மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளின் ஆலோசனையும், இடதுசாரிகளின் பதிலும் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு
yesterday

மதுராந்தகம் – தாராபுரம் இடைத்தேர்தல் ‘நடுநிலை’ அறிவுஜீவிகளின் ஆலோசனையும், இடதுசாரிகளின் பதிலும் - எஸ்.ஜி.ரமேஷ்பாபு

2026 செப்டம்பர் 13 அன்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் சிபிஐ (எம்எல்) கட்சியும் இணைந்து, மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்களில் போட்டியிடுவதாக அறிவித்தன. உடனடியாக சமூக ஊடகங்களில் ஜனநாயக, முற்போக்கு, இடதுசாரித் தோழர்கள் உற்சாகத்துடன் இம்முடிவுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தங்களை “நடுநிலையாளர்களாகக்” காட்டிக்கொள்ளும் சமூக ஊடகக் கையாட்கள் பலரும் இதற்கு எதிராகக் களமிறங்கினர் — பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்களாக இருந்தாலும், கம்யூனிஸ்ட்டுகள் மீது அக்கறை உள்ளதுபோல பாவனை செய்து பொதுவாக ஆலோசனை வழங்குபவர்கள் இவர்கள். ஒரு வேளை இடதுசாரிகள் வேறு நிலைப்பாடு எடுத்தால், “கம்யூனிஸ்ட்டுகள் நல்லவர்கள்தான், ஆனால் இந்த முடிவு தற்கொலை முடிவு” என எழுதுவார்கள்.

நடுநிலையாளர்களின் ‘இலவச ஆலோசனைகள்’

இவர்களின் முக்கியக் கருத்துகள்: இடதுசாரிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களோ, வைப்புத்தொகை மீட்கும் வாக்குகளோ இல்லை; இடைத்தேர்தலில் வெல்ல போதுமான மக்கள் செல்வாக்கோ பணபலமோ இல்லை; ஆகவே நேரம், உழைப்பு, பணத்தை வீணடிக்காமல் தேர்தலைப் புறக்கணிக்கலாம்; தனித்துப் போட்டியிடுவது ஆளும் கட்சியின் குதிரை பேரத்தால் திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தலை மக்களிடம் சுட்டிக்காட்டத்தானே, ஆனால் அதே ஆளும் கட்சிக்கு ஆதரவும் தொடர்ந்து அளிக்கும்போது அதை எப்படிச் சொல்வீர்கள்; மூன்று பெரிய கட்சிகளும் எழுப்பும் ஆரவாரத்திற்கு முன் இடதுசாரிகளின் பிரச்சாரம் கவனம் பெறாது; தமிழகம் முழுவதும் தோழர்களைத் திரட்டி பெரும் பிரச்சார இயக்கமாக மாற்றும் நோக்கமும் இல்லை என்பன.

இவை சரியான ஆலோசனைகளா?

நாடாளுமன்ற ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்ட ஓர் அரசியல் இயக்கம், வாக்குகள் கிடைக்குமா, தோற்றால் என்ன செய்வது, ஆளும் கட்சி வருத்தப்படுமோ என்றெல்லாம் கணக்கிட்டு தேர்தலைச் சந்திக்காமல் ஓடி ஒளிவது நேர்மையான அரசியல் செயல்பாடு அல்ல; அந்த அறமற்ற செயலை இடதுசாரிகள் ஒருபோதும் செய்யமாட்டார்கள். இடதுசாரிகளின் பலம் குறித்துக் கேள்வி எழுப்புவோர், கடந்த தேர்தலில் திருப்பத்தூரில் 1 வாக்கில் திமுக தோல்வி, வேப்பனஹள்ளியில் 138 வாக்குகளில் திமுக வெற்றி, கன்னியாகுமரியில் 214 வாக்குகளில் திமுக தோல்வி, போளூரில் 227 வாக்குகளில் தவெக வெற்றி, திருக்கோவிலூரில் 285 வாக்குகளில் தவெக தோல்வி என்ற குறுகிய வாக்கு வித்தியாசங்களை நினைவில் கொள்வது நலம் — இடைத் தேர்தல்களில் சில நூறு வாக்குகள் கூட முடிவை மாற்றுகின்றன, “பணபலம் இல்லை” என்பது மட்டும் தோல்விக்கான காரணமாகாது.

மூன்று பெரிய கட்சிகளும் எழுப்பும் ஆரவாரத்திற்கு முன் இடதுசாரிகளின் எளிய பிரச்சாரம் மக்கள் கவனத்தைத் திருப்பும் என்ற நம்பிக்கையிலேயே இடதுசாரிகள் களம் இறங்குகின்றனர்; இத்தேர்தல்களைப் பெரும் பிரச்சார இயக்கமாக மாற்றும் நோக்கமும் அதன் பின்னணியில் உள்ளது.

இடதுசாரிகள், தவெக அரசுக்கு அளித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறப் போவதில்லை; அதே நேரம் இடைத்தேர்தலில் அக்கட்சியை எதிர்த்து நிற்கவும் போகின்றனர் — இதில் முரணேதுமில்லை. அந்த ஆதரவு எந்த அடிப்படையில் அளிக்கப்பட்டது என்பதை இடதுசாரிகள் பலமுறை விளக்கிய பின்னும், “ஆதரவை ஏன் வாபஸ் வாங்கவில்லை” எனச் சிறு பிள்ளைத்தனமாகக் கேள்வி எழுப்புவது அரசியல் புரிதலின்மையே.

மூன்று கட்சிகளையும் ஏன் புறக்கணிக்க வேண்டும்!

அதிமுகவில் நின்று வென்று மக்கள் அளித்த தீர்ப்பை உதாசீனம் செய்து, ஆளும் கட்சியில் இருந்தால் அனுகூலம் கிடைக்கும் என்ற ஆவலில் பதவி துறந்து மீண்டும் தவெக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும், அவர்களைக் கூச்சமின்றி நிறுத்தும் ஆளும் கட்சிக்கும் மக்கள் வாக்களிக்கக் கூடாது. அதிமுக வேட்பாளர் வென்றாலும் அவர் அக்கட்சியில் தொடர்ந்து இருப்பாரா என்பதே சந்தேகம்; பல அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எப்போது தவெகவுக்குத் தாவுவார்கள் எனப் பலரும் கூறி வருகின்றனர். திமுக வேட்பாளர்கள் வென்றாலும், மக்கள் பிரச்சனைகளை அவர்கள் சட்டமன்றத்தில் முழுமையாக எழுப்பப் போவதில்லை என்பதைக் கடந்தகால அனுபவம் காட்டுகிறது; தனியார் பல்கலைக்கழக மசோதாவை இடதுசாரிகளும் பிற கட்சிகளும் எதிர்த்தபோது திமுக கமுக்கமாக இருந்ததே இதற்குச் சான்று.

இத்தகைய நிலையில், இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரிகள் வென்றால் அது மக்களுக்குக் கிடைக்கும் புதிய நம்பிக்கை. எனவே, உண்மையிலேயே நடுநிலையானவர்கள் இரண்டு தொகுதிகளிலும் இடதுசாரிகளுக்கு ஆதரவாகப் பணியாற்ற வேண்டும்.

லஷ்மணசாமி ரங்கசாமி என்பார் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்: “இடதுசாரிகள் தனித்துப் போட்டியிடுகிறார்கள் எனச் செய்தி முதலில் கேட்டபோது நம்பவில்லை; உறுதியானதும் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. பெறும் வாக்குகள் எத்தனை என்பது முக்கியமல்ல; கொள்கை சார்ந்த அரசியலை மக்களிடம் கொண்டு சேர்ப்பதும், மாற்று அரசியல் சக்தியாகத் தங்களை நிலைநிறுத்திக் கொள்வதும் மிக முக்கியமான வரலாற்றுத் தேவை. இந்தத் துணிச்சலான முன்னெடுப்பு தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் விவாதத்திற்கும், மாற்றுச் சிந்தனை வெளிக்கும் இம்மியளவேனும் பங்களிக்கும். ஒரு பரிசோதனையைத் தொடங்கச் சரியான நேரமும் களமும் இதுவாகவே இருக்க முடியும். வாழ்த்துக்கள்.”