மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி!
28 Jan 2026, 2:33 pm
<p><strong>மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் விமான விபத்தில் பலி!</strong></p>
<p>சென்னை, ஜன. 28 - தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (அஜித் பவார் பிரிவு) தலைவரும், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வருமான அஜித் பவார் விமான விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார், புனே மாவட்டம், பாரமதியில் நடைபெறவிருந்த பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக புதன்கிழமை காலை, ‘லியர்ஜெட் 45’ என்ற சிறிய ரக விமானத்தில் பயணித்தார். அஜித் பவாருடன் அவரது பாதுகாப்பு அதிகாரி ஒருவர், உதவியாளர் ஒருவர் மற்றும் இரு விமானிகள் பயணித்தனர். மும்பை விமான நிலையத்தில் இருந்து காலை 8.10 மணியளவில் விமானம் புறப்பட்ட நிலையில், காலை 8.45 மணியளவில் திடீரென விமான கட்டுப்பாட்டு அறை உடனான தொடர்பை இழந்த விமானம், அடுத்த 5 நிமிடங்களில் பாரமதி விமான நிலையம் அருகே தரையில் மோதி நொறுங்கியது. விபத்துக்கு உள்ளான விமானத்தி லிருந்து, அஜித் பவாரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று தீவிர சிகிச்சை அளித்தும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையில் அஜித் பவார் உயிரிழந்தார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனர் சரத் பவாரின் சகோதரர் மகனான அஜித் பவார், 1959 ஜூலை 22 அகமது நகர் மாவட்டத்தில் பிறந்த அஜித் பவார், 1991-ஆம் ஆண்டு பாரமதி தொகுதியில் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார். அதன்பின் 9 தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றி பெற்றவர். அவரது மறைவுக்கு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நாட்டின் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஜித் பவாரும், அவரோடு பயணித்தவர்களும் விமான விபத்தில் உயிரிழந்தது மிகுந்த வருத்தமளிக்கிறது. சரத் பவார் மற்றும் சுப்ரியா சுலே ஆகியோருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, அஜித் பவார் பயணித்த விமானம் விபத்துக்கு உள்ளானதற்கான காரணம் குறித்து விசாரணை துவங்கப்பட்டிருப்பதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்து பகுதியில் தடயங்களைச் சேகரித்து, நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. விபத்தில் சதி? மம்தா சந்தேகம்! அஜித் பவாரின் மரணத்தில் சதி இருப்பதாக, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சந்தேகம் எழுப்பியுள்ளார். “இந்த நாட்டில் அரசியல் தலைவர்களுக்கே பாதுகாப்பு இல்லை. அஜித் பவார் பாஜக கூட்டணியில் இருந்து விலகி, சரத் பவாருடன் இணைவது குறித்து பரிசீலித்து வந்தார். ஆனால், இன்று நடந்த சம்பவம் கடுமையான கேள்விகளை எழுப்புகிறது. எனவே, உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ் விசாரணை நடத்தப்பட்டால் மட்டுமே நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கும். உச்ச நீதிமன்றத்தின் மீது மட்டுமே எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மற்ற விசாரணை அமைப்புகள் தங்களின் சுதந்திரத்தை இழந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
