100 நாள் வேலை வழங்காததை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்!
24 Jul 2026, 12:03 am
<p><strong>100 நாள் வேலை வழங்காததை கண்டித்து அரசு பேருந்தை சிறைபிடித்து மறியல்! </strong></p><p>மதுராந்தகம், ஜூலை 23- செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெரும்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்டலம் கிராமத்தில் நடப்பாண்டில் இதுவரை 100 நாள் வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனக் கூறி அப்பகுதி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ள நிலையிலும், தங்கள் பகுதியில் கிராம மக்களுக்கு முறையாக வேலை வழங்கப்படுவதில்லை என்றும், பணித்தளப் பொறுப்பாளர்களை நியமிக்காமல் காலதாமதம் செய்து பணி வழங்குவதைத் தடுத்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், பணித்தளப் பொறுப்பாளர்கள் தங்களுக்கு வேண்டிய குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே பணி வழங்குவதைக் கண்டித்தும், ஊராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும் தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் திரண்டனர். அவர்கள் மதுராந்தகம் - எல்.எண்டத்தூர் செல்லும் சாலையில் சென்ற அரசுப் பேருந்தைச் சிறைபிடித்துச் சாலையில் அமர்ந்து ஆவேசமாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்துத் தகவல் அறிந்த மேல்மருவத்தூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். 100 நாள் வேலை தங்கு தடையின்றி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு அமைதியாகக் கலைந்து சென்றனர்.</p>
