறது.