வீதிகள் தோறும் செங்கொடி; வீடு வீடாக தோழர்கள்! மதுராந்தகம் தேர்தல் களத்திலிருந்து - சி.ஸ்ரீராமுலு
28 Sept 2026, 9:12 pm

வீதிகள் தோறும் செங்கொடி; வீடு வீடாக தோழர்கள்! மதுராந்தகம் தேர்தல் களத்திலிருந்து - சி.ஸ்ரீராமுலு

காலையில் கடும் வெயில், மாலையில் திடீர்ப் பெரு மழை, இரவில் பனி — அக்டோபர் நெருங்கும் வேளையில் ஒரே நாளில் மூன்றுபருவங்களைக் காட்டுகிறது மதுராந்தகம். அரசியல் வெப்பமும் அதற்கு இணையாக ஏறியுள்ளது. அக்டோபர் 6அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ள இத்தொகுதியில் பலமுனைப் போட்டி நிலவுகிறது; இடதுசாரிகள் இங்குகளம் காண்கின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராக பி.சுகந்தி, வலுவான போட்டியாளராக சுற்றிச் சுழன்று வாக்காளர் களைச் சந்தித்து வருகிறார்.

வெயிலைத் தவிர்க்க வேட்பாளர்கள் அதிகாலை 7 மணிக்கே வீதி உலாவைத் தொடங்குகின்றனர்; மாலை மழையில் நனைந்தபடியே தொண்டர்கள் முழக்கமிடுகின்றனர்; பனியையும் பொருட்படுத்தாமல் நள்ளிரவு வரை வியூக ஆலோசனைகளும் திண்ணைப் பிரச்சாரமும் தொடர்கின்றன. மழை, பனி நேரங்களில் மக்கள் வீடுகளுக்குள் முடங்குவதால், வாட்ஸ்அப், ஃபேஸ்புக், எக்ஸ்வழியாக வீடியோக்களும் வாக்குறுதிகளும் கைப்பேசி களுக்கே செல்கின்றன. வேட்பாளருடன் ஒரு நாள் முழுவதும் பிரச்சாரத்தில் பங்கேற்று, தொகுதியின் பல பகுதிகளுக்கும் இரண்டு நாட்கள் சென்றபோது,மக்களின் நியாயமான கோரிக்கைகளையும் இடதுசாரிகளிடம் அவர்கள் வைக்கும் எதிர்பார்ப்பையும் நேரில் காண முடிந்தது.

திணிக்கப்பட்ட தேர்தல்

நான்கு மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக சார்பில் வென்ற மரகதம் குமரவேல், சில வாரங்களிலேயே பதவி விலகித் தவெகவில் இணைந் தார்; இப்போது அதே தொகுதியில் தவெக வேட்பாளராக நிற்கிறார். மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல் இது என்பதே இடதுசாரி களின் முதன்மை வாதம். “புதிய அரசிடம்அடிப்படை மாற்றத்தை மக்கள் எதிர்பார்த்த னர்; அது நிகழவில்லை; மக்கள் பணம் வீணாகி மீண்டும் ஒருதேர்தல்” என்கிறார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான எஸ். கண்ணன். “இது இடதுசாரிகளின் கூட்டு முடிவு. மக்களின் வாழ்வாதாரப்பிரச்சனைகளுக்கான குரல் சட்டமன்றத் தில் ஒலிக்க வேண்டும்; இடதுசாரி எம்எல்ஏக் களின் எண்ணிக்கை உயரவேண்டும் என்பதற்காகவே போட்டியிடுகிறோம்” என்றும் அவர் கூறுகிறார்.அதிமுகவும் திமுகவும் மாறி மாறி வென்ற தொகுதி இது; ஒருமுறை திமுக கூட்டணியில் காங்கிரசும் வென்றது.ஆனாலும் தொகுதி இன்றும் முன்னேறவில்லை என்பது மக்களின் ஆதங்கம் என்கிறார் கண்ணன். கட்டடங்கள்கட்டித் தருவதும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் மட்டுமே எம்எல்ஏவின் பணி அல்ல; அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுப்பதே முக்கியம் என்கிறார் அவர்.

மதுராந்தகம் நீண்ட போராட்டப் பாரம்பரி யம் கொண்ட தொகுதி என்பதையும் அவர் நினைவூட்டுகிறார். விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள், படாளம் ஆலைத் தொழிலாளர்கள், சுமை தூக்குவோர், ஆட்டோ தொழிலாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரப் போராட்டங்களில் மார்க்சிஸ்ட் கட்சி எப்போதும்துணை நின்றுள்ளது; வாலிபர் சங்கம், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மாற்றுத்திறனாளிகள் சங்கம்ஆகியவை மதுராந்தகம் நகரிலும் ஏராளமான போராட்டங்களை நடத்தியுள்ளன. சுமை தூக்குவோர், ஆட்டோ தொழிலாளர் சங்கங்களுக்கு நிர்வாக, சட்ட ரீதியாகப் பலவெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இந்தப் போராட்டங்களின் அடிப்படையிலேயே வேட்பாளர் சுகந்தியைக் களம் இறக்கியுள்ளோம் என்கிறார் எஸ்.கண்ணன்.

மக்கள் சுமக்கும் கேள்விகள்

‘குட்டி சென்னை’ என அழைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்டத்தின் ஏழு தொகுதிகளில் ஒன்றான மதுராந்தகம், காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது; வடகிழக்கில் செங்கல்பட்டு, மேற்கில்உத்திரமேரூர், தெற்கில் செய்யூர், விழுப்புரம்மாவட்ட எல்லை என அமைந்துள்ளது. சென்னை–திருச்சி நெடுஞ்சாலையில் உள்ளஇத்தனித் தொகுதி, நகர்மயமாக்கலின் வேகத்தையும் விவசாயத்தின் வேரையும் ஒருங்கே சுமக்கிறது.

நிலத்தையே நம்பி வாழும் பாரம்பரிய முறையை இன்றும் பின்பற்றும் மக்கள் இங்கு அதிகம்; மதுராந்தகம் ஏரியே இத்தொகுதியின் அடையாளமும் விவசாய உயிர்நாடியும்ஆகும். பாரம்பரிய விவசாய அடையாளத்திற்கும் நவீன வேலைவாய்ப்புத் தேவைக்கும் இடையிலான இந்தஇழுபறியே மதுராந்தகத்தின் அரசியலை வடிவமைக்கிறது. மதுராந்தகம் நகராட்சி, கருங்குழி, அச்சரப்பாக்கம் பேரூராட்சிகளுடன் மதுராந்தகம் (58), அச்சரப்பாக்கம் (59) ஒன்றிய ஊராட்சிகளும் இதில் அடங்கும். பெரிய தொழிற்சாலைகள் இல்லாததால் வேலை தேடி இளைஞர்கள்சென்னைக்கு நகர்கின்றனர்.

சிறப்பு தீவிர திருத்தத்திற்கு (SIR) முன் 2,37,604 ஆக இருந்த வாக்காளர்கள், 26,309 பெயர்கள் நீக்கப்பட்ட பின் 2,11,295 பேராக உள்ளனர்; ஆண்களை விடப் பெண் வாக்காளர்களே அதிகம்.ஏரிகள் சீரமைப்பு, பாசனக் கால்வாய், குடிநீர், போக்குவரத்து, மருத்துவம் ஆகியவைநீண்டகாலக் கோரிக்கைகள். அவசரசிகிச்சைக்குத் தொலைதூர மருத்துவமனை யை நாட வேண்டியுள்ளது; செய்யூர், சூனாம்பேடு, அச்சரப்பாக்கம் பகுதி நோயாளிகள் செங்கல்பட்டுக்கும் சென்னைக்கும் அனுப்பப்படுகின்றனர். போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவர்களும் ஊழியர்களும் அவதிப்படுகின்றனர்.மதுராந்தகத்திற்கு இதுவரை ஓர் அரசு கல்லூரி கூட இல்லை. பெருங்கருணை கிராமத்தில் 500க்கும் மேற்பட்டகுடும்பங்கள் முறையான மயானவசதி கோரி 18 ஆண்டுகளாக மனு அளித்துவருகின்றன; சின்ன வெண்மணி, தாதங்குப்பம் உள்ளிட்ட ஊர்களில் சுடுகாடு இருந்தும் செல்ல வழியில்லை.

இயற்கை வளமும் உண்டு. வேடந்தாங் கல் சரணாலயத்தில் தற்போது 25க்கும் மேற்பட்ட வகைகளில் 30ஆயிரத்திற்கும் அதிகமான பறவைகள் தங்கியுள்ளன; அவற்றுக்காகச் சுற்றுவட்டாரக் கிராமங்கள் பலஆண்டுகளாகத் தீபாவளியில் பட்டாசு வெடிப்பதில்லை. உலகப் புகழ்பெற்ற இத்தலம்இன்னும் முழுமையாகப் பயன்படுத்தப்பட வில்லை என்பது அப்பகுதி மக்களின் குறை.

படாளம் சர்க்கரை ஆலை: 30 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வு

தமிழகத்தின் பழமையான ஆலைகளில் ஒன்றான படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒரு காலத்தில் ஆண்டுக்கு 6 லட்சம் டன் வரை கரும்பு அரைத்தது. 2001இல் மூடப்பட்டு 2010இல் மீண்டும் திறக்கப்பட்ட பின்பும் அரவை ஆண்டுதோறும் சரிந்துள்ளது. 1000 முதல் 1,500 நிரந்தரத் தொழிலாளர்கள் இருந்த ஆலையில் இன்று300க்கும் மேற்பட்டோர் மட்டும்; அதுவும் தினக்கூலியில் பணியாற்றுகின்றனர் என்கிறார் ஆலைத் தொழிற்சங்கத்தலைவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளருமான ஜி. மோகனன். கரும்பு வரத்து குறைந்ததால் இந்த ஆண்டு அரவை தொடங்குமா என்ற சந்தேகமும் உள்ளது. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களின் வாழ்வாதாரம் இதைச் சார்ந்தது.

ஆலையில் எந்தப் பகுதியும் பழுது பார்க்கப்படவில்லை என்றும், முந்தைய அரசுகளும் இன்றைய அரசும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும்குற்றம்சாட்டும் மோகனன், ஆலையைக் காக்கத் தொடர்ந்து போராடுவது சிஐடியு, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள்சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி ஆகியவையே என்கிறார். சிறு, குறு நிறுவனங்களே நிறைந்த இத்தொகுதியில் அவை நலிவடைந்திருப்பது தொழிலாளர் குடும்பங்களையும் கடுமையாகப் பாதித்துள்ளது. ஆலையை மீட்பது மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்தியின் முக்கிய வாக்குறுதிகளில் ஒன்றாகவும் இடம்பெற்றுள்ளது.

போராட்டங்கள் விட்டுச்சென்ற தடம்

மார்க்சிஸ்ட் கட்சியின் 40 ஆண்டுக்கால போராட்டங்களை ஒன்றுபட்ட செங்கல்பட்டு–காஞ்சிபுரம் மாவட்டமுன்னாள் செயலாளர், வழக்கறிஞர் டி. கிருஷ்ணராஜ் நினைவுகூர்கிறார்: “1975 வரை செய்யூர்–மதுராந்தகம் தாலுகாக்களுக்கு ஒரே ஒரு கிளைதான் இருந்தது; அவசரநிலைக்குப் பின் கட்சியும் விவசாயிகள் இயக்கமும்வலுப்பெற்றன.

100 ஆண்டுகளாகத் தீராதிருந்த ஜமீன் எண்டத்தூர் ஏரி தடுப்பணைப் பிரச்சினையில், மூன்று கிராமங்களின் நிலங்கள் நீரில் மூழ்கின. 1978இல் விவசாயிகள் சங்கமும் கட்சியும் தலையிட்டன; உண்ணாவிரதம் முதல் சிறைநிரப்பும் மறியல் வரை நடந்தது. மாநிலங்களவையில் தோழர் ஏ. நல்லசிவன் கேள்வி எழுப்பி, அது சட்டவிரோதம்என்ற பதிலையும் பெற்றார்; 1980 ஜனவரியில் மக்களே அத்தடுப்பணையை உடைத்தனர். படாளம் ஆலையைத்தனியாருக்கு விற்க முடிவெடுக்கப்பட்டபோது, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் உயர்நீதிமன்றத்தைஅணுகியது; அதன்பின் ஆலை பொதுத்துறையிலேயே தொடர்ந்து மீண்டும் திறக்கப்பட்டது. நீண்டகாலம் தூர்வாரப்படாத மதுராந்தகம் ஏரியைச் சீரமைக்க, சிஐடியுவுடன் இணைந்து நடத்திய பிரச்சாரம், மறியலுக்குப்பின் அரசு ரூ.135 கோடி ஒதுக்கியது; தூர்வாருவதற்கு ரூ.35 கோடியும் வழங்கப்பட்டது.

பெரும்பாக்கத்தில் 250 ஏக்கருக்கும் மேற்பட்ட மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் பயிரிட்டவர்களை வெளியேற்றும் முயற்சி மறியலால் தடுக்கப்பட்டது. சூனாம்பேடு பகுதியில் ஜமீன்தார் வரி வசூல் நிறுத்தப்பட்டது; வில்லிப்பாக்கத்தில் வீட்டுமனைகளும், மதுராந்தகம் நகரில்காட்டுநாயக்கன் சமூக மக்களுக்குப் பட்டாவும் பெற்றுத் தரப்பட்டன. செய்யூர் வட்டத்தில் சட்டக் கூலிக்கானபோராட்டங்கள் வெற்றி பெற்றன. இவற்றின் விளைவாக முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் இயக்கமும் நகர்ப்புறங்களில் சிஐடியு சங்கமும் வேரூன்றின. இத்தகைய பெருமிதத்தோடு “இடைத்தேர்தலில் இக்கொள்கைப் போராட்டத்தை நாங்கள் மனச்சாட்சியோடுசந்திக்கிறோம்” என்கிறார் கிருஷ்ணராஜ்.

கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளர் இ. சங்கர் இன்றைய நிலையைச் சுட்டுகிறார்: நெல்லுக்கு உரிய விலை கிடைப்பதில்லை; கொள்முதல் நிலையங்கள் போதவில்லை; பணமும் உரிய காலத்தில் வருவதில்லை. கட்சிப் போராட்டத்தால் 900க்கும் மேற்பட்டோருக்குப் பட்டா கிடைத்தும் பதிவேட்டில் ஏறாமல் அதிகாரிகள் தாமதிக்கின்றனர். மேய்க்கால் புறம்போக்கில் வசிப்போர் பலருக்கு மின் இணைப்பு இல்லை. தச்சூரில்2006 கலவரத்திற்குப் பின் பூட்டப்பட்ட தேவாலயம் தொடர்பான தலித் கிறிஸ்தவர்களின் உரிமைப் போராட்டமும் தொடர்கிறது. இந்தஉழைப்பும் மக்களின் மாறிவரும் மனநிலையும் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் சுகந்திக் காண வாக்குகளாக மாறும் என்று நம்புவதாக அவர் கூறுகிறார்.

நூறு நாள் வேலைத் திட்டத்தையே நம்பியுள்ள பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஆண்டுக்கு 30–40 நாட்களே வேலைகிடைக்கிறது என்றும்போராடிப் பாக்கித் தொகை பெற்றுக்கொ டுத்தது கட்சிக்கு ஆதரவைப் பெருக்கியுள்ளது என்றும் பெருமிதத்துடன்சங்கர் குறிப்பிடு கிறார்.

ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு குழு

மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு. பாரதி அண்ணா, தேர்தல் களத்தில்இடதுசாரிக் கட்சிகளின் பிரச்சாரம் பற்றி விளக்குகிறார். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்றசெயல்வீரர்கள் கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர். தொகுதி 16 மையங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு ஊராட்சிக்கும் துணைப் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தினசரி வீடு வீடாகச் சென்று ஒவ்வொரு வாக்காளரை யும் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கைப்பட எழுதிவாங்குகின்றனர். இருளர் பழங்குடி மக்களுக்கு முதன்முறையாக ஒரு குழு; இஸ்லாமியர், தலித் மற்றும் தலித்கிறிஸ்தவர், மாற்றுத் திறனாளிகளுக்குத் தனித்தனி குழுக்கள்; சுமை தூக்கும், ஆட்டோ, கட்டுமானம் போன்றஅமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான குழு; கலைக் குழுக்கள் — இவை அனைத்தும் இயங்குகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இங்கு முதன்முறையாகப் போட்டியிடுவதால் மக்களிடையே ஆர்வம்தெரிகிறது; கட்சி வேறுபாடின்றி இம்முறை இடதுசாரிகளுக்கு வாக்களிக்கலாமா என மக்கள் யோசிக்கத்தொடங்கியுள்ளனர் என்பது அவரது கள அனுபவம்.

நாற்பது ஆண்டு அனுபவத்துடன் வேட்பாளர்

கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பா.சுகந்தி, அறிவொளி இயக்கம், மாதர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி என

நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள்பிரச்சினைகளுக்காகப் போராடிய அனுபவத்தையே தன் மூலதனமாக முன்வைக்கிறார். தினமும் காலை 6.30 முதல் இரவு 9.45 வரை, எம்எல்ஏக்களோ ஆளுங்கட்சியோ சென்றிராத குக்கிராமங்கள், இருளர் மக்கள்குடியிருப்புகள், முரட்டுப் பாதைகள் என பல கிலோமீட்டர் பயணிக்கிறார். வயல்வெளி களிலும் குளம், ஏரிக்கரைகளிலும் உழைக்கும் பெண்களிடம் நேரில் சென்று கோரிக்கைகளைக் கேட்கிறார். ஏழை மக்களும் கூலித் தொழிலாளர்களும் மாற்றுத்திறனாளிகளும் ஆரத்தி எடுத்தும் ஆடியும் வரவேற்கும் அதேநேரம், தங்கள் துன்பங்களையும் அவரிடம் மனம்விட்டுப் பகிர்கின்றனர்.

நூறு நாள் வேலை பெரும்பாலான கிராமங்களில் 40–60 நாட்களே கிடைக்கிறது; சட்டப்படி ரூ.345 தர வேண்டிய கூலி ரூ.200–

250 ஆகவே வழங்கப்படுகிறது. கிராமங்களில் ஒரு குடம் தண்ணீருக்கு 10 ரூபாய் தர வேண்டியுள்ளது; சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. கல்விக்காகப்பல கிலோமீட்டர் செல்ல வேண்டிய நிலையில், போக்குவரத்தும் விடுதி வசதியும் இல்லாமல் பெண் குழந்தைகள்படும் துன்பம் சொல்லி மாளாது. பழங்குடிப் பகுதிகளில் குடிநீர், சாலை, மின்சாரம், தெருவிளக்கு என எதுவும்இல்லாத தீவு வாழ்க்கை; ரத்தசோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, குழந்தைத் திருமணம் அதிகரித்து வருவதையும்காண முடிந்தது என்கிறார். சில மாதங்களுக்கு முன் தவெகவுக்கு வாக்களித்த இளைஞர்கள் பலரும், தற்போதைய தவெக வேட்பாளர், அதிமுகவில் நின்று வென்று சில வாரங்களில் கட்சி மாறியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிடு கிறார்.சுகந்தி முன்வைக்கும் வாக்குறுதிகள்: மதுராந்தகத்திற்கு அரசுக் கல்லூரி — இந்திய மாணவர் சங்கத்துடன்இணைந்த நீண்டகாலப் போராட்டம்; தூர்வாரப்பட்ட மதுராந்தகம் ஏரி நீரின் நியாயமான பங்கீடு; படாளம் ஆலைக்கு அதிகக் கரும்பு, அரவைத் திறன் உயர்வு, நவீன இயந்திரங்கள்; வேடந்தாங்கல்மேம்பாடு; மயானப் பாதை ஆக்கிரமிப்பு அகற்றல், நவீன எரிவாயு தகன மேடை. வெற்றி என்பது பதவியல்ல,மக்களின் குரலைசட்டமன்றத்திற்குள் எடுத்துச் செல்லும் வாய்ப்பு” என்பது அவரது அணுகுமுறை.

ஆளுங்கட்சி வேட்பாளர் எதிர்கொள்ளும் கேள்விகள்வாக்களித்த மக்களிடம் மீண்டும் வாக்குக் கேட்டுச் செல்லும் மரகதம் குமரவேல், சில இடங்களில் கேள்விகளையும்அதிருப்தியையும் எதிர்கொள்வதாகக் கள வட்டாரங்கள்கூறுகின்றன. நூறு நாள் வேலை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை, முதியோர் உதவித்தொகை கிடைக்கவில்லை, குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள் நிறைவேறவில்லை என்று கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்; சில ஊர்களில் “ஊருக்குள் வர வேண்டாம்” என்ற முழக்கங்களும் எழுந்துள்ளன. அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் முன்பும் இத்தொகுதியின் எம்எல்ஏவாக இருந்தவர்; திமுக ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தொகுதி புறக்கணிக்க ப்பட்டது என்ற ஆதங்கம் திமுக வேட்பாளரான வழக்கறிஞர் பரந்தாமனுக்கு எதிராக மக்களிடம் உண்டு என்றும் கூறப்படுகிறது. இவை அனைத்தையும் இடதுசாரிகளுக்குச் சாதகமான வாக்குகளாக மாற்றுவோம் என்று களத்தில் நிற்கும் தோழர்கள் உறுதி யுடன் பணியாற்றுகின்றனர்.

களத்தில் இடதுசாரி அணிகள்

வேட்பாளரின் திறந்த வேனுக்கு முன்னும் பின்னும் செங்கொடியுடன் இருசக்கர வாகனங்களில் தொண்டர்கள் அணிவகுக்கின்ற னர்; பறையும் பாட்டுமாகக் கலைக்குழுக்கள் கிராமம் கிராமமாய் ஒலிக்கின்றன; வீடுவீடாகத்திண்ணையில் அமர்ந்து குறை கேட்கின்ற னர். ஒலிபெருக்கியின் இரைச்சலைவிட, “நம் பிரச்சினைகளைப் பேச ஒருவர் வந்திருக்கிறார்” என்ற உணர்வை விதைக்கும் இந்த நேரடி உரையாடலுக்கே மக்களிடையேமதிப்பு அதிகம். வயல் வரப்புகளில் விவசாயிகளையும், ஆலை வாயில்களில்தொழிலாளர்களையும், கல்லூரி வாசல்களில் மாணவர்களையும், பழங்குடி, பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர் குடியிருப்புகளையும் தேடிச் சென்று, அவர்களின் கோரிக்கை களைச் செவிமடுக்கின்றனர். மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் கே. பாலகிருஷ்ணன், உ. வாசுகி, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், மூத்த தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.பாலபாரதி, மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், எம்எல்ஏ டி. லதா; இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், எம்எல்ஏ கே.மாரிமுத்து, மக்களவை உறுப்பினர் செல்வராஜ்; சிபிஐ(எம்எல்) லிபரேஷன் மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் பல்வேறுபகுதிகளில் வாக்குச் சேகரிக்கின்றனர்.

இது எளிய களம் அல்ல. மூன்று பெரிய கட்சிகளும் வளங்களுடன் களத்தில் நிற்கின்றன; அதிமுக, திமுக வேட்பாளர்களும் தங்களுக்கான ஆதரவுத் தளத்துடன் போட்டி யிடுகின்றனர். இடதுசாரிகளுக்குப் பணபலம் இல்லை; தோழர்களில் பெரும்பாலோர் தங்கள் சொந்தப் பணத்தைச் செலவழித்தே பிரச்சாரம் செய்கின்றனர். தங்கும் விடுதி கிடைக்காத நிலையில் கட்சி மீது மதிப்புள்ள மக்களின் வீடுகளிலும் தோழர்களின் வீடுகளிலும் தங்கிப் பணியாற்றுகின்றனர்.

தீர்ப்பின் முன் ஒரு நம்பிக்கை

பெருங்கருணை மயானப் பாதையிலி ருந்து படாளம் ஆலை வரை, தேங்கிக் கிடக்கும் அன்றாடக் கேள்விகளுக்கு முன், மாற்றுக் கொள்கையோடும் நீண்டகாலப் போராட்ட அனுபவத்தோடும் இடதுசாரிகள் மக்களிடம் செல்கின்றனர். இந்த நம்பிக்கை வாக்குகளாக எந்த அளவுக்கு மாறும் என்பதை அக்டோபர் 6 தீர்மானிக்கும். ஆனால் வெயிலையும் மழையையும் பனியையும் தாண்டி, வாசல் வாசலாகச் சென்று மக்களின் குறைகளைக் கேட்டு எழுதிக்கொள்ளும் ஒவ்வொரு தோழரின் உழைப்பும், எஞ்சிய நாட்களில் ஒவ்வொரு வீட்டையும் மீண்டும் ஒருமுறை தொடும் உறுதியும்தான் இக்களத்தின் உண்மையான பலம்.