மருந்து ஆய்வாளர் பணியிடங்களுக்கான தேர்வை ரத்து செய்த மகாராஷ்டிர அரசு!
yesterday

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை குரூப்-பி ‘மருந்து ஆய்வாளர்’ பணியிடங்களுக்கான தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்படுவதாக மகாராஷ்டிர அரசுப் பணித் தேர்வாணையம் (எம்.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை குரூப்-பி ‘மருந்து ஆய்வாளர்’ பணியிடங்களுக்கான தேர்வு, கடந்த மார்ச் 22-ஆம் தேதி நடைபெற்றது. தேர்வு முடிவுகள் ஜூன் 12-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன. இத்தேர்வில் 506 பேர் தேர்ச்சி பெற்று நேர்முக தேர்வுக்கு தகுதி பெற்றனர். இவர்களில், 488 பேர் ஜூலை 1 முதல் 22 வரை நடைபெற்ற நேர்காணல்களில் கலந்துகொண்ட நிலையில், அதில், 485 பேர் தகுதியற்றவர்கள் என எம்.பி.எஸ்.சி அறிவித்தது.

இந்த நிலையில், ஜூலை 22 முதல் 26 வரையிலான காலகட்டத்தில், மின்னஞ்சல் வாயிலாகத் தகுதித் தேர்வு நடத்தப்பட்ட விதம் குறித்த புகார்கள் ஆணையத்திற்கு வந்தன. அதில், முன்கூட்டியே வினாத்தாள் கசிந்ததாகவும், சமூக ஊடகங்கள் மற்றும் பிற மின்னணு வழிமுறைகள் மூலமாகவும் வினாக்கள் தொடர்பான தகவல்கள் பகிரப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இந்த சூழலில், வினாத்தாள் கசிவு காரணமாக மகாராஷ்டிராவில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை குரூப்-பி ‘மருந்து ஆய்வாளர்’ பணியிடங்களுக்கான தேர்வு ரத்து செய்யப்படுவதாக மகாராஷ்டிர அரசுப் பணித் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே தேர்வெழுதிய மாணவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கத் தேவையில்லை. மறுதேர்விற்கான தேர்வுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது; புதிய தேர்வுக்கான தேதி மற்றும் விரிவான கால அட்டவணை ஆகியவை பின்னர் வெளியிடப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.