மதுரையில் பட்டியலின இளைஞர் படுகொலை: குற்றவாளியை கைது செய்யக்கோரி போராட்டம்!
20 Jun 2026, 4:50 pm

மதுரையில் பட்டியலின இளைஞர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியை கைது செய்யக்கோரி தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை அவனியாபுரம் எம்.எம்.சி. காலனியைச் சேர்ந்த பாலாஜி (34) படுகொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக உள்ள முதல் குற்றவாளி முனீஸை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய பாதுகாப்பு மற்றும் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மற்றும் ஆதித்தமிழர் பேரவையினர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடைபெற்றது.

ஆதித்தமிழர் பேரவை கலை இலக்கிய அணியின் மாநிலச் செயலாளர் செல்வத்தின் உடன்பிறந்த அண்ணன் மகனான பாலாஜி, கடந்த 19-ஆம் தேதி ஆறு பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், முக்கிய குற்றவாளியான முனீஸ் தலைமறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, தமிழக அரசும் காவல்துறையும் தனிப்படை அமைத்து முதல் குற்றவாளியை விரைந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய காவல் பாதுகாப்பு மற்றும் எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் நிவாரணம் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் ம. பாலசுப்பிரமணியன், மாவட்டச் செயலாளர் மாரிகனி, புறநகர் மாவட்டத் தலைவர் கண்ணன், மாவட்ட பொருளாளர் மகாலிங்கம், துணைச் செயலாளர் ஆஞ்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவனியாபுரம் பகுதி செயலாளர் சேதுராமு, ஜெகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.) தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தலைமறைவாக உள்ள முதல் குற்றவாளி முனீஸை கைது செய்யும் வரை பாலாஜியின் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதனால், முக்கிய குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.