சிறுவனின் கண்ணில் சிக்கிய ஸ்பிரிங்கை அகற்றி அரசு மருத்துவர்கள் சாதனை!
11 May 2026, 7:17 pm

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கண் மருத்துவர்கள் மேற்கொண்ட இரண்டு சிக்கலான அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு, நோயாளிகள் கடுமையான மற்றும் நிரந்தர பாதிப்புகளில் இருந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இந்த அறுவை சிகிச்சைகள் குறித்து மருத்துவமனை முதல்வர் பேராசிரியர் டாக்டர் அருள் புகழ் சுந்தரேஸ்வரன், மயக்கவியல் துறை தலைவர் பேராசிரியர் டாக்டர் கவிதா மற்றும் மருத்துவர்கள் செய்தியாளர்களிடம் விளக்கமளித்தனர்.

சிறுவனின் கண்ணில் சிக்கிய ஸ்பிரிங் அகற்றம்

முதல் சம்பவத்தில், 10 வயது சிறுவன் ஒருவன் வீட்டில் விளையாடிக்கொண்டிருந்தபோது, பிளேஸ்டேஷன் ரிமோட்டில் இருந்த ஆண்டெனா ஸ்பிரிங் போன்ற வயர் தவறுதலாக வலது கண்ணின் கீழ் இமையில் குத்தியது. ஆரம்பத்தில் காயம் சாதாரணமாகத் தோன்றினாலும், அந்த ஸ்பிரிங் உள்நோக்கி சென்று கண் பகுதியில் ஆழமாக சிக்கியிருந்தது.

குடும்பத்தினர் அதை தாங்களாகவே அகற்ற முயன்றதால், அந்த வயர் மேலும் உள்ளே சென்று நிலைமை சிக்கலானதாக மாறியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பல மருத்துவமனைகளில் சிகிச்சை தேடிய பின்னர், சிறுவன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டான்.

சிறப்பு கண் மருத்துவக் குழுவினர் உடனடியாக பொதுமயக்க மருந்து அளித்து, மைக்ரோஸ்கோப் உதவியுடன் சுமார் 20 நிமிடங்கள் நீடித்த நுணுக்கமான அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். இதில் கண்ணிற்கோ பார்வைக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாமல் அந்த ஸ்பிரிங் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. தற்போது சிறுவன் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மூளை வரை சென்ற குச்சியை அகற்றிய மருத்துவர்கள்

இரண்டாவது சம்பவத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 50 வயது நபர் ஒருவர் சாலை விபத்தில் காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். வெளிப்படையாகப் பார்க்கும்போது சிறிய காயம் போல இருந்த நிலையில், சிடி ஸ்கேன் பரிசோதனையில் சுமார் 6.7 சென்டிமீட்டர் நீளமுள்ள மரக்குச்சி போன்ற அந்நியப் பொருள் இடது கண் வழியாக மண்டையோட்டுக்குள் சென்று, மூளையின் டெம்போரல் லோப் பகுதி வரை சென்றிருந்தது கண்டறியப்பட்டது.

மேலும், விபத்தில் கண் கீழ்பகுதி எலும்பிலும் முறிவு ஏற்பட்டிருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கண் மருத்துவர்கள், நியூரோ சர்ஜன் டாக்டர் ஜெயப்பிரகாஷ், மயக்கவியல் நிபுணர்கள் உள்ளிட்ட குழுவினர் இணைந்து மிகுந்த கவனத்துடன் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். ஆர்பிட்டல் தளம் மற்றும் சைனஸ் பகுதியை ஆய்வு செய்து, குச்சியை உடையாமல் முழுமையாக வெளியே எடுத்தனர்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு நோயாளி உயிர் ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட்டதுடன், மூளைக்கும் பெரிய பாதிப்பு ஏற்படாமல் தடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பார்வையில் சிறிய குறைபாடு இருந்தாலும், உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக கூறப்பட்டது.

திங்களன்று அரசு ராஜாஜி மருத்துவமனையில் இலவச கருவிழி மாற்று சிகிச்சை குறித்து செய்தியாளர் சந்திப்பில் மருத்துவர்கள் மேலும் கூறுகையில், கண் காயங்களால் கார்னியா பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் தரமான கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன என்றனர்.

தனியார் மருத்துவமனைகளில் இதே சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை செலவாகும் நிலையில், அரசு மருத்துவமனையில் நவீன வசதிகளுடன் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

மேலும், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயல்பட்டு வரும் கண் வங்கி மூலம், இறந்தவர்களிடமிருந்து ஆறு மணி நேரத்திற்குள் கருவிழிகள் பெறப்பட்டு, பலருக்கு பார்வை வழங்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறினர்.

இந்த இரண்டு சிக்கலான அறுவை சிகிச்சைகளும் கண் மருத்துவர்கள், நியூரோ சர்ஜன், மயக்கவியல் துறை மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.